சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம்.
11 Nov,2018
சர்கார் படத்திற்கு எதிர்ப்பு.. அதிமுக போராட்டத்தால், போர்க் களமான தமிழகம்.
சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். மெர்சலை தொடர்ந்து தற்போது சர்கார் படமும் பிரச்சனையை சந்தித்து இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு அடுத்து விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த படம் குறித்து நிறைய விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் சர்கார் படத்திற்கு அதிமுக போர்க்கொடி தூக்கியுள்ளது. தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட தொடங்கி உள்ளது.
சர்கார் படத்தால் அதிமுகவினர் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த படத்தை அதிமுக எதிர்க்க முக்கிய காரணம்.
முதலில் மதுரையில்தான் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராட தொடங்கியது. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரையில் சர்கார் படம் வெளியாகி இருக்கும் நிறைய தியேட்டர்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் சினிப்பிரியா தியேட்டர் காலையில் முற்றுகையிடப்பட்டது. மதியமும் படம் பார்க்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மதுரை அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்குள்ள சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் சர்காருக்கு எதிராக கோவையிலும் போராட்டம் நடக்கிறது. கோவையில் சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி தியேட்டர் உள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு வந்த விஜய் ரசிகர்கள் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க தொடங்கி உள்ளனர். மதுரையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி திருச்சியில் போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். திருச்சியில் இன்று இரவு சர்கார் காட்சி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
இந்த மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதாவது சர்கார் படம் வெளியாகி இருக்கும் அனைத்து தியேட்டர்களின் முன் நின்று போராட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க விஜய் - முருகதாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆம் அதிமுக அரசு சர்கார் குழு மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதிகபட்சம் வழக்கு தொடுக்கும் நிலை வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இன்றோ நாளையோ இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்