`எனக்குப் பணத்தைவிட, என் 30 கோடி ரசிகர்கள் முக்கியம்!” – பவர் ஸ்டார் சீனிவாசன்
06 Jul,2018
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ‘களவாணி சிறுக்கி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் பவர் ஸ்டார் பேசியது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘களவாணி சிறுக்கி’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 5-ம் தேதி ஈரோடு அருகேயுள்ள ஊரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.
அரதப் பழசான, மூட்டைப் பூச்சிகளின் இருப்பிடமான ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா திரையரங்கில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழா அழைப்பிதழில் ஈரோடு எம்.எல்.ஏ-க்கள் இருவரின் பெயர்களையும் போட்டு அதிர வைத்திருந்தார், படத்தின் தயாரிப்பாளர். ஆறு மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, ஏழு மணிக்கு ஆடி காரில் வந்து இறங்கினார், சீனிவாசன்.
பவர் ஸ்டாருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் இருக்கையா கொடுப்பார்கள்?! அதே மூட்டைப் பூச்சிக்கான இருக்கைதான்.
‘சார் ஒரு செல்ஃபி’ எனப் பலரும் பவர் ஸ்டாரை நச்சரிக்க, ‘எனக்கு இத்தனை ரசிகர்களா?’ என்ற மோடில் ரியாக்ஷன் காட்டினார், பவர். படத்தின் டிரெய்லர் மற்றும் மூன்று பாடல்களை ஒளிபரப்பிய பிறகு, படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
“என் உயிரிலும் மேலான ரத்தத்தின் ரத்தமான ரசிகர்களேஸ” எனத் தன் டிரேட் மார்க் சிரிப்புடன் தனது பேச்சை பவர் ஸ்டார் தொடங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசியவர், “ஈரோட்டுல ஒரு ஃபங்ஷன் இருக்கு. அதுல நீங்க நிச்சயம் கலந்துக்கணும்னு கேட்டாங்க.
‘என்ன ஏதாவது ஃபேக்டரியைத் திறந்து வைக்கணுமா?’னு கேட்டேன். ‘இல்ல, படத்தோட இசை வெளியீட்டு விழா. தயாரிப்பாளருக்குச் சொந்த ஊர் அது. அதனால, இங்கேயே வெச்சிருக்கோம்’னு சொன்னதும், மகிழ்ச்சி.
ஏன்னா, சொந்த ஊர்ல இசை வெளியீட்டு விழாவை நடத்த நினைக்கிறவங்க சிலர்தான். நான் என்னோட ‘லத்திகா’ பட இசை வெளியீட்டு விழாவை என் சொந்த ஊரான மதுரையில ரெண்டு தடவை நடத்தினேன்.
இந்தப் படம் 100 நாள் ஓடணும். ஆனா, ‘லத்திகா’ மாதிரி 300 நாள்கள் எல்லாம் ஓடாது. ‘லத்திகா’ 300 நாள்கள் ஒடுச்சா, இல்ல நான் ஓட வெச்சேனானு எனக்கு மட்டும்தான் தெரியும்!” என்றவர், தொடர்ந்தார்.
`இந்தப் படத்தை நீங்க வெற்றிப் படம் ஆக்கலைனாலும் பரவாயில்லை. செலவு பண்ண பணத்தைத் திரும்ப எடுக்கிற அளவுக்காவது நீங்க படத்தை ஓட வைக்கணும். ஏன்னா, ஒரு படம் தோல்வியடைந்தால் அந்தத் தயாரிப்பாளரின் மனநிலை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்.
நான் சினிமாவுல 30 கோடி ரூபாயை இழந்துட்டேன். அதைப்பத்தி நான் ஒருநாளும் கவலைப்படலை. ஏன்னா, இன்னைக்கு எனக்கு முப்பது கோடி பேர் ரசிகர்களா இருக்காங்க.
எனக்குப் பணத்தைவிட மனிதர்கள்தான் முக்கியம். பணத்தை எப்பவேணா சம்பாதிச்சுக்கலாம். நல்ல மனிதர்களை சம்பாதிக்கிறது கஷ்டம்.
நல்ல ரசிகர்களை சம்பாதிக்கிறது கஷ்டம். எனக்கு இத்தனை ரசிகர்கள் கிடைச்சிருக்கிறது சந்தோஷம்!” எனப் பன்ச் வசனம் பேசி விழாவை முடித்து வைத்தார், பவர் ஸ்டார்.