ஸ்பைடர்மேன், எக்ஸ்மேன் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த ஸ்டான் லீ மரணம்
13 Nov,2018
அமெரிக்க எழுத்தாளரும், மார்வல் காமிக்ஸின் முன்னாள் தலைவருமான ஸ்டான் லீ தனது 95ஆவது வயதில் உயிர் நீத்தார்.
1961ஆம் ஆண்டு, மார்வல் காமிக்ஸுக்காக தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர் மார்வல் காமிக்ஸை உருவாக்கினார் ஸ்டான் லீ. அதன் பின் ஸ்பைடர் மேன், தி இன்கிரிடிபில் ஹல்க் காமிக்ஸூகளை உருவாக்கினார் லீ.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள சீடர்ஸ் சினாய் மருத்துவ மையத்தில் இந்த மகத்தான் காமிக்ஸ் எழுத்தாளன் இறந்ததாக ஸ்டான் லீ குடும்ப வழக்கறிஞர் கூறுகிறார்.
ஒப்பிட முடியாத கலைஞன்
ஸ்டான் லீ உண்மையான முன்னோடி மற்றும் ஒப்பிட முடியாத கலைஞன் என லீஸ் போவ் என்டர்டையன்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஷான் டஃபி கூறுகிறார்.
லீயின் மனைவி ஜோன் 2017 ஆம் ஆண்டு மரணித்தார்.
ஸ்டான்லீ தன் மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கடுமையான காய்ச்சல் மற்றும் நிமோனியாவுடன் ஸ்டான் லீ போராடி வந்துள்ளார்.
யார் இந்த லீ?
ரோமானிய யூத குடியேறி தம்பதிக்கு 1922ஆம் ஆண்டு பிறந்தார் லீ.
ஒரு சஞ்சிகையின் காமிக்ஸ் பிரிவில் பணியாற்றினார் லீ, பின் அந்த சஞ்சிகை மார்வல் காமிக்ஸ் நிறுவனமாக உருவெடுத்தது. தனது 18ஆவது வயதில் அந்நிறுவனத்தின் ஆசிரியரானார் லீ.
முதலில் குற்றக் கதைகள், போர் கதைகள் மற்றும் மேற்கத்திய வாசகர்களை குறிவைத்து சாதாரண காமிக்ஸ் கதைகளை எழுதினார் லீ.
தனது 40ஆவது வயதில் காமிக்ஸ் துறையிலிருந்தே வெளியேற முடிவெடுத்தார் லீ.
மனைவி ஜோனின் வற்புறத்தலின் பெயரிலேயே காமிக்ஸ் துறையில் தொடர்ந்து இயங்கினார்.
1961ஆம் ஆண்டு, லீ மற்றும் வரை கலைஞர் ஜேக் உருவாக்கிய ஃபண்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்கள்தான் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது.
இதனை தவிர்த்து, எக்ஸ் மேன், ஐயன் மேன் ஆகியவையும் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள்தான்.
கற்பனை திறன்
மார்வல் காமிக்ஸ் செல்வாக்காக இருந்த காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆனது.
1971 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெறும் வரை, மார்வல் காமிக்ஸ் இதழில் முக்கிய பங்கு வகித்து, அனைத்து கவர் ஸ்டோரிகளையும் எழுதினார்.
2009 ஆம் ஆண்டு மார்வல் காமிக்ஸை 4 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய வால்ட் டிஸ்னியின் தலைவர் பாப், லீயை கதாநாயகன் என வர்ணிக்கிறார். மேலும் "அவரது கற்பனை திறனானது அவரது இதயத்தின் அளவை விட பெரியது" என்கிறார் பாப்.
அவரது வாசகர்கள், திரை கலைஞர்கள் என பலர் உலகெங்கும் ஸ்டான் லீக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.