சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
03 Nov,2018
சர்கார் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்தை இணையதளம், குறுந்தகடுகள், மற்றும் கேபிள் டிவி-க்களில் சட்ட விரோதமாக வெளியிடுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமம் எங்களது நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிலையில் காப்புரிமை சட்டத்துக்கு எதிராக இணையதளங்களிலும், சென்னையில் உள்ள 5 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமும் இந்த திரைப்படம் சட்டவிரோதமாக ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி டி. கிருஷ்ணகுமார், சர்கார் திரைப்படத்தை இணையதளம், குறுந்தகடு மற்றும் கேபிள் டிவி-க்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.