`காஸ்டிங்’ இயக்குநர் மோகன் மீது பரபரப்பாக புகார் கொடுத்த துணை நடிகை, பட்டதாரி இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, `ஆதாரங்களை நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் நடவடிக்கை எடுங்கள்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை நடிகை ஒருவரும், பட்டதாரி இளம்பெண் ஒருவரும், சினிமா காஸ்டிங் இயக்குநர் மோகன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், பட்டதாரி இளம்பெண், தன்னுடைய கிளாமர் போட்டோக்களை இயக்குநர் மோகன் வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி கூறினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
துணை நடிகையின் புகாரில், உடைமாற்றும்போது இயக்குநர் மோகன் தரப்பினர் வீடியோ எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இந்த இரண்டு புகார்களின்பேரில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அடையாறு துணை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதனால், துணை நடிகை, பட்டதாரி இளம்பெண் ஆகியோரிடம் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.
அதன்பிறகு புகாரை விசாரிக்க உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவிந்திரனிடம் துணை கமிஷனர் பரிந்துரை செய்துள்ளார்.
உதவி கமிஷனரும் சம்பந்தப்பட்டவர்களிடம் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளார். தொடர்ந்து, அடையாறு மகளிர் இன்ஸ்பெக்டர் லலிதா, விசாரணை நடத்திவருகிறார்.
விசாரணையில் துணை நடிகை, பட்டதாரி இளம்பெண் என்ன சொன்னார்கள் என்று விசாரித்தோம்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், துணை நடிகையிடம் விசாரித்தபோது, நான் உடைமாற்றியதை காஸ்டிங் இயக்குநர் மோகன் வீடியோவாக எடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
ஆனால், அவர் கூறியதற்கான ஆதாரங்கள் அவரிடம் இல்லை. அடுத்து பட்டதாரி பெண்ணிடம் விசாரித்தபோது அவர், இயக்குநர் மோகன், சில ஆண்டுகளாக எனக்குத் தெரியும்.
அவர்தான் எனக்குத் தனியார் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்தார். அண்ணன் என்றுதான் அவரை அழைப்பேன். அவரும் என்னைத் தங்கச்சி என்றுதான் கூறினார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததால் மாதம் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஆனால், மாடலிங் செய்தால் மாதம் சில லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தைக் கூறினார்.
அதுதொடர்பாக எனக்குப் பல வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார். அந்த ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று கூறினார்.
அதை எங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளோம். இதனால், துணை நடிகையும் பட்டதாரி இளம்பெண்ணும் இன்று அந்த ஆதாரங்களை எங்களிடம் கொடுத்தபிறகு அடுத்தகட்ட விசாரணையை நடத்தவுள்ளோம்” என்றனர்.
சம்பந்தப்பட்ட பெண்களிடம் பேசினோம். “போலீஸார் நடத்திய விசாரணையில் எங்களுக்கு நடந்த கொடுமைகளைக் கூறினோம்.
அப்போது போலீஸ் உயரதிகாரி ஒருவர் ஆதாரங்களைக் கொடுக்கும்படி கூறினார். உடனே ஆதாரங்களை நாங்கள் கொடுக்கிறோம்.
நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தோம். இன்று எங்களிடம் உள்ள ஆதாரங்களை போலீஸிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்” என்றனர்.
காஸ்டிங் இயக்குநர் மோகன் குறித்து முக்கிய தகவல் ஒன்றைத் துணை நடிகை ஒருவர் தெரிவித்தார் அவர் கூறுகையில், “அவரிடம் எனக்குப் பழக்கம் ஏற்பட்டபோது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார்.
அதை நம்பி அவரின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது என்னை பல கோணங்களில் படம் எடுத்தார்.
அதற்கேற்ப நானும் போஸ் கொடுத்தேன். அப்போது அடுத்த அறையில் சில மாடலிங் பெண்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்தி, ஆங்கில, தமிழ் பாட்டுக்கு அவர்கள் போட்ட டான்ஸ் வீடியோக்களையும் என்னிடம் காண்பித்தார்.
அதன்பிறகு என் செல்போன் நம்பரை ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துவிட்டார். அதில் ஏராளமான மாடலிங் பெண்கள் இருந்தனர்.
அவர்கள் எல்லோரும் வெளிப்படையாக சேட்டிங் செய்வார்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் அவர் வாட்ஸ்அப்பில் சேட்டிங் மற்றும் வாட்ஸ்அப் காலில் பேசியிருக்கிறார்.
அவர், சில பெண்களுடன் நெருக்கமான வீடியோ வெளியான பிறகுதான் அவரின் இன்னொரு முகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றார் கண்ணீர்மல்க
புகார் கொடுத்த பெண்களுக்கான வழக்கறிஞர் அபிமன்யூவிடம் கேட்டதற்கு, போலீஸார் கேட்ட ஆதாரங்களைச் சம்பந்தப்பட்ட பெண்கள் இன்று சமர்ப்பிப்பார்கள். அது ஒன்றே போதும்.
அந்த வாட்ஸ்அப் மெசேஜில் நிர்வாணப் படங்களை அனுப்பினால் 2 லட்சம் ரூபாயும், டாப்லெஸ் படங்களை அனுப்பினால் ஒன்றரை லட்சம் ரூபாயும், உள்ளாடையுடன் போஸ் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாயும் என்ற தகவல் உள்ளது.
இதுதவிர மோகன் பேசிய ஆடியோ ஒன்று எங்களிடம் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆடியோவில் சில கோடுவேர்டுகள் பேசுகிறார்.
டச்சிங் என்றால் பைவ் கே, அதுவும் ஒரு சதவிகிதம்தான் என்பதோடு உரையாடல் முடிகிறது. அந்த ஆடியோவையும் போலீஸாரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
இதுதவிர இன்னமும் சில பெண்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் ஷூட்டிங்கிற்காக வெளியூர்களில் இருக்கின்றனர்.
அவர்கள் சென்னை வந்தவுடன் ஆதாரங்களுடன் புகார் கொடுக்கவுள்ளனர். மேலும், கோலிவுட்டிலும் மாடலிங்கிலும் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கவுள்ளேன்.
அதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களைத் தெரிவிக்கலாம். நேற்றுகூட பெங்களூருவைச் சேர்ந்த மாடலிங் பெண்ணிடம் இயக்குநர் ஒருவர் தவறாகப் பேசியுள்ளார். அந்தப் பெண் கூறிய தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட இயக்குநர் மீது புகார் கொடுக்கவுள்ளோம்” என்றார்.
காஸ்டிங் இயக்குநர் மோகனிடம் பேசினோம். “ஆரம்பத்திலிருந்தே நான் சொல்வது ஒன்றுதான்.
என்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். எனக்கே தெரியாமல் என்னுடைய பெட்ரூமில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகள், எந்த இடத்தில் பதிவாகிறது. அது எந்த ஐபி அட்ரஸில் உள்ளது என்பது எனக்குத் தெரியாது.
இதனால், கேமரா குறித்து நானே போலீஸில் புகார் கொடுக்கவுள்ளேன். நான் எந்தப் பெண்களிடம் சான்ஸ் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து தவறாக நடந்ததே இல்லை. சமீபத்தில் வெளியான வீடியோவை நான் எடுக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து காஸ்டிங் இயக்குநர் மோகனின் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கூறுகையில், “இயக்குநர் மோகன் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வேண்டும்.
அவர் மீதான புகாரை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். மோகனின் பெயர், புகழைக் கெடுக்க இதுபோன்ற புகார்கள் திட்டமிட்டுக் கொடுக்கப்படுகின்றன.
வீடியோ வெளியான சில நாள்களுக்குப்பிறகுதான் இந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலிருந்தே புகார் கொடுக்கப்பட்டதில் உள்நோக்கங்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.