ரீவி சேனல் ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த்.. பெயர் என்ன தெரியுமா?
21 Dec,2018
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்காக ஆழமாக விதையை தூவ தொடங்கி உள்ளார் என்று தெரிகிறது.அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அறிவித்து ஓராண்டு நிறைவடையப் போகின்றது.
மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில் ரஜினிகாந்த ஈடுபட்டு வருகிறார். ஆனால் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அடிப்படை
இதனிடையே கட்சி துவங்குவதற்கு தேவையான ஒரு மிக முக்கியமான அடிப்படை விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
அப்படி என்ன முக்கியமான விஷயம் என்கிறீர்களா தமிழகத்தில் ஒரு கட்சி வலுவாக செயல்பட வேண்டுமானால் அவர்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனல் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அந்த நோக்கத்தில்தான் ரஜினிகாந்த் முதல் படியை எடுத்து வைத்துள்ளார்.
3 பெயர்களில் பதிவு
ரஜினிகாந்த் அரசியலுக்காகவே ஒரு தனி சேனலை தூங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளாராம். கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இதுதொடர்பாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்.
தடையில்லா சான்றிதழ்
டிரேட்மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் தனது கையொப்பமிட்டு அனுப்பியுள்ள தடையில்லா சான்றிதழ் கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் மேற்கண்ட பெயர்களில் டிவி சேனல்கள் தொடங்குவதற்கு தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மூலமாக தடையில்லாத சான்றிதழுக்கான பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை இருக்காதுல்ல
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரஜினிகாந்த விரைவிலேயே தொலைக்காட்சி சேனல் துவங்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. பொதுவாக, இப்படியான விண்ணப்பங்களுக்கு பிறகு, டிவி சேனல் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்களாவது ஆகும். ஆனால் பாஜக தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து, அதைவிட விரைவில் டிவி சேனலை ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
பிரதமர் மோடி ரேடியோவில் உரையாற்றுவதை போல, இந்த சேனலில் ரஜினிகாந்த் உரையாற்றினால், நிருபர்களின் கேள்விகளை தவிர்க்கலாம், இதனால் சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறார்கள் அவர்களது ரசிகர்களும்."