டிசம்பர் 24 வரலாறுஸ குரானாவோடு எம்.ஜி.ஆர். தகராறு!
25 Dec,2018
இன்று எம்.ஜி.ஆர் நினைவு தினம்ஸ எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதே டிசம்பர் 24-ம் தேதிக்குப் பின்னால் இன்னொரு வரலாறும் உண்டு.
எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோது 1984-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதிதான், தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், உடனே பதவியேற்பு நடைபெறவில்லை. 1985 பிப்ரவரி 10-ம் தேதி, கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்துத்தான் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஏன் இந்தத் தாமதம்?
எம்.ஜி.ஆர். இறப்பதற்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தல் அது. தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்த போதிலும் முதல்வராகப் பதவியேற்க வேண்டிய எம்.ஜி.ஆர், அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். அப்போது தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர் குரானா. `அவர் அமெரிக்காவுக்குச் சென்று எம்.ஜி.ஆருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்’ எனச் செய்திகள் றெக்கை கட்டின.
அன்றைக்கு சீனியர் அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனும், அப்போதைய தமிழகத் தலைமைச் செயலாளரான சொக்கலிங்கமும் அமெரிக்காவுக்குப் போய் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்தனர். ஆனாலும்கூட, புதிய ஆட்சியை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
குரானா அலுவலகத்துக்குப் போவதும் டெல்லிக்குப் பறப்பதுமாக இருந்தார்கள் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள். ஒரு கட்டத்தில், “சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருவரைத் தற்காலிகமாகத் தேர்வு செய்யுங்கள். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன். எம்.ஜி.ஆர் திரும்பியதும் மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம்’’ என கவர்னர் குரானா ஐடியா கொடுத்தார்.
`தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் மத்திய காங்கிரஸ் ஆட்சி பொம்மலாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது’ என அப்போது காட்டமாக அறிக்கை விட்டார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
எம்.ஜி.ஆர், அமெரிக்கா மருத்துவமனையில் இருக்கும் நிலையை வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. இத்தனைக்கும் அ.தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணி வைத்துத்தான் தேர்தலைச் சந்தித்தன. `
எம்.ஜி.ஆருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இழுத்தடிப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆரின் உடல்நிலைதான்’ என்றும் காரணங்கள் சொல்லப்பட்டன.
இப்படியான சூழலில் `பிப்ரவரி முதல் வாரம் சென்னை திரும்புகிறேன். பதவியேற்பு தேதியை அப்போது முடிவு செய்து கொள்ளலாம்’ என கவர்னர் குரானாவுக்கு அமெரிக்காவிலிருந்து எம்.ஜி.ஆர் கடிதம் அனுப்பினார்.
ஆனால், குரானா அதை ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் பதவியேற்பதற்கான கால அவகாசத்தைக்கூட, கவர்னர் குரானா அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில், “முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும் வகையில் எம்.ஜி.ஆர் உடல் தகுதி பெற்றுவிட்டார் என புரூக்ளின் மருத்துவமனையிலிருந்து சர்டிஃபிகேட் வாங்கி வாருங்கள்’’ என நிபந்தனை போட்டார் குரானா.
சிகிச்சையில் இருந்தபோது எம்.ஜி.ஆரை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவே புரூக்ளின் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. இந்திய அரசு, அமெரிக்க அரசோடு பேசி அனுமதி வாங்கித்தான் படங்கள் எடுக்கப்பட்டன. அவை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டன.
படங்கள் எடுக்கவே அனுமதி தராத மருத்துவமனை, `எம்.ஜி.ஆர் தேறிவிட்டார்’ என சர்டிஃபிகேட் தராமல் கையை விரித்தது. வேறு வழியின்றி, எம்.ஜி.ஆரை வீடியோ படம் எடுத்து வந்து காட்டினார்கள். “பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படிப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியும்?’’ என உறுதியாக மறுத்தார் குரானா.
கடைசியில் எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய பிறகு குரானாவைச் சந்தித்தார். “மனதளவிலும் உடல் அளவிலும் எம்.ஜி.ஆர். தேறிவிட்டார். அதனால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன்’’ என்றார் குரானா.
எம்.ஜி.ஆர் உடல்நிலையைக் காரணமாக வைத்து ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கவே அதுபோன்று சதிகள் அரங்கேற்றப்பட்டதாக அப்போது தகவல்கள் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. என்றாலும், பின்னர் அவர் பதவியேற்று சுமார் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரே, மறைந்தார்.