நான் நல்லவனா, கெட்டவனா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் - வைரமுத்து
14 Oct,2018
மீடூ(me too) என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார காலமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களோடும் ஆலோசித்து தனது பதிலை தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் வலைதளத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ள வைரமுத்து, ''அந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம். அதை சந்திக்க காத்திருக்கிறேன். அசைக்கமுடியாத ஆதாரங்களை தொகுத்து, திரட்டி வைத்திருக்கிறேன்,''என்று கூறியுள்ளார்.
காணொளியில் சின்மயி உள்ளிட்ட யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசியுள்ள வைரமுத்து, '' நான் நல்லவனா, கெட்டவனா என்று யாரும் இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும், நீதிக்கு தலைவணங்குகிறேன்,''என்று தெரிவித்துள்ளார்.