என்னை புதுமுக நடிகையாகத்தான் நினைக்கிறேன். ‘முள்ளும் மலரும்’ வனிதா கிருஷ்ணசந்திரன்
25 Jun,2018
“நடிச்சிட்டு இருக்கும்போதுதான் கிருஷ்ண சந்திரன் அறிமுகம் கிடைச்சது. அவர் பாடிய `ஏதோ மோகம்..ஏதோ தாகம்..’ பாட்டு என் ஆல் டைம் ஃபேவரைட்!” – ‘முள்ளும் மலரும்’ வனிதா
“இப்பவும் என்னை புதுமுக நடிகையாகத்தான் நினைக்கிறேன்..!
வனிதா கிருஷ்ணசந்திரன், தன்னுடைய பதிமூன்று வயதில் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர். இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரை மட்டுமல்லாது `அலைகள்’, `கோலங்கள்’ போன்ற சீரியல் மூலமாகச் சின்னத்திரையிலும் வலம்வந்தவர். தற்போதைய படங்களில் இளம் நடிகர்களின்’ அம்மா’வாக நடித்துக்கொண்டிருக்கிறார். கேரளாவிலிருந்து சென்னையில் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தவரை தேநீர் இடைவேளையில் சந்தித்துப் பேசினோம்.
“என்னோட அம்மா திருச்சியைச் சேர்ந்தவங்க, அப்பா கேரளாவில் மஞ்சேரியைச் சேர்ந்தவங்க. அப்பா பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழகம்தான் பூர்வீகம்.
அப்பா அரசு அதிகாரியா வேலை பார்த்ததுனால நிறைய ஊருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுவாங்க. நான் பிறந்தது திருச்சியில், படிச்சது சென்னையில். எனக்கு இரண்டு அக்கா, ஒரு அண்ணன். என் அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் சினிமான்னா அவ்வளவு இஷ்டம்.
வாரம் ஒரு படத்துக்குக் கூப்பிட்டுப் போவாங்க. படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்ததும் அங்கே மெயின் ரோலில் நடிச்சவங்க மாதிரி அப்பாகிட்ட நடிச்சுக் காட்டுவேன்.
என் நடிப்பு ஆர்வம் அப்படித்தான் ஆரம்பிச்சது. நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் குரு கூடச் சேர்ந்து நிறைய நாட்டிய நாடகங்கள் பண்ணுவோம்.
அப்படித்தான் ஒரு நாடகம் பண்ணிட்டு இருக்கும்போது இயக்குநர் துரை என்னைப் பார்த்துட்டு, `என் படத்துல நீ நடிக்கிறீயாம்மா’ன்னு கேட்டாங்க. அவங்க கேட்டதும் எனக்கு என்ன றெக்கை கட்டிப் பறக்குற மாதிரி இருந்துச்சு. என் அப்பா, அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கினார்.
அதுதான் நான் நடித்த `பாதை மாறினாள்’ திரைப்படம். அந்தப் படத்துல கடைசி சீன்ல நான் தற்கொலை பண்ணிப்பேன். அந்தக் காட்சியைப் பார்த்துட்டு என் அம்மா அப்படியோர் அழுகை. அந்தப் படம் ரிலீஸானப்போ `ஆனந்த விகடனில்’ என் நடிப்பைப் பாராட்டி எழுதியிருந்தாங்க.
அதுதான் எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய அங்கீகாரம் என்றவர் தன்னுடைய இளமை காலத்துக்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.
அந்தப் படங்களைத் தொடர்ந்து நிறையப் பட வாய்ப்புகள் கிடைச்சது. பிஸியா படங்களில் நடிச்சிட்டு இருந்ததால் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியல.
படிப்பை நிறுத்திட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டேன். நடிச்சிட்டு இருக்கும்போதுதான் கிருஷ்ண சந்திரன் அறிமுகம் கிடைச்சது. அவர் பாடிய `ஏதோ மோகம்..ஏதோ தாகம்..’ பாட்டு என் ஆல் டைம் ஃபேவரைட். எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. ரெண்டு பேர் வீட்டிலும் பேசினோம்.
பெரியவங்க மகிழ்ச்சியோட எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தாங்க. `கல்யாண அகதிகள்’ என்னுடைய நூறாவது படம். அந்தப் படம் நடிச்சு, டப்பிங்லாம் பேசி முடிச்சதுக்கு அப்புறம்தான் எங்க திருமணம் நடந்துச்சு.
திருமணத்துக்குப் பிறகு 16 வருஷம் நடிப்புக்கு பிரேக் எடுத்துட்டு ஃபேமிலியைக் கவனிச்சிட்டு இருந்தேன். என் பொண்ணு கல்யாணமாகி, கனடாவில் இருக்கா. தினமும் வீடியோகாலில் என் பொண்ணுகிட்ட பேசிருவேன். அவள்கிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவேன். எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணுவா.
பாலசந்தர் சார் என் குரு. என் நடிப்பை ரொம்பப் பாராட்டுவார். அதேசமயம் கொட்டும் வாங்கியிருக்கேன். பாலசந்தர் சார் புரொடக்ஷனில் `கால் முளைத்த ஆசை’ங்குற சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்தேன்.
அதைத் தொடர்ந்து அலைகள், கோலங்கள்னு நிறைய சீரியலில் நடிச்சேன். படங்களிலும் நடிக்கவும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் `முள்ளும் மலரும்’ சீரியலில் `காந்தியம்மா’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
எப்பவுமே அதிகமான சீரியலில் கமிட் ஆக மாட்டேன். ஒரு சீரியல் கமிட் ஆனாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு விரும்புவேன். இப்போ மலையாளப் படங்களில் நடிச்சிட்டு இருக்கேன்.
தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தால் நல்ல கதையா இருந்தா நிச்சயம் கிரீன் சிக்னல்தான். இப்போ வரைக்கும் நான் பெரிய நடிகைன்னு நினைச்சதே இல்ல. எல்லார்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கத்துட்டுதான் இருக்கேன்.
இப்பவும் புது முகமாகவே என்னை நினைச்சிக்கிறேன். `ஆச்சி’ மனோரமாவிலிருந்து சிவாஜி அப்பா வரைக்கும் எனக்குப் பல விஷயங்களைக் கத்துக் கொடுத்துருக்காங்க. நான் ரொம்ப பாசிட்டிவ் பர்சன். இன்றைக்கான நாளை சந்தோஷமா வாழுறேன் எனப் புன்னகைக்கிறார், வனிதா.