“37 வருஷமா காத்திருக்கேன்ஸ பார்வைக்காக இன்னும் ரெண்டு வருஷம் காத்திருப்பேன்!” வைக்கம் விஜயலட்சுமி
09 Sep,2018
“ஒருவேளை பார்வை கிடைத்தால், முதலில் என் பெற்றோரின் முகத்தைப் பார்க்கணும். அவங்க இருவரும் எனக்காகச் செய்த தியாகங்களை எளிதில் விவரிக்க முடியாது.”
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், ‘கனா’. இதில், சிவகார்த்திகேயன் தன் மகளுடன் பாடியிருக்கும், ‘வாயாடி பெத்த புள்ளை’ பாடல் வைரல் ஹிட். இப்பாடலில், வைக்கம் விஜயலட்சுமியும் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் அனுபவம் மற்றும் தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசிகிறார்.
” ‘கனா’ படத்தில் பாடிய அனுபவம் பற்றிஸ”
“அந்தப் பாடல் ஹிட்டானதில் சந்தோஷம். சமீப காலங்களில் எனக்குத் தமிழ்ப் படங்களிலும் பாடுவதற்கு வாய்ப்புகள் வருகிறது.
அந்த வகையில் ‘வாயாடி பெத்த புள்ளை’ பாடல் வாய்ப்பு வந்துச்சு. இசையமைப்பாளர் திப்பு நினன் தாமஸ், அந்தப் பாடலை எப்படிப் பாடணும்னு சொல்லிக்கொடுத்தார்.
அதன்படி, கேரளாவின் ஒரு ஸ்டுடியோவில் இருந்தவாறு ஸ்கைப் மூலம் பாடினேன். என் குரலை தனி டிராக்கா சேர்த்துட்டாங்க. அதில் சிவகார்த்திகேயன் சாரும் அவர் பொண்ணு ஆராதனாவும் பாடப்போவது முதலில் தெரியாது.
பாட்டு ரிலீஸானதும் கேட்டு ரசிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. மழலைக் குரலில் ஆராதனா பாடினது ரொம்ப சூப்பர்.
அந்தப் பாடல் ரிலீஸானதும் நானும் குழந்தை வாய்ஸில் பாடிட்டிருந்தேன். அப்போ ஆராதனாவின் உருவம் எப்படி இருக்கும்னு கற்பனைகள் எனக்குள் வந்துபோச்சு. ஆராதனாவின் குரல்போல, அவளும் அழகா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
அந்தப் பொண்ணு எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரணும். சிவகார்த்திகேயன் சார் மற்றும் ஆராதனாவுடன் பேச ஆசையா இருக்கு. அவங்க நம்பர் எங்கிட்ட இல்லை.”
உங்க குரல் பல மொழிகளிலும் ஒலித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சிதானே?”
(சிரிக்கிறார்). “விஜயதசமி அன்னிக்கு நான் பிறந்தேன். அதனால், என் பெயர் விஜயலட்சுமி.
பிறக்கும்போதே பார்வைத்திறன் இல்லை. பெற்றோருக்கு நிறைய கவலை இருந்துச்சு. ஒன்றரை வயசுல எனக்குள் இசைத்திறமை இருக்குனு கண்டுபிடிச்சாங்க.
அதில் என்னைச் சாதிக்கவைக்க நினைச்சாங்க. அப்போதே மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசுல ஐந்து வருஷம் சென்னையில் வசித்த பசுமையான நினைவுகள் எனக்குள் இருக்கு. படிப்பைவிட மியூசிக்லதான் அதிக கவனம் செலுத்தினேன்.
பெரிய பாடகர்களின் பாடல்களைக் கேட்டு ரசிப்பேன். நம்ம குரலும் டிவியிலும் ரேடியோவிலும் ஒருநாள் ஒலிக்கும்னு எனக்குள் சொல்லிப்பேன்.
அந்த ஆசை எளிதில் நிறைவேறிடலை. ஐந்து வருஷத்துக்கு முன்னாடிதான் பின்னணிப் பாடகி ஆனேன். மகிழ்ச்சிதான்.”
உங்க நீண்ட நாள் கனவு என்ன?”
“கண்பார்வை கிடைக்கணும் என்பதுதான் நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து என் ஆசையா இருக்கு. நிறைய சிகிச்சை எடுத்தாச்சு.
சமீபத்தில், அமெரிக்காவுக்குச் சென்று கண் பரிசோதனை செய்துட்டு வந்தோம். கண் மற்றும் மூளை நரம்புகளுக்கிடையே சிக்கல் இருப்பதாக டாக்டர்ஸ் சொன்னாங்க.
இப்போ டெக்னாலஜி வேகமா வளர்ந்துட்டிருக்கு. ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை செய்யமுடியும்.
அப்போது, பார்வை கிடைக்க வாய்ப்பிருக்காம். இத்தனை ஆண்டுகள் காத்திருந்த எனக்கு, ரெண்டு வருஷம் மிகக் குறுகிய காலம்தான்.
ஒருவேளை பார்வை கிடைத்தால், முதலில் என் பெற்றோரின் முகத்தைப் பார்க்கணும். அவங்க இருவரும் எனக்காகச் செய்த தியாகங்களை எளிதில் விவரிக்க முடியாது.
கண்பார்வை பிரச்னைதான் என் திருமணம் தடைப்பட முக்கிய காரணம். போன வருஷமும் கடைசி நேரத்தில் திருமணம் நின்னுடுச்சு.
அதுக்காக கவலையில்லை; சந்தோஷமே. இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருவரின் இசையிலும் பாடணும் என்பதும் என் நீண்ட நாள் ஆசை.
ஒரு நிகழ்ச்சில் நான் பாடி முடிச்சதும் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், கட்டிப்பிடிச்சுப் பாராட்டினாங்க.
‘உங்க குரல் கடவுள் கொடுத்த வரம். ரொம்ப இனிமையா இருக்கு. நல்ல எதிர்காலம் அமைய கடவுளை வேண்டிக்கிறேன்’னு சொன்னாங்க.
சற்றும் எதிர்பாராத ஒரு மகிழ்ச்சித் தருணம் அது. இப்படிப் பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை என் மேல் அன்பு செலுத்தறாங்க. அவங்க ஒவ்வொருத்தரின் உருவத்தையும் பார்க்க ஆசையா இருக்கேன்.”
“வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போதுஸ”
“37 வருடங்கள் ஓடிடுச்சு. நிறைய அனுபவப்பட்டாச்சு. வாழ்க்கையும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது.
‘அது கிடைக்கலையே; இது நடக்கலையே’னு வருந்திட்டே இருந்தால், அழகான இந்த வாழ்க்கையை வாழ முடியாது.
ஏதாச்சும் ஒரு வகையில நமக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அதை நாமதான் தேடிப் பெறணும்.
அப்படித்தான் இசை எனக்குக் கிடைச்சது. அதில் நல்ல நிலைக்கு வர்றதுக்குத் தொடர்ந்து ஓடிட்டிருக்கேன். மனதளவில் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
“உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள்ஸ”
“பெரும்பாலும் இசைப் பயிற்சிதான். தவிர, காமெடி ரொம்பப் பிடிக்கும். ஓய்வு நேரங்களில் காமெடி காட்சிகளைத்தான் கேட்டு ரசிப்பேன்.
என் வீட்டுப் பக்கத்தில் நிறைய சின்னப் பசங்க இருக்காங்க. என் நண்பர்களான அவர்களோடு விளையாடுவேன். டிராவல் பண்றதும் பிடிக்கும்.”