பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்?
தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், ‘பொருள் ஆட்சி’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவாகியதாக கூறப்படுகிறது.
சோலையை பொழில்கள் என்று சொல்லப்படும். பொழில்களுக்கு இடையில் சிற்றுார் ஏற்பட்டது. சிற்றுார்களை வாய்ச்சி என்று குறிப்பிடுவது வழக்கம். பொழில்- வாய்ச்சி காலப்போக்கில் மருகி பொள்ளாச்சி என அழைக்கப்பட்டு வருகிறது.
சமவெளி பசுமை மட்டுமல்லாமல், நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு பெற்றுள்ளது பொள்ளாச்சி. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள டாப்- சிலிப்பின் அடர்ந்த காடுகளும் திரைத்துறையின் கேமராக்களை இங்கு கொண்டுவந்து நிறுத்துவதற்கு காரணமாக உள்ளது.
எந்த பகுதியில் கேமராவை வைத்தாலும், அழகான ஒளிப்பதிவை கொடுக்கும் பொள்ளாச்சியை ‘குட்டிக் கோடம்பாக்கம்’ என்றே அழைக்கின்றனர் திரையுலகினர்.
அரை நூற்றாண்டாக நடைபெறும் படப்பிடிப்பு
தமிழக திரைத்துறை அறையை விட்டு வெளியே வந்த காலம் முதல் பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. பாகப்பிரிவினை, விடிவெள்ளி போன்ற கருப்பு – வெள்ளை திரைப்படங்கள் தொடங்கி, ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, ரஜினிகாந்தின் முரட்டுக்காளை உள்ளிட்ட சினிமாக்களின் முழு பதிவுகளும் பொள்ளாச்சியிலேயே காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் சகலகலா வல்லவன், கரையெல்லாம் செண்பகப்பூ, தேவர்மகன், அமைதிப்படை, எஜமான், சூரியன், சூரியவம்சம், தோழர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சினிமாக்கள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன.
தொடர்ந்து தற்போது வரை திரைத்துறையினரை பொள்ளாச்சியின் பசுமை சூழல் ஈர்த்த வண்ணமே உள்ளது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி சினிமாக்களும் பொள்ளாச்சியை அதிகம் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் தொலைக்காட்ச்சிகள் பெருகிவிட்ட இந்த சூழலில் சின்னத்திரை கேமராக்களும் பொள்ளாச்சியில் முகாமிட்டு நாடகங்களை எடுத்து வருகின்றனர்.
பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற பகுதி
பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. அந்த அளவிற்கு பல மாநிலங்களின் திரைத்துறையினர் பொள்ளாச்சியை நாடி வருவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குறைந்த பட்ஜெட்டிற்குள் படங்களை எடுத்து முடிக்க முடியும் என்கிறார் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த விவசாயி ராமபிரபாகர்.
பொள்ளாச்சியை தேடிவரும் திரையுலகினரை அவர்கள் மனநிறைவு அடையும் விதமாக வசதிகளை செய்து கொடுக்கிறோம். எந்தபகுதியில் படப்பிடிப்புகள் நடந்தாலும் பொதுமக்கள் அவர்களை நெருங்கி தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் குறித்த நேரத்திற்குள் இயக்குனர்கள் நினைத்த காட்சிகளை படமாக்க முடிகிறது.
மேலும் படப்பிடிப்பு குழுவினருக்கு தேவையான இடவசதிகள், பொருட்கள், கிராமப்படங்களுக்கு தேவையான வீட்டு விலங்குகள், ஆட்கள் தேவையை பூர்த்தி செய்வது போன்றவை அவர்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்கிறோம்.
நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் தங்குவதற்கான அறைகள், உணவுகள் போன்ற விருந்தோம்பலுக்கும் எங்கள் பகுதியில் குறைவிருக்காது என்கிறார் விவசாயி ராமபிரபாகர்.
இயக்குனர் பார்வையில்
“இப்படியே போனா வீட்டைக்காரன்புதூர் வருங்களா, என்று கையை நீட்டி நடிகர் சுந்தரராஜன் கேட்க, இப்படியே போனா கைவலி தான் வரும்” என்று மணிவண்ணன் கூறும் சூரிய வம்சம் திரைப்படத்தின் வசனங்கள் அனைவரையும் குலுங்க, குலுங்க சிரிக்க வைத்த காட்சி.
அப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவருமான விக்ரமன் பொள்ளாச்சி பகுதியின் சிறப்புகளையும், அனுபவங்களையும் பி பி சி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய இரண்டாவது படமான பெரும் புள்ளியை பொள்ளாச்சியில் படமாக்கினேன். அந்த படத்தின் 80 சதவிகித காட்சிகள் பொள்ளாச்சியிலும், 20 சதவிகித கட்சிகள் மைசூரிலும் எடுக்கப்பட்டது.
படப்பிடிப்புகளுக்கு எல்லா விதமான சூழலும் பொள்ளாச்சியில் உள்ளது. 2008ல் என்னுடைய ‘மரியாதை’ சினிமாவும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருந்தது. அப்போதும் கூட பொள்ளாச்சியில் படப்பிடிப்புக்கு ஏற்ற மிதமான சூழ்நிலையே காணப்பட்டது.
இயற்கை சூழலும், கிராமிய சூழலும் பொள்ளாச்சியில் அதிகமாக உள்ளது. அதே போல் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்றால் டாப்சிலிப், ஆழியாறு, வால்பாறையில் உள்ள அட்டகட்டி போன்ற பகுதிகள் ஏதுவாக இருக்கும்.
நிறைய ஆறுகள் ஓடும் பகுதி, சர்க்கார்பதி போன்ற வனப்பகுதிகள் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்கள். இந்நிலையில், முன்பு உள்ளது போல ஒருசில வனப்பகுதிகளுக்குள் வரும் இடங்களில் அனுமதி வழங்கப்படுவதில்லை.
அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காட்ச்சிகளை எடுத்துக்கொண்டே அருகே உள்ள கேரளா மாநிலம் சாலக்குடி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாடல்களை எடுத்துவிட்டு வந்து மீண்டும் பொள்ளாச்சியில் மற்ற காட்சிகளை படமாக்கலாம்.
அதற்கு அடுத்தாற்போல் மக்களுடைய ஒத்துழைப்பு சிறப்பான ஒன்றாக இருக்கும். அன்பும் பாசமும் நிறைந்த மக்கள் என்பதால் இயக்குனர்களுக்கான பணி மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். அதனால் எனக்கு படப்பிடிப்பிக்கு பிடித்தமான இடமாக பொள்ளாச்சி உள்ளது.
வேறொரு சிறப்பான அம்சம் பொள்ளாச்சியின் கால சூழ்நிலை ஒளிப்பதிவிற்கு ஏற்றதாக இருக்கும். சுமார் ஆறுமாத காலம் காட்சிகளை ஆசாகாக்கும் நீல நிற வானமும், அதனை ஒட்டிய நீல நிற மலைத்தொடர்களும் அதிக ஆசாகை கூட்டுவதாக இருக்கும்.
படப்பிடிப்புக்கு தேவையான இடங்களையும், வீடுகளையும் வழங்குபவர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நம்மை நினைத்துக்கொண்டு அன்புடன் பழகி, பாசத்துடன் உணவையும் சமைத்துக் கொடுக்கும் பண்புடையவர்களாக பொள்ளாச்சி மக்கள் உள்ளார்கள் என்கிறார் இயக்குனர் விக்ரமன்.
மேலும், தமிழ் திரைப்படங்களின் பாடல் காட்சிகளை பார்க்கும் மற்ற மொழி இயக்குனர்களும் பொள்ளாச்சிக்கு வந்து செல்கின்றனர். நான் எடுத்த சூரியவம்சம் படத்தை தற்போதைய கர்நாடக முதல்வர் கன்னடத்தில் தயாரித்தபோது, பொள்ளாச்சி பகுதியிலேயே அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என விரும்பி படமாக்கினார்.
அதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன்கல்யான் சினிமாக்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
சினிமாக்கள் ஏராளம்
முரட்டுக்காளை, தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன், அமைதிப்படை, எஜமான், கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், சகலகலா வல்லவன், சூரியவம்சம், சூரியன், வானத்தைப்போல, தூள், மன்னர் வகையறா, ஜெயம், ஜனா, காதலுக்கு மரியாதை, காசி, மஜா, தமிழன், வேலாயுதம், அரண்மனை, வேல், ஆறு, கொடி, ஷங்கரின் ஐ போன்ற நூற்றுக்கணக்கான சினிமாக்கள் பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகர் உதயா நடிக்கும் உத்தரவு மகாராஜா, விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா, விஷ்ணு நடிக்கும் ஜகஜால கில்லாடி, நடிகர் தீனா நடிக்கும் அஜித் பிரம் அருப்புக்கோட்டை, சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் ஒரு புதிய சினிமாவும் படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், வேலு நாச்சியார், கிராமத்தில் ஒரு நாள், பேரழகி போன்ற தொலைக்காட்சி தொடர்களும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
கிராமிய கதைக்கள சினிமாக்கள் அதிகம்
தென் இந்திய திரைத்துறையில் கிராமிய சூழலில் ஒரு சினிமா படமாக்கப்பதுகிறது என்றால் அதில் பொள்ளாச்சி பகுதிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். ஒரே இடத்தில் வயல், வரப்பு, நதி, புல்வெளி, மலை, காடு, கிராம குடியிருப்புகள், கோவில்கள், குளங்கள், இருபுறமும் மரங்களை கொண்ட குகை போன்ற அமைப்புடைய அழகிய சாலைகள் என பொள்ளாச்சியின் அழகிய அமைப்பை சொல்லிக்கொண்டே போகலாம் .
பொள்ளாச்சியை படப்பிடிப்புதளமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக நாட்கள் ஓடி வெற்றி படங்களாகவும் ஆனதால் திரையுலகினர் பொள்ளாச்சியை அதிர்ஷ்டமாக பார்கின்றனர்.