அமெரிக்காவிலிருந்து.. அழுதபடி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் – video
07 Aug,2018
சென்னை: கருணாநிதி மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினார் விஜயகாந்த். கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது உடல்நலம் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அதை வயது மூப்பு காரணமாக அவர் நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தைராய்டு மற்றும் பேச்சு சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து கருப்பு உடையில் அழுதபடி பேசியதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கருணாநிதி இறந்தார் என்பதை என்ழால் நம்ப முடியவில்லை. என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் கருணாநிதியுடனேயே இருக்கிறது.
கருணாநிதியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என்று வீடியோவில் கண்ணீர் மல்க பேசினார்.
அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் வீடியோவை பாதியிலேயே நிறுத்துமாறு சொல்கிறார். விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியின் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதிதான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
விஜயகாந்த் மீது கருணாநிதி தனிப்பாசமும் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கருணாநிதி காலத்தில்தான் விஜயகாந்த்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. ஆனாலும் கருணாநிதி மீதான விஜயகாந்த்தின் தனிப் பாசம் தொடர்ந்தது நினைவிருக்கலாம்.