16 மணிநேர காம இச்சையை தூண்டும் போதைப் பொருள்
23 Dec,2018
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே போதைப் பொருள் பயன்படுத்துவதில் கேரளாவின் கொச்சி நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
போலீசின் கண்ணில் படாமல் கடத்தப்பட்டவற்றின் மதிப்பு அதைவிட பலமடங்கு இருக்கலாம் என கருதப்படுகிறது. இப்படி கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அனைத்துமே சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கோகைன், எம்.டி.எம்.எஸ்., ஹாசிஷ் ஆயில் போன்றவையாகும்.
பல நாடுகளிலிருந்து கொச்சிக்கு கடல் வழியாகவோ, விமானம் மூலமாகவோ கொண்டுவரப்படும் இவை பின்னர் இங்கிருந்து மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இந்நிலையில்தான், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொச்சிக்கு ஏராளமான அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கொச்சி போலீஸ் கமிஷனர் தினேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதை கும்பலை பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை மிக ரகசியமாக நடத்திய விசாரணையில், சென்னையிலிருந்து ஒருவர் போதைப் பொருளுடன் கொச்சிக்கு ரயில் ஏற இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த நபரை பின்தொடர்ந்த போலீசார் கொச்சி ரயில் நிலையத்தில் வைத்து மடக்கினர். விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த இப்ராகிம் செரீப் (59) என தெரியவந்தது.
அவரிடம் நடத்திய சோதனையில் தலா 2 கிலோ ‘ஐஸ் மெத்’ என அழைக்கப்படும் போதைப் பொருளும், ஹாசிஷ் ஆயிலும் கைப்பற்றப்பட்டன.
இந்த ஐஸ் மெத் என்ற போதைப் பொருள் குறித்துதான் இப்போது கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த போதைப் பொருள் குறித்து அதிகமாக யாருக்கும் தெரியாது என்றாலும், செல்வந்தர்கள், சினிமாக்காரர்கள் அதிகமாக கலந்து கொள்ளும் டான்ஸ் பார்ட்டிகளில் இதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறதாம்.
இதன் ஒரிஜினல் பெயர் ‘மெத்தாம் பிட்டமின்’. ‘ஐஸ்’, ‘ஸ்பீட்’ என்று வேறு இரண்டு பெயர்களும் இதற்கு உண்டு.
இதை பயன்படுத்திய உடன் அசுரவேகத்தில் மூளைக்கு சென்று நாடி, நரம்புகளை சுறுசுறுப்பாக்குவதால்தான் இதற்கு ‘ஸ்பீட்’ என்று பெயர் வைக்கப்பட்டதாம்.
பொடியாக்கிய பின்னர் ஒரு ஸ்பூனில் போட்டு மெழுகுவர்த்தி அல்லது லைட்டரை பயன்படுத்தி சூடாக்கி அதை திரவமாக்க வேண்டும்.
பின்னர் சிரிஞ்ச் மூலம் அதை உடலில் செலுத்துகின்றனர். பெரும்பாலும் டான்ஸ் பார்ட்டிகளில்தான் இந்த ‘ஸ்பீட்’ அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கிராம் உடலுக்குள் சென்றால் குறைந்தது 16 மணிநேரம் வரை ‘கிக்’ இருக்கும் என்பதால் அவ்வளவு நேரம் வரை எந்த களைப்பும் இல்லாமல் ‘ஆட்டம்’ போட வைக்கும்.
எனவே,தான் டான்ஸ் பார்ட்டிகளில் இதற்கு மவுசு அதிகமாக காணப்படுகிறது. இளம்பெண்கள்தான் இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்பது அடுத்த அதிர்ச்சி தகவல். காம இச்சையையும் இந்த ‘ஸ்பீட்’ தூண்டுமாம்.
எனவே இதற்கு எப்போதுமே டிமாண்ட் மிக அதிகம். அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. இதனால் இந்த ‘ஐஸ் மெத்’தின் விலை மிக அதிகமாகும்.
ஆனாலும் சென்னை, கொச்சி, மும்பை, கோவா, பெங்களூரு போன்ற நகரங்களில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று போலீசார் கூறுகின்றனர்.
இந்த போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கினால் பின்னர் அதை எளிதில் விட முடியாது. ஒரு சில வருடங்களில் மூளையை பாதிக்க தொடங்கும்.
இதை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். டான்ஸ் ஆட தொடங்கினால் அதை நிறுத்த மனம் வராது.
விடிய விடிய டான்ஸ் ஆடினாலும் எந்த களைப்பும் அப்போது தோன்றாது. ஆனால் போதை தெளிந்தால் பல நாட்களுக்கு படுக்கையில்தான் கிடக்க வேண்டி வரும். கைது செய்யப்பட்டுள்ள இப்ராகிம் செரீப்பிடம் கொச்சி போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கு இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை வலையில் சிக்க வைக்க கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.