கதையின் அடிப்படையே கோளாறு: ‘2.0’ படம் குறித்து சாரு நிவேதிதா
02 Dec,2018
ரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், எழுத்தாளர் சாரு நிவேதிதாவோ இந்தப் படத்தைக் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்திருக்கிறார்.
இவர் தாக்கி பெயர் பெறும் ஒருவராக இருப்பதால் இவருடைய கருத்துக்கள் பத்தோடு பதினொன்றாக போவது வழமை. 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான் என்று அவர் சொல்வதில் நியாயமும் இருக்கிறது.
இதுகுறித்து தனது முகநூலில், “சிலரைப் பார்த்து, ‘இவர் தப்பான ஆள்’ என்று சொல்வோம் இல்லையாஸ அதுபோல் ‘2.0’ ஒரு தப்பான படம். பொதுவாகவே ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கருத்துகளை மக்கள் நலனைப் பேணும் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன. 5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால், அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான். இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு.
அதே அறிவுதான் இந்தப் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. அதிலும் கொஞ்சம்கூட சுவாரசியமே இல்லாமல், படு அலுப்பைத் தரும் விதத்தில். செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிகின்றதாம்; அதனால் மனித இனத்துக்குக் கேடு விளைகிறதாம். ஆரம்பக் காட்சியில் செல்போன் டவர்களையும், அதன் பக்கத்தில் சிட்டுக்குருவிகளையும் பார்த்த கணத்திலேயே, ‘ஐய்யய்யோஸ மோசம் போனோமேஸ முடிஞ்சுது கதை’ என்று தலையில் கையை வைத்துவிட்டேன்.
ஏனென்றால், இதுபோன்ற போலி விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானே இருக்கிறோம்? ‘ராக்கெட் விடாதீங்கஸ போய் விவசாயம் பாருங்கஸ’ என்று கூச்சல் போடும் தலைவர்களை நாம் பார்க்கிறோம் இல்லையா? அதேதான் ‘2.0’. இப்படியே இவர்கள் சட்டை வேட்டி கூடப் போட வேண்டாம் என்று சொல்லி, நம்மையெல்லாம் காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்துப்போய் விடுவார்கள். இதுபோன்ற கலாச்சாரப் புரட்சிவாதிகளை நாம் சீனாவில் மா சே துங் ஆட்சியில் பார்த்திருக்கிறோம்.
தாலிபான்களின் ஆட்சியிலும் சமீபத்தில் பார்த்தோம். இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் அடிப்படையில் தாலிபான்கள். ஆனால், தாலிபான்களுக்கும் ஷங்கருக்கும் என்ன வித்தியாசம் என்றால், தாலிபான்களிடம் இருக்கும் அடிப்படை நேர்மை கூட ஷங்கரிடம் இருக்காது. உதாரணம், செல்போன் டவர்களால் பறவையினங்கள் அழிந்து மனித குலத்துக்குக் கேடு என்று சொல்லும் ‘2.0’வை 600 கோடி ரூபாயில் எடுத்த லைகா நிறுவனமே செல்போன் விற்பனை செய்யும் நிறுவனம்தான். அதிலும் ஐரோப்பாவில். எப்படி இருக்கிறது பாருங்கள்ஸ ஊருக்கு உபதேசம் செய்பவன்தான் ஊரைக் கெடுப்பதில் முதல் ஆளாக நிற்பான்.
படத்தில் சுவாரசியம் என்பது துளிகூட இல்லை. முதல் காட்சியில் செல்போன் டவர்களையும் சிட்டுக்குருவிகளையும் பார்த்ததுமே ரஜினி என்ன செய்யப் போகிறார், அக்ஷய் குமார் என்ன செய்யப் போகிறார், ரஜினி கடைசிக் காட்சியில் என்னென்ன வசனம் பேசப் போகிறார் என்ற விபரத்தையெல்லாம் நான் என் அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம் சொல்லிவிட்டேன். இப்படித் தெரிந்துபோனால் அப்புறம் என்னத்தைப் பார்ப்பது?
பறவையியலாளர் சலீம் அலியை வேறு நாற அடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் படத்தில் வரும் ஆர்னிதாலஜிஸ்ட் பக்ஷிராஜன், பறவைகளைச் சாப்பிடுவதைக் கண்டிப்பது போல் வருகிறது. அதாவது பறவையியலாளர்கள் பறவைகளைச் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற அறிவுகெட்டத்தனமான romanticization-ஐ சலீம் அலி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அவருக்குப் பிடித்த உணவு, பறவை. இதுபற்றிப் பலரும் அவ்வப்போது அவரிடம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்போது, “அட மூடர்களே, நான் பிறந்ததிலிருந்தே பறவைக்கறிப் பிரியன். எங்கள் வீட்டு டைனிங் டேபிளில் இல்லாத பறவைகளே கிடையாது. பறவை ஆய்வுக்கும், சைவ உணவுக்கும் என்னய்யா சம்பந்தம்?” என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், அழிந்து வரும் விலங்கினங்களை அடிக்கக் கூடாது என்பது வேறு விஷயம் என்றும் கூறுகிறார்.
ஆனால், இந்தப் படத்தில் அநியாயத்துக்கு அதையும் romanticise செய்திருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான பலவீனம், பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கவலைப்படும் ஒருவன், எப்படி மனிதர்களைக் கொல்லும் அரக்கனாக இருக்கிறான் என்பது. காந்தியைக் கொலைகார வில்லனாகப் பார்ப்பது போல் இருக்கிறது. கதையின் அடிப்படையே கோளாறு என்பதால் எல்லாமே கோளாறு.
டெக்னாலஜி விஷயங்களுக்காக சின்னப் புள்ளைங்க பார்க்கலாம்.
ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்ஸ அடுத்த படத்தில் ஏதாவது வில்லனுக்கு சாரு நிவேதிதா என்று பெயர் வைத்து விடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார் சாரு நிவேதிதா.