நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்?!
26 Jan,2019
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா – பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
செளந்தர்யாவை மணக்கவிருக்கும் விசாகன் யார்?!
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா – பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள், சௌந்தர்யா. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படமான `கோச்சடையான்’ படத்தை இயக்கியவர்.
சமீபத்தில் தனுஷ் நடித்த, `வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். ஏற்கெனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் சௌந்தர்யா பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளரான விசாகன் என்பவரைக் காதலித்து வருவதாகச் செய்திகள் வந்தன.
விசாகனும் முதல் திருமண பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம். சௌந்தர்யா – விசாகன் திருமணச் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செளந்தர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்யவிருக்கும் இந்த விசாகன் யார்?!
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவைத் திருமணம் செய்துகொள்ள உள்ள விசாகனைப் பேட்டிக்காக அணுகினோம். ஆனால், அவர் பேசத் தயங்கினார். விசாகன் பற்றி அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூர்தான் விசாகன் குடும்பத்தாரின் பூர்வீகம். இவரது பெரியப்பா பொன்முடி, தி.மு.க-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு பொன்முடி காலமானார்.
பொன்முடியின் தம்பி வணங்காமுடி. அண்ணன் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அதேநேரத்தில், இவர் தன் மருந்து கம்பெனி வியாபாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார். வெறும் 5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட அந்த மருந்து கம்பெனி, தற்போது வளர்ந்து இந்தியாவின் முன்னணி மருந்து கம்பெனிகளில் ஒன்றாக உள்ளது.
வணங்காமுடி, அவரது மகள் சுபாஷினி, மகன் விசாகன் ஆகிய மூவரும்தான் தற்போது இந்த மருந்து கம்பெனியைக் கவனித்துக்கொள்கின்றனர்.” என்கிறார், விசாகனின் நண்பர்களில் ஒருவர்.
“படிப்பதற்காகத் தன் 16-வது வயதில் வெளிநாடு சென்ற விசாகன், 26-வது வயதில்தான் இந்தியாவுக்கு வந்தார்.
விசாகனுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு. படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்ததோடு, நடிப்பதும் அவருக்குப் பிடித்திருந்தது. அவரின் ஆசை `வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் நிறைவேறியது.
அவருக்குப் பிடித்த கதாபாத்திரம் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பார். அவருக்கு விளையாட்டுகளிலும் ஆர்வம் அதிகம். குறிப்பாக, பேஸ்கட் பால் அவருக்குப் பிடித்த விளையாட்டு. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பார்.” என்கிற அவரின் உறவினர் ஒருவர், விசாகன் – சௌந்தர்யா நட்பு பற்றியும் பேசினார்.
“கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நட்பாகப் பழகத் தொடங்கியவர்கள், `ஒரே அலைவரிசை எண்ணம் கொண்ட நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’ என்று பேசி, தங்களின் விருப்பத்தை இரு வீட்டார்களிடமும் தெரியப்படுத்தினர்.
பிறகு, இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை உறுதி செய்தனர். இருவருமே இயல்பாகப் பழகக்கூடியவர்கள். தங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.” என்று வாழ்த்துச் சொல்லி முடித்தார், அந்த உறவினர்.