திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே. பாக்யராஜ் ராஜிநாமா!சர்கார் படக்கதை சர்ச்சை
02 Nov,2018
சர்கார் படக்கதை சர்ச்சை விவகாரத்தின் தொடர்ச்சியாக திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே. பாக்யராஜ் விலகியுள்ளார்.
சர்கார் படக்கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்கார் திரைப்பட கதை குறித்து வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையாகும். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். எனது கதையை சர்கார் என்ற பெயரில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படமாக இயக்கி உள்ளார். இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். இந்த புகாரை விசாரித்த சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், இரண்டு கதைகளும் ஒரே கதையாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, சர்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது என அறிவிக்க வேண்டும். இந்த படத்தை திரையிடும் போது கதை ஆசிரியர் என எனது பெயரை (வருண் ராஜேந்திரன்) திரையிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்கார் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது முருகதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், சர்கார் படத்தின் கதை குறித்து இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது எனக் கூறி, சமரச ஒப்பந்த மனுவை தாக்கல் செய்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகினர். இந்த சமரச ஒப்பந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமரச ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பறிக்கும் வகையில், ஒருவரின் வாக்கை முறைகேடாக மற்றொருவர் செலுத்துவது நாட்டு நலனுக்கு கேடு. இவ்வாறு வாக்குரிமையை இழந்த ஒரு நாயகன் எப்படி போராடி நீதியை நிலைநாட்டுகிறான் என கற்பனையாக எனக்கு (ஏ.ஆர்.முருகதாஸ்) தோன்றிய கதையை சர்கார் என்ற திரைப்படமாக இயக்கியுள்ளேன். இதே கதை கரு, உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் தோன்றியுள்ளது. மேலும், அவர் எனக்கு முன்பே அந்த கதையை சங்கத்தில் பதிவு செய்துள்ளார். எனவே, வளர்ந்து வரும் கலைஞராகிய அவரது உழைப்பை கெளரவிக்கும் வகையில், இந்த வாசகங்கள் திரைப்படம் தொடங்கும் முன் 30 விநாடிகளுக்கு குறையாமல் திரையிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கே. பாக்யராஜுக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. உதவி இயக்குநரின் புகாரைச் சரியான முறையில் கையாண்டு தீர்வு பெற்றதாகச் சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் திடீரென திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே. பாக்யராஜ் விலகியுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்று 6 மாதங்களே ஆன நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சர்கார் பட விவகாரத்தில் பல அசெளகரியங்களை நான் சந்திக்க வேண்டியிருந்தது. அதற்கு முக்கியக் காரணமாக நான் நினைப்பது, தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நேரடியாகத் தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான் என்று நினைக்கிறேன். முறையாகத் தேர்தலில் நின்று அதிபெரும்பான்மையுடன் ஜெயித்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையுடன் செயல்படப்போகிறேன். எனக்கு நேர்ந்த அசெளகரியங்கள் என்ன, ஒழுங்கினங்கள் என்ன என்பதைச் சங்க நலன், நற்பெயர் கருதி வெளியிட விரும்பவில்லை. மேலும் நான் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததால், சர்கார் படக்கதையைச் சொல்ல நேர்ந்தது. இருந்தாலும் தவறு என உணர்ந்து சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.