லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
03 Jul,2018
கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக, ஆட் பீரோ நிறுவனதிற்கு வழங்கவேண்டிய தொகையை இன்னும் வழங்கமால் தாமதப்படுத்தி வரும் லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகள் சௌந்தர்யா இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்து கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் கோச்சடையான். இப்படத்திற்காக, சௌந்தர்யா இயக்குனராக இருந்துவரும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் கடன் அளித்துள்ளது.
அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும், அதேசமயம் படத்தின் உரிமையை ஆட் பீரோ விளம்பர நிறுவனதிற்கு வழங்குவதாக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் படத்தின் உரிமையை வழங்காமல் இருந்ததோடு, கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் இருப்பதாக ஆட் பீரோ விளம்பர நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியது. அதனை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ஆட் பீரோ நிறுவனதிற்கு வழங்கவேண்டிய தொகையை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான தொகை கொடுக்கப்படாத நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 6.20 கோடி ரூபாயை ஏன் இன்னும் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியதோடு, வரும் 10-ம் தேதி பணம் செலுத்துவது தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மீறினால் தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார்