`பேய் ஓட்டப் பாடினான்ஸ இப்போ சூப்பர் சிங்கர் ஆகிட்டான்!
17 Jul,2018
எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு” என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா.
`பேய் ஓட்டப் பாடினான்ஸ இப்போ சூப்பர் சிங்கர் ஆகிட்டான்!’’ – நெகிழும் செந்திலின் அக்கா
வெஸ்டர்ன், பாப், கர்நாடக சங்கீதம் என எல்லா வகையான இசையும், தமிழனின் நாட்டுப்புறக் கலைக்குத் தலைவணங்கி, சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் நாட்டுப்புறக் கலைஞன் செந்திலை டைட்டில் வின்னராக அறிவிக்க வைத்துள்ளது.
சந்தோஷம், கோபம், அழுகை போன்ற மனித உணர்வுகளை மையமாக வைத்ததே இசை என்பதை, தன் மண்வாசனை நிறைந்த குரலின் மூலம் நிரூபித்து, ஒட்டுமொத்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் தலைநிமிரச் செய்திருக்கிறார் செந்தில் கணேஷ்.
“எங்க ஊரே பெருமையில் கை கால் புரியாம இருக்கு. எல்லாத்துக்கும் என் தம்பிதான் காரணம். அவன் ஊருக்கு வரும்போது வெடி வெடிச்சு தலையில் தூக்கிவெச்சு கொண்டாட எங்க ஜனங்க காத்துக் கெடக்கு” என வெள்ளந்தியான குரலில் பேச ஆரம்பித்தார், செந்தில் கணேஷின் வெற்றிக்குத் தூணாக இருக்கும் அக்கா சித்ரா.
“எனக்கு என் தம்பின்னா உசுரு. எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க, ஒரு பையன். நான்தான் வீட்டுக்குப் பெரியவ. என் தம்பி செந்திலை என் புள்ளை மாதிரிதான் பார்த்துப்பேன். எனக்குக் கண்ணாலம் நடந்தப்போ அவன் பள்ளிக்கூடத்துல படிச்சுட்டிருந்தான்.
செந்திலு என்னை அம்மானுதான் கூப்பிடுவான். அவனை விட்டுட்டு புருஷன் வீட்டுக்குப் போறோமேன்னு கவலையா இருந்துச்சு. என் வீட்டுக்காரரு சொந்தம்கிறதால அந்தக் கவலையே வராத மாதிரி நடந்துகிட்டாரு. அப்பாவும் புள்ளையும் மாதிரிதான் ரெண்டு பேரும் இருப்பாங்க.
என் சோட்டுக்காரிங்க, `நீ என்ன வரம் வாங்கிட்டு வந்தியோ, இப்படி புருஷன் கிடைக்குறதுக்கு’னு சொல்வாங்க என்பவரின் குரலில் அழுகையை விஞ்சும் ஆனந்தத்தை உணரமுடிகிறது.
“ஒரு காலத்துல எங்க ஊருல அடிக்கடி பேய் ஓட்டுவாக. அப்போ பாடும் பாட்டை செந்தில் கேட்டுட்டு வந்து, வீட்டுல பாடிக்கிட்டே திரியும். `என்னத்த இங்கே வந்து பேய் ஓட்டிகிட்டு இருக்கே’னு நான்கூட வஞ்சியிருக்கேன்.
அப்போ எனக்குக் கண்ணாலம் ஆகலை. ஆனா, `இவனுக்குப் பாடும் திறமை இருக்கு புள்ள’னு என் புருஷன் அப்பவே சொல்வாரு. அப்போ அது எனக்குப் பெருசா தெரியல.
என் தம்பியும் என் வீட்டுக்காரரும் சாயங்காலம் ஆயிருச்சுன்னா, பாட்டு படிக்க ஆரம்பிச்சிருவாங்க. கிராமம், விவசாயம், வயக்கா வரப்புனு எதையாவது பாட ஆரம்பிச்சுருவாங்க.
என் தம்பியோட குரலுக்கு ஏத்த மாதிரி என் வீட்டுக்காரர் வரி எழுதி, மெட்டுப் போட்டுக் கொடுப்பார். என் தம்பி பாடுறதை எங்க ஊரு ஜனங்க கைதட்டி ரசிக்கும். அந்தக் கைதட்டல்தான் அவனை இவ்வளவு தூரம் கொண்டுவந்திருக்கு.
அவனுக்குத் திறமை இருக்கு அவனை பெரிய ஆளா ஆக்குறதுதான் நம்ம கடமை’னு சொல்வாரு. அதுக்காக, எங்க ஊரு பக்கம் நடக்கும் திருவிழாவுல என் தம்பி பாடறக்கு வாய்ப்பு கேட்டு என் வீட்டுக்காரர் போவாரு.
நாட்டுபுறக் கலைஞர்களுக்கு அவ்வளவு ஈஸியா வாய்ப்பு கிடைச்சுருமா? அதுவும் புதுசா பாட ஆரம்பிச்சவங்களுக்கு யாரு வாய்ப்பு கொடுக்க கையைத் தூக்குவாங்க.
ஆனால், எந்தச் சூழலிலும் என் தம்பி ஏமாந்துறகூடாதுன்னு பல மேடை ஏறி இறங்குவாரு என் வீட்டுக்காரரு. `இந்த மேடை இல்லைன்னா என்னடா? உனக்கு ஆயிரம் மேடை இருக்கு’னு அவனை தேத்துவாரு. அவரு விதைச்ச விதைதான் இன்னைக்கு விருட்சமா வளர்ந்து நிக்குது.
பொருளாதார ரீதியாக எவ்வளவோ கஷ்டம் இருந்தப்ப அவன்கிட்ட சொன்னதுகூட கிடையாது. அவன் சிரிச்சுட்டே இருக்கணும்னு சொல்வாரு. மாமன் – மச்சானால் இவ்வளவு ஒற்றுமையா இருக்க முடியுமான்னு ஆச்சர்யமா யோசிப்பேன்.
ஆனா, அவரு செந்திலை மச்சானா பார்த்ததே இல்லே. மகனா பார்க்கிறாருன்னு லேட்டாதான் புரிஞ்சுச்சு. அவனோட அடையாளத்துக்காக நிறையவே கஷ்டப்பட்டாரு. இது எங்க குடும்பத்தின் வெற்றி” என்ற சித்ரா, ராஜலெட்சுமி பற்றியும் குறிப்பிட்டார்.
“காலேஜ் படிக்கும்போது ராஜியை விரும்பறதை என்கிட்டதான் முதல்ல சொன்னான். என் புருஷனும் அவன் இஷ்டத்துக்கு விட்டுருனு சொல்லிட்டாரு.
நாங்க தேடிக் கண்டுபிடிச்சுருந்தாலும் இப்படி ஒரு பெண்ணைக் கட்டி வெச்சுருப்போமான்னு தெரியலை. அவ்வளவு அனுசரணையான பொண்ணு. எங்க குல தெய்வம் அவன்கூடவே இருந்து, எப்பவும் சந்தோசமா வெச்சுக்கும். அவன் குரலை சாகுற வரை கேட்டுட்டே இருக்கணும்” என ஆனந்தக் கண்ணீரில் தழுதழுக்கிறது சித்ராவின் குரல்