`தமிழ் மனம் மாறாத முகம்’தான் ஐஸ்வர்யா ராஜேஷின் பலம். `பண்ணையாரும் பத்மினியும்’ மலர்விழி, `தர்மதுரை’ அன்புச் செல்வி, `காக்கா முட்டை’ அம்மா.. இப்படி யதார்த்த தமிழ் முகங்களைத் திரையில் பிரதிபலித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து மணிரத்னம், கெளதம் மேனன், வெற்றி மாறன், ஹரி போன்ற சீனியர் இயக்குநர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருடனான சந்திப்பிலிருந்துஸ
`சாமி-2′ படத்தில் திரிஷாவுக்குப் பதிலா நடிச்சிருக்கீங்க. எப்படி இருந்தது அந்த அனுபவம்?”
“சில காரணங்களால் இதில் த்ரிஷா நடிக்கலை. அவங்களுக்குப் பதிலா என்னை நடிக்கக் கேட்டப்போ, `இதுக்கு திரிஷாதான் கரெக்ட். மக்கள் மத்தியில் அவங்க கதாபாத்திரம் நல்லாப் பதிஞ்சிடுச்சு. நிச்சயம் நான் செட் ஆக மாட்டேன்’னு ஹரி சார்ட்ட சொன்னேன்.
அதுக்கு அவர், `15 வருஷத்துக்கு முன் வந்த ஒரு பிளாக்பஸ்டர் மூவி. அதுல வந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ஒரு நடிகையை மறக்கடிச்சிட்டு, அதுல உங்கள நடிக்கச் சொல்றோம். எங்களுக்கு பவர் ஃபுல்லான ஒரு ஹீரோயின் வேணும்.
அதுக்கு நீங்க சரியா இருப்பீங்க’னு சொன்னார். ஆனாலும் தயக்கம் இருந்தது. அதைச் சரிசெய்யும் விதமா ரெண்டு மூணு காட்சிகளைக் கூடுதலாச் சேர்ந்திருக்காங்க.
தவிர ஹரி சாரோட சேர்ந்து வேலை பார்க்கணும் என்பது ரொம்பநாள் ஆசை. ஏன்னா, கதை சார்ந்த படங்களைத் தவிர ஒரு கமர்ஷியல் படத்துலகூட நான் நடிச்சதில்லை.
கமர்ஷியல் படங்கள்ல ஹீரோயினுக்கு நடிக்க பெருசா ஸ்கோப் இருக்காது. ஆனாலும் அதையும் முயற்சி பண்ணணும்னு தோணினதால இதில் நடிக்க ஒப்புக்கிட்டேன்.”
“விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’ படம் பண்றீங்க. கிராமத்துக் கதை டு கெளதம் மேனன் படம். எப்படி உணர்றீங்க?”
“அவர் படங்கள்ல சில காட்சிகள் வந்துட்டுப்போற பெண் கதாபாத்திரங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனால அவர் நடிக்கக் கூப்பிட்டவுடனேயே மறுவார்த்தை பேசாம ஒப்புக்கிட்டேன்.
கிராமத்துக் கதாபாத்திரங்கள்ல அதிகம் நடிச்சிட்டு இருந்த எனக்கு க்ளாஸியான ஹீரோயினா நடிக்கிறது ரொம்ப புதுசா இருந்துச்சு. ஆனா, அவர் சொல்லிக்கொடுத்த மாதிரி நான் நடிக்கலை.
என் ஸ்டைல்லதான் நடிச்சேன். அப்ப, `இது என் ஸ்டைல் இல்லை. ஆனா, நீங்க நடிச்சது எனக்குப் பிடிச்சிருந்துச்சு’னு கௌதம் சார் சொன்னார்.
அவர் ஹீரோயின்ஸ் இங்கிலீஷ் பேசுவாங்க, அழகா இருப்பாங்க..! அம்மா கதாபாத்திரம், கிராமத்துக் கதாபாத்திரங்கள்லயே பார்த்துட்டு இருந்த ஐஸ்வர்யா ராஜேஷை இந்தப் படத்துல ஸ்ட்ராங்கான, அழகான ஒரு பெண்ணாப் பார்ப்பீங்க.”
`மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படம் பண்றீங்க. இதில் மறுபடியும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கிறீங்க. அந்தப் படத்தைப் பற்றிச் சொல்லுங்கஸ”
“இதுல ஜோதிகா மேடம், சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி சார்னு எல்லார் கூடவும் சேர்ந்து காம்பினேஷன் காட்சிகள் இருந்தன, ஆனால், விஜய் சேதுபதியைத் தவிர.
காயத்ரி, ரம்யா நம்பீசன், நந்திதா இவங்க எல்லாரும் என்னைவிட அதிக படங்கள் விஜய் சேதுபதியோட பண்ணியிருக்காங்க. நான் மூணு படங்கள்தாம் பண்ணியிருக்கேன்.
நீங்க என்கிட்ட மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்காம எல்லார்கிட்டயும் கேளுங்க ப்ளீஸ்! நான் அவர் படத்துல மெயின் ஹீரோயினாகூட நடிச்சதில்லை.
`பண்ணையாரும் பத்மினியும்’, `ரம்மி’, `தர்மதுரை’ படங்கள்ல சப்போர்டிங் ஹீரோயின்தான். தவிர, இப்பலாம் விஜய் சேதுபதி என்னை நல்ல கதாபாத்திரங்களுக்கு சிபாரிசு பண்றதே இல்லை. தயவுசெஞ்சு அதை முதல்ல பண்ணச்சொல்லுங்க.
`சீனியர் இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?”
“`காக்கா முட்டை’, `தர்மதுரை’ படங்கள்ல நல்லா நடிச்சதுனாலதான் பெரிய பெரிய இயக்குநர்களோட வேலை பார்குறதுக்கான வாய்ப்புகள் வந்திருக்கு.
ஏனோதானோனு படங்கள் எடுக்குற இயக்குநர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கமாட்டாங்க. அதாவது, ஒரு ஹீரோயினை நல்ல பெர்ஃபாமரா பார்க்குற இயக்குநர்கள் மட்டும்தான் என்னைத் தேர்ந்தெடுப்பாங்க! சில இயக்குநர்கள் ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்துக்குச் செவப்பா இருக்குற ஹீரோயினைத் தேர்ந்தெடுத்துடுவாங்க.
அது அவங்களுக்கு செட்டாகவே ஆகாது. சில சமயங்கள்ல வெளிநாட்டு ஹீரோயின்களைக்கூட தேர்ந்தெடுப்பாங்க. காரணம், நம் மனசுல வெள்ளை நிறம்தான் அழகுனு பதிஞ்சிருக்கு. ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிஞ்சுக்க முடியாத இயக்குநர்கள் யாரும் என்னை அணுகவே மாட்டாங்க.
ஏன்னா, நான் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுறது, சில சீன்களுக்கு மட்டும் க்யூட்டா நடிக்கிறது மாதிரியான கதாபாத்திரங்களுக்கு செட்டாகவே மாட்டேன். அந்தக் கதாபாத்திரங்களை நான் செலக்ட் பண்ணவும் மாட்டேன்.”
`கனா’ படத்துல நீங்க ஒரு கிரிக்கெட் பிளேயர். அதற்கான பயிற்சிகள் எப்படி இருந்துச்சு?”
“இந்தப் படத்துல ஒரு கிரிக்கெட்டரைதான் நடிக்க வைக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, கிரிக்கெட் வீரர்களுக்கு மேட்ச் விளையாடுறதுதான் தொழில். நடிக்கிறது அவங்களோட வேலை இல்லை. ரொம்ப நாளா ஹீரோயின் தேடி, கடைசியில என்னைத் தேர்ந்தெடுத்தாங்க.
இதில் கமிட்டானப்போ வேற எந்தப் படத்துலயும் நடிக்கலை. நடிக்கவும் முடிஞ்சுருக்காது. ஏன்னா இதில் நான் ஒரு பவுலர். பேட்ஸ்மேனா இருந்தாக்கூட பயிற்சிகள் எளிதா இருந்திருக்கும்.
அதனால காலையில இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம்னு பவுலிங் ஸ்டைல் கத்துக்க எனக்கு 65 நாள்கள் பயிற்சிகள் கொடுத்தாங்க.
இதோட ஷூட்டிங்கும் இருக்கும். அந்தச் சமயத்துலதான் நடுவுல 20 நாள்கள் மட்டும் மணி சார் பட ஷூட்டிங்குப் போயிட்டு வந்தேன். இதற்குமுன் வுமன் கிரிக்கெட்டை மையமா வெச்சு படங்கள் எடுக்கப்பட்டது இல்லை.
யாருமே தொடாத ஒரு சப்ஜெக்டை நாம எடுத்து பண்ணியிருக்கோம்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு. நிச்சயம் இது பல பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஓர் இன்ஸ்பிரேஷனா இருக்கும்.
எனக்குப் 10 வயசு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். நான் நடிச்ச படங்கள்லகூட அப்பா சென்டிமென்ட் அதிகமா இருந்ததில்லை. `கனா’வில் சத்யராஜ் சார் எனக்கு அப்பாவா நடிச்சிருக்கார்.
அவர்கூட ரொம்ப அட்டாச் ஆயிட்டேன். எனக்கு ஓர் அப்பா இருந்திருந்தா இப்படித்தான் இருந்துருப்பார்னு நெனக்கிறேன். அந்த அளவுக்கு சார் என்னை நெகிழ வச்சுட்டார்.”
“ஒண்ணுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள் உங்க படத்துல இருந்தாலும் அதைப் பற்றி நீங்க கவலைப்படுறது இல்லை. ஏன்ஸ அந்தமாதிரியான ரோல் மட்டும்தான் உங்களுக்கு வருதா?”
“`அச்சோஸ நாம சின்ன ரோல்ல நடிக்கிறோமே’ங்கிற மனப்போக்கு இருக்கக் கூடாது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துல திறம்பட நடிச்சுக் காட்டணும். இதை நாம புரிஞ்சுக்கிட்டா எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் சமாளிச்சுடலாம்.
தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. முன்னணி கதாபாத்திரங்கள்ல நாம சரியா நடிக்கலைன்னாலும் ரசிகர்கள் மனசுல நம்ம முகம் பதியாது. அதுவே சின்ன ரோல்ல திறம்பட நடிச்சோம்னா நல்ல பேரு கிடைக்கும். அவ்வளவுதான்.”
“மற்ற மொழிப் படங்கள்ல நடிச்ச அனுபவம்ஸ”
“சினிமாவுல எனக்கு தைரியத்தைக் கொடுத்ததே மற்ற மொழிப்படங்கள்தாம். இதுவரை இரண்டு மலையாளப் படங்கள், `டாடி’ங்கிற ஒரு இந்திப் படம் பண்ணியிருக்கேன்.
இந்தியில் நடிக்கும்போது மொழி ஒரு பெரிய பிரச்னையா இருந்துச்சு. டயலாக் மனப்பாடம் பண்றதுல இருந்து, டப்பிங் வரை எல்லாமே பிரச்னை. `டாடி’ பட இயக்குநர் அஷிம் அஹுவாலியா படங்கள் மீது பொதுவாகவே நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும்.
அவர் படங்கள் ரசிகர்களை பல கேள்விக்கு உள்ளாக்கும். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அவரோட படங்கள் போயிருக்கு. `டாடி’ படத்தையும் விருது விழாவுக்கு அனுப்பணும்ங்கிற எண்ணத்துலதான் எடுத்தாங்க.
இது ஒரு பயோபிக். தமிழகத்துல உள்ள ஒருத்தவரோட கதையில நடிக்கிறதா இருந்தா, அதைப்பற்றி படிச்சு தெரிஞ்சுக்கிட்டு, உள்வாங்கி நடிக்கலாம். அதுவே மஹாராஷ்டிராவுல இருக்குற ஒருத்தவரோட பயோபிக்ல நடிக்கிறப்போ நிறைய சிக்கல்கள் ஏற்பட்டுச்சு. `டாடி’யில் நடிச்சது நல்ல அனுபவத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கு.
ஆனால் மலையாளப் படங்களும் கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் மாதிரிதான். என்னால மலையாளம் புரிஞ்சுக்க முடியும். ஆனா, டப்பிங் பண்ணும்போது அந்த பாஷையை உச்சரிக்கிற விதம் எனக்குச் சரியா வரலை.
என் குரல் அந்தக் கதாபாத்திரத்துக்கு செட்டாகலைனு சொன்னதுனால டப்பிங் பண்ணலை. மலையாளத்துல நிவின் பாலி, துல்கர் சல்மான் ரெண்டு பேர்கூடயும் நடிச்சிருக்கேன்.
எனக்கு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வந்துச்சு. அதுல எதை செலக்ட் பண்றதுனுகூட தெரியாம இருந்தேன். மத்தபடி, மற்ற மொழிப் படங்கள்லயும் நடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை கொடுத்ததே இந்தப் படங்கள்தாம்.”
`கல்யாணம் எப்போ?”
“சின்ன வயசுல இருந்தே கல்யாணம்னா ரொம்பப் பிடிக்கும். `எப்ப 21 வயசு ஆகும், எப்ப கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெத்துக்கலாம்’னு கனவு கண்டுட்டு இருந்தேன்.
ஆனா, சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமா கல்யாணம் பண்ணிக்குவேன். கல்யாணம் சினிமாவுல நடிக்கிறதுக்கு ஒரு தடையா இருக்காதுனு நினைக்கிறேன். ஏன்னா, நான் பண்ற கதாபாத்திரங்கள் அப்படி இருக்கு.”
“பெண்களுக்கான தனி அமைப்பு தமிழ் சினிமாவுல இல்லை. இந்த நிலையை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?
`முதல்ல பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவுல இருக்கணும். பாலிவுட்ல ஹீரோயினை மட்டுமே மையமா வெச்சு நிறைய படங்கள் எடுக்குறாங்க.
ஆனா, தமிழ்ல அப்படி ஒரு நிலை இல்லவே இல்லை. 1980கள்ல ரோஜா, ரம்பா, மீனா, குஷ்பு, ரேவதி இவங்க எல்லாரும் நடிச்ச கதாபாத்திரங்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.
ஹோம்லி, கிளாமர் ரெண்டையும் திறம்பட கையாளுற தன்மையும், அதுக்கான இடமும் சினிமாவுல இருந்துச்சு. என்னால சிம்ரன் மாதிரி கிளாமரா நடிக்க முடியாது. ஏன்னா, தமிழ் சினிமாவுல பெண்களுக்குக் கொடுக்கப்படுற இடம் மிகக் குறைவு.
பத்து வருஷத்துக்கு ஒருதடவைதான் `அருவி’, `அறம்’, `காக்கா முட்டை’ மாதிரியான படங்கள் வருது. நயன்தாரா நடிச்சதுனால `அறம்’ படம் மக்கள் மத்தியிலயும் வணிக ரீதியாகவும் நல்ல ரீச் கிடைச்சுச்சு.
நயன்தாரா அப்படியான கதாபாத்திரங்கள்ல நடிச்சா ஏத்துக்குவாங்க. ஏன்னா, பத்து வருஷத்துக்கு மேல அவங்க ஹீரோயினா இருக்குறாங்க. நியாயமா பார்த்தா ஹீரோயின்கள்ல அவங்களுக்கு மட்டும்தான் ஒரு நல்ல ஓப்பனிங் இருக்கு. அதுதான் உண்மை.
அவங்களை மாதிரி பெண்ணை மையப்படுத்திய கதையம்சம் உள்ள படத்துல நான் நடிச்சா கண்டிப்பா அது ஓடாது. ஆனா நான் இப்ப நடிச்சிட்டு இருக்குற கிரிக்கெட் படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பு, `காக்கா முட்டை’ தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பு.
இந்த மாதிரி பெரிய பெரிய ஹீரோக்கள் இருக்குறதுனாலதான் அந்தப் படம் வணிக ரீதியா நல்ல பெயரை எடுத்துச்சு. இது எதுவுமே இல்லாம என்னை மட்டும் வெச்சு படம் எடுத்து ஊர் ஊரா போஸ்டர் ஒட்டுனா அந்தப் படம் ஓடுமாங்கிறது ஒரு கேள்விக்குறிதான்.
இப்படி ஒரு நிலைமை தமிழ் சினிமாவுல இருக்குறப்போ எப்படி நடிகைகள் ஒண்ணு சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்க முடியம்? சான்ஸே இல்லை. மத்த மொழி ஹீரோயின்கள்தாம் தமிழ்ல நடிச்சிக்கிட்டு இருக்காங்க.
முதல்ல தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்காங்க? நாம ஒரு அமைப்பு ஆரம்பிச்சு அதுக்கு உறுப்பினரா அவங்களை சேரச் சொன்னா அவங்க வருவாங்களா? இந்தியில இந்திப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, மலையாளத்துல கேரளப் பொண்ணுங்க நடிக்கிறாங்க, ஆனா, தமிழ்ல மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை.
ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ்ப் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது.
தன்ஷிகா நல்லா தமிழ்ப் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலக்ஷ்மி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ்ப் பேசுறவங்களா இருந்தும் பெரிய படங்கள்ல நடிக்கலை.
ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில பட்டம் வென்ற அனுக்ரீத்தி வாஸ் திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு க்ரீத்தி யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு.
இந்த மாதிரி அனு க்ரீத்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா அவங்களை மதிக்க மாட்டாங்க.
ஒழுங்காச் சாப்பாடு போட மாட்டாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர்ற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலைங்கிற வருத்தம் எனக்குள்ள நிறையவே இருக்கு.
நான் எனக்கு நேர்ந்ததை மட்டும் மனசுல வச்சுக்கிட்டுப் பேசலை. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான். கதை சார்ந்த படங்களுக்கு நாம யதார்த்தமா இருந்தா போதும். அழகு முக்கியமில்லை.
அதுவே கமர்ஷியல் படங்களுக்கு நாம அழகா இருக்கணும். இல்லைனா நம்ம ஊர் மக்கள் மீம்ஸ் போட்டு நம்மளை கலாய்ச்சுத் தள்ளிருவாங்க. அதனால, நம்ம ஊரு பொண்ணுங்க அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்துவெச்சா எனக்கு சந்தோசம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.”
“அப்ப, சினிமாவுல பெண்களுக்கு நடக்குற பிரச்னைகளை எப்படிச் சமாளிக்குறீங்க?”
“எல்லாத்தையும் தனியா நின்னுதான் சமாளிக்கணும். வரலக்ஷ்மி, தன்ஷிகா எல்லாரும் ரொம்ப ஸ்ட்ராங்கான நடிகைகள். எல்லாத்தையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் எங்கக்கிட்ட இருக்கு.
தவிர, எங்க பிரச்னைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தாங்கனா நாங்க இன்னும் மகிழ்ச்சியா உணர்வோம். நான் `காஸ்டிங் கவுச்’ மாதிரியான பிரச்னைகளை இதுவரை சந்தித்ததில்லை. சில உப்புமா கம்பெனிகள்ல மட்டும்தான் இந்த மாதிரியான பிரச்னைகள் நடந்துட்டு இருக்கு. பெரிய படங்கள், பெரிய இயக்குநர்கள்கிட்ட வேலை பார்க்கும்போது பிரச்னைகள் எதுவும் வராது.”