ரஜினி சுயமாக இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா ?
09 Jun,2018
இயக்கப்படுகிறாரென்றால் அவர் பின்னாலிருந்து இயக்குவது யார் ? எதற்காக இயக்கப்படுகின்றார்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்பது வெளிப்படையானது.ரஜினியின் பேச்சுகளும் செயற்பாடுகளும் இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன. அதனை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்கு மேற்கொண்ட விஜயமும் அங்கு அவர் எதிர்கொண்ட எதிர்ப்புக்களும் அவர் தெரிவித்த கருத்துக்களும் அமைந்துள்ளன.
கடந்த 30 வருடகாலமாகவே அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்துவரும் ரஜினி இதுவரை கட்சியை அமைக்கவில்லை, கட்சிக்குப் பெயர் வைக்கவும் இல்லை.
அண்மைக்காலமாக ரஜினி “மக்கள் மன்றம்” என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அவ்வப்போது தமிழக அரசையும் அரசின் செயற்பாடுகளையும் அமைச்சர்களையும் விமர்சனம் செய்து வருவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கப்போவதாகவும் தனது ஆட்சி ‘ஆன்மிக’ஆட்சியாகவே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஆன்மிக ஆட்சி என்பதற்கு அவர் இதுவரை சரியான விளக்கமளிக்கவில்லை .
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்துக்கள் அதிகமாக வாழ்ந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்களும் ,கிறிஸ்தவர்களும், சீக்கியர்களும் வாழ்கின்றனர். இவர்களில் எவரையும் ஒதுக்கிவிட்டு ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது ஆட்சி நடத்தவோ முடியாது. ஒன்றுடன் ஒன்றாகப் பிண்ணிப் பிணைந்துள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரையில் சகல மதத்தைச் சேர்ந்த மக்களும் சமாதானமாக ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத மத ஐக்கியம் தமிழகத்தில் காணப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு இந்துத்வா அமைப்புக்கள் தீவிர முயற்சிகளை .மேற்கொண்டன. அது மத ரீதியிலான சாதி ரீதியிலான வன்முறைகளைத் தூண்டும் முயற்சியாக இருந்தபோதும் அது எடுபடவில்லை.
இவ்வாறான நிலையில் ‘ ஆன்மிக’ அரசியலைக் கொண்டு வரப்போவதாக அறிவித்ததன் மூலம் எவ்வாறான ஆட்சியைக் கொண்டுவரப்போகிறார் ரஜினி? என்ற கேள்வி எழுந்து அது மக்கள் ஐக்கியத்தைக் சீர்குலைக்காதா? பிரச்சினைகளை உருவாக்காதா? என்று சகல தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஒரு தெளிவான கொள்கை என்று எதுவும் இல்லாமல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும் ரஜினி செயற்படுவதாக சமூக ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.
தூத்துக்குடி சம்பவம் பற்றி சகல தரப்பினரும் ஒரு ஒத்தக் கருத்தினைக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி மற்றும் அவர் சார்ந்திருக்கும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் அதற்கு எதிர்மாறான கருத்துக்களை தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கடித்துள்ளது.
தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டமையும் நூற்றுக்கணக்கானோர் தாக்குதளுக்குள்ளாகி பாதிக்கப்பட்டிருப்பதும் பொது மக்களுக்கு எதிரான மிக மோசமான செயற்பாடு எனவும் அப்பட்டமான மனித உரிமை மீறல் செயல்பாடு எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
எதிர்க்கட்சிகள் பொது அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினரும் பொலிஸாரின் இந்த செயற்பாடுகளுக்கு எதிரான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன்
எனினும் பொலிஸாரின் இந்த செயற்பாடுகளை நியாயப்படுத்தி பா.ஜ.கவின் தலைவர்களான எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.இராதாகிருஸ்ணன் போன்றோரும் தமிழகத்தின் அ.தி.மு.க அரசியல் வாதிகள் சிலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். தற்போது அதே பாணியில் நடிகர் ரஜினியும் கருத்து தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் செயற்பாடுகளை அதாவது பொலிஸாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்தின் பின்னர் நிலைமைகளை பார்வையிட ரஜினி அங்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவரிடம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போயிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நலம் விசாரித்த ரஜினியிடம் “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? “ என்று முகத்தில் அடித்தாற் போல் கேள்வி கேட்ட தூத்துக்குடி இளைஞனின் ஆதங்கமும் வெறுப்பும் ரஜினியை நன்றாகவே அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.
சென்ற இடத்திலெல்லாம் மக்கள் கேட்ட கேள்விகளாலும் காட்டிய வெறுப்புக்களாலும் அதிர்ச்சியும் கோபமுமடைந்த ரஜினிகாந்த் அதனை பின்னர் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தியிருந்தார் அப்போது பத்திரிகையாளர்களின் கோபத்துக்குள்ளானதும் உண்மை.
பொதுவாக தங்களது உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் நல்ல விடயங்களுக்காகவும் வீதியில் இறங்கி போராடும் மக்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் என்று அரசாங்கங்கள் குற்றஞ்சாட்டி வருவது புதிய விடயமல்ல.
இது சகல நாடுகளிலும் நடந்துவரும் விடயமாகும். ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும்போது அதனை தேச விரோத செயற்பாடுகள் என ஆளும்கட்சி குற்றஞ்சாட்டுவதும் பின்னர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதே குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதும் வழக்கமாகும்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் ஆரம்பம் முதற்கொண்டே பா.ஜ.க மீது மக்களுக்கு நல்லபிப்பிராயம் இல்லை. பா.ஜ.க.வின் செயற்பாடுகள் இந்துத்வா ஆதிக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள், திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டுமென்ற பிரசாரம் உள்ளிட்ட பல விடயங்கள் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
எனவே அண்மைக் காலமாக பா.ஜ.கவினர் “தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்து வருகின்றது. அவ்வாறானவர்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்து வரும் அதேவேளை அவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதையும் தவிர்த்து வருகிறது. இதனையே தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களின் போதெல்லாம் தெரிவித்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க மக்களின் உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் தமிழக வாழ்வுரிமைக்கழகத் தலைவர் வேல்முருகன் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மே- 17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களுக்காக போராடும் இதுபோன்ற தலைவர்கள் தூத்துக்குடி கலவர பூமி சென்று பார்வையிட அனுமதி கோரியபோது அதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
அதேவேளை ரஜினிகாந்துக்கு அரசாங்கம் தூத்துக்குடி செல்ல அனுமதி வழங்கியது. வேல்முருகனும் சீமானும் மக்கள் பிரதிநிதியாகவே தூத்துக்குடி செல்ல அனுமதி கேட்டனர்.
ஆனால் ரஜினி, மக்கள் பிரதிநிதியாக தூத்துக்குடி சென்றாரா? அல்லது அரசின் பிரதிநிதியாக தூத்துக்குடி சென்றாரா? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.
அரசின்மீது கோபமும் அதிருப்தியும் கொண்டுள்ள தூத்துக்குடி மக்களிடம் அரசு பொலிஸாரின் செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் அரசுக்கு எதிரான தப்பான அபிப்பிராயத்தை இல்லாமல் செய்வதற்குமே ரஜினி அங்கு அனுப்பப்பட்டார்.
ரஜினி சென்று சொன்னால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற திட்டத்துடனேயே அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு நடந்ததோ வேறு! மக்கள் ரஜினியை நிராகரித்தனர். எதிர்ப்பையே எதிர்கொண்டு ரஜினி சென்னை திரும்பினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது அது தீவிரமடைவதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று தெரிவித்திருந்த ரஜினி தற்போது தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் தாக்குதலில் முடிவடைவதற்கும் சமூக விரோதிகளே காரணம் என்று கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை எதற்காக மூடும்படி போராட்டம் நடத்தினார்கள். அந்தப்போராட்டம் ஏன் நடத்தப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் ரஜினி சிந்திக்கவில்லை.
இறுதியில் 100நாட்களின் நிறைவில் போராட்டம் எதற்காக உச்சிக்கட்டத்தை அடைந்தது என்பது பற்றியும் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படி உத்தரவிட்டவர்கள் பற்றியும் ரஜினி சிந்திக்கவில்லை. பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியது பற்றியும் சமூக விரோதிகள் செயற்பாடுகளே காரணம் என்றும் கூறியிருக்கிறார்.எடுத்ததற்கெல்லாம் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று பேசியிருக்கிறார். மக்கள் எதற்காக போராட்டம் செய்கிறார்கள்? அவர்களது தேவை என்ன? அவர்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உணராத ரஜினியால் எவ்வாறு மக்களுக்கு தலைமை கொடுக்கமுடியும்? ஒரு மாநிலத்துக்கு எப்படி தலைமை தாங்கமுடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் திராவிடக் கொள்கையில் ஊரிப்போன தமிழக மக்களை திசைத் திருப்புவதற்கு வடஇந்தியாவின் இந்துத்வா ஆதிக்க சக்திகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. போன்ற கட்சிகளும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
ஜெயலலிதா மறைவின் பின்னர் அ.தி.மு.க. ஊடாக அதற்கான முயற்சிகள் மேற்கொண்டதும் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில் திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் பெற்றுள்ளவரும் தமது கொள்கைக்கு சார்பானவருமான ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி குறித்த சக்திகள் தமது திட்டத்தை செயற்படுத்த முனைவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ரஜினியை இயக்கும் சக்திகளின் திட்டத்தை ரஜினி செயற்படுத்த முனைகின்றாரா? அந்தத் திட்டத்துக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பார்களா? என்பதை காலமே தீர்மானிக்கும்.
-நல்லதம்பி நெடுஞ்செழியன்-