“நெல்சனை எனக்கு ஆறு வருடங்களாத் தெரியும். அப்ப அவர் `வேட்டை மன்னன்’ படம் பண்ணிட்டு இருந்தார். சிலபல காரணங்களால் அது பாதியிலேயே நின்னுடுச்சு.
திறமையானவங்களோட வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர தவிர்க்கமுடியாதுனு சொல்லுவாங்கள்ல அது, இந்தப் படம் மூலம் நிரூபணமாகும். என் எல்லா கான்சர்ட்களையுமே நெல்சன்தான் டைரக்ட் பண்ணி ஷூட் பண்ணிட்டு இருக்கார்.
அப்படி ஒரு கான்சர்ட் சமயத்துலதான் `கோலமாவு கோகிலா’ கதையை என்கிட்ட சொன்னார். ஹீரோவை மையப்படுத்தின படங்களையே பண்ணிட்டு இருந்த எனக்கு ஹீரோயினை மையமா வெச்சு அவர் சொன்ன இந்த ஸ்கிரிப்ட் செமயா இருந்துச்சு. பிறகு நயன்தாராட்ட சொன்னார்.
அவங்களுக்கும் கதை பிடிச்சிருந்தது. பிறகு லைகா நிறுவனத்துகிட்ட பேசினார். அவங்களும் ஓகே சொன்னாங்க. இப்படித் தயாரிப்பாளர், ஹீரோயின், மியூசிக் டைரக்டர்னு மூணு பேரையும் தன் கதையைச் சொல்லி ஆஃப் பண்ணி டேக் ஆஃப் ஆனதுதான் இந்தக் `கோலமாவு கோகிலா.” – இயல்பாகவும் எளிமையாகவும் பேசுகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
வீட்டிலிருந்து ஆழ்வார்பேட்டை ரெக்கார்டிங் ஸ்டுடியோவரை விரட்டிவந்த இளைஞர்களுக்காக செல்ஃபிக்குப் போஸ் தந்தபடி நம்மை வரவேற்கிறார்.
`ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்து கடத்தி விற்பனை செய்து வாழலாம்னு முடிவு பண்றாங்க. அவங்களோட இந்த எண்ணம் நிறைவேறுச்சா இல்லையா என்பதுதான் `கோகோ’ கதையின் கான்செப்ட்.
இதை நெல்சன் டார்க் ஹியூமர் ஜானர்ல காமெடியா பண்ணியிருக்கார். ஸ்கிரிப்ட் புக்கைப் படிக்கும்போது வொர்க்கவுட் ஆகிற காமெடி சமயங்கள்ல ஸ்கிரீன்ல பார்க்கும்போது டிராஜடியா இருக்கும்.
ஆனா, நெல்சன் இந்தக் கதையைச் சொன்னப்ப இருந்த காமெடியைவிட ஸ்கீரின்ல பார்க்கும்போது செமையா வொர்க்கவுட் ஆகியிருந்தது.”
`நயன்தாரா இதில் எப்படி நடிச்சிருக்காங்க?”
“நயன்தாரா சினிமாவை விட்டுப்போய் திரும்பி வந்த சமயம். அப்ப சிவகார்த்திகேயன் ‘எதிர்நீச்சல்’ல சோலோ ஹீரோ. அதில் ஒரு பாட்டுக்கு ஆடணும்னு கேட்டதும் ஒப்புக்கிட்டாங்க.
அந்தப் பாட்டுல நானும் ஒரு சீன் வருவேன். அங்கதான் முதல்ல பார்த்து பேசிகிட்டோம். பிறகு, ‘நானும் ரௌடிதான்’ சமயத்துல ஃப்ரெண்டானோம். பெர்சனலா அவங்க ரொம்ப நல்ல கேரக்டர்.
நல்ல மனுஷி. ப்ரியமா இருப்பாங்க. அவங்களுக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ‘நான் உங்க பெரிய ஃபேன்’னு மெசேஜ் அனுப்புவாங்க. சமயங்கள்ல விருந்து லெவல்ல சாப்பாடு சமைச்சு அனுப்புவாங்க.
அவங்க லைஃப்ல அவ்வளவு ஏற்ற இறக்கங்கள். ஆனால், இன்னும் தன்னை டாப் லெவல் ஹீரோயினா மெயின்டைன் பண்றாங்கன்னா அது பாராட்டப்படவேண்டிய விஷயம். மாயா, அறம், கோலமாவு கோகிலா’னு அவங்களோட கதைத் தேர்வு நல்லா இருக்கு. இந்தப் படத்தைப் பார்க்கும்போது அது உண்மைனு உங்களுக்குப் புரியும்.”
“ ‘கோகோ’ ஆல்பத்துல என்ன ஸ்பெஷல்?”
“மொத்தம் ஆறு பாடல்கள். ஆறுமே ஏற்கெனவே ஷூட் பண்ணிய மான்டேஜ் காட்சிகளுக்கு நான் பாட்டு போட்டிருக்கேன். வறுமையினால் கோகிலா கஷ்டங்களை அனுபவிக்கும்போது வரும் ஆரம்பப் பாட்டு, கடத்தலில் இறங்கும்போது ஒரு பாட்டு, அவங்களை ஒடுக்கும்போது வரும் மாஸ் பாட்டுனு ஆறுமே கதையை நகர்த்திச் செல்லும் பாடல்கள்தான்.”
“பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் எழுதி கல்யாண வயசு பாட்டு பின்னணி சொல்லுங்க?”
“ஆரம்பத்தில் அந்தப்பாட்டே படத்துல கிடையாது. ஆனால், ஸ்கிரிப்ட்படி நயன்தாராவை யோகிபாபு ஒன்சைடா லவ் பண்ணுவார். அதுவும், ‘என்னை நூற்றுக்கணக்கான பெண்கள் ஃபாலோ பண்றாங்க. அப்படி இருந்தும் நான் உன்னை தேர்ந்தெடுத்திருக்கேன்னா, நீ ரொம்ப லக்கி’னு கெத்தா லவ் பண்ணுவார்.
யங்கான லவ் சாங்க. ‘சிவகார்த்திகேயனுக்கு லவ் சாங் பண்றமாதிரி யோகிபாபுவுக்கும் நயன்தாராவுக்குமான இந்தப் பாட்டை யூத்தா பண்ணினா எப்படி இருக்கும்’னு ஒரு ஐடியா தோணுச்ச. நெல்சன்ட்ட சொன்னேன்.
அந்த ட்யூனும் ஏற்கெனவே என்கிட்ட இருந்தது. அதை சிவாவே எழுதினா நல்லா இருக்கும்னு நினைச்சு சொன்னோம். அவரும் நட்புக்காக பண்ணித்தந்தார்.
ஒவ்வொரு வருஷமும் நானும் சிவாவும் சேர்ந்து ஒர்க் பண்ற படங்கள் வந்துட்டு இருந்துச்சு. ஆனால், இந்த வருஷம் அது மிஸ்ஸிங். எங்க காம்போவை மிஸ் பண்றோம்னு நினைக்கிறவங்களுக்கு இந்தப்பாட்டு ஓர் ஆறுதல். இதில் ஹைலைட்டே நயன்-யோகிபாபு போர்ஷன்தான்.
நிறைய ஹீரோஸ் நயனை ஃபாலோ பண்ணி பார்த்திருப்போம். தன்னை ஃபாலோ பண்ற யோகிபாபுவை எப்படி தன் கடத்தல்ல நயன் கூட்டு சேர்த்துக்குறாங்கனு இரண்டு பேருக்குமான போர்ஷன் செம ஃபன்னா இருக்கும்.”
``தனுஷ், விக்னேஷ் சிவன், இப்ப சிவகார்த்தினு நண்பர்களோட சேர்ந்து பாட்டு பண்ற ப்ராசஸ் எப்படி இருக்கும்?”
“நம் மியூசிக் ஒர்ககவுட் ஆகுதுன்னா அதுக்கு டியூனோட சேர்த்து வரிகளும் முக்கியக் காரணம். சீரியஸா எழுதும் கவிஞர்களோட ஒர்க் பண்ணும்போது அவங்க டியூனை எடுத்துட்டுப்போய் பாடல்களை யோசிச்சு எழுதி எடுத்துட்டு வருவாங்க.
‘நானும் ரௌடிதான்ல ‘நீயும் நானும்’ பாட்டுக்கு தாமரை நிறைய டைம் எடுத்து.. எழுதித் தந்தாங்க. செமயா இருந்துச்சு. இதில் விவேக் அப்படி ஒரு பாட்டு எழுதியிருக்கார்.
யோகிபாபு-நயன்தாரா ஒரு சாங்குக்கு ஓவரா யோசிச்சு பண்ணினா அந்த இம்பாக்ட் இருக்காது. ஏன்னா அந்தக் களமே ஃபன்தான். அப்படித்தான் ‘3’ படத்தில் தனுஷ் எழுதினார். ‘ஒய்திஸ் கொலவெறி’ங்கிற அந்த லைனை கேட்டதுமே சிரிப்பு வருதில்லையா.. இதை ஒரு யங்ஸ்டர் பல்ஸ்னுகூட சொல்லலாம்.”
“தனுஷ் உடனான இந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?”
“இப்ப அவர் சினிமாவே டைரக்ட் பண்ணிட்டார். ஆனா அப்ப அவர் ஷார்ட் ஃபிலிம் எடுப்பார். அதுல அவர் ஷூட் பண்ணும்போது நான் நடிப்பேன். நான் ஷூட் பண்ணும்போது அவர் நடிப்பார்.
அப்படி ‘3’ படம் எடுக்குறதுக்கு 2 வருஷத்துக்கு முன்பு. ஹாரர், காமெடி, லல்னு வெவ்வேற ஜானர்கள்ல கிட்டதட்டட 10 குறும்படங்கள் பண்ணினோம். இதன்மூலம் அவர் டைரக்ஷன்ல ட்ரெயின் பண்ணிக்கிட்டார்.
நான் மியூசிக் டைரக்டர் ஆக ட்ரெயின் ஆகிட்டு இருந்தேன். அவர் கதை. நான் மியூசிக். எடிட் எல்லாமே என் சிஸ்டம்லதான் நடக்கும். அதுக்குதான் முதல்ல ஒன்டர்ஃபார் ஃபிலிம்ஸ்னு வேர் வெச்சோம்.
ஃபேமிலியில உள்ள 10 பேர்தான் அதுக்கு ஆடியன்ஸ். அப்படி பைபோலார் டிஸ்ஆர்டரை வெச்சு எடுத்த ஷார்ட் ஃபிலிம்தான் ‘3’. ‘போ நீ போஸ’ பாட்டெல்லாம் அந்த ஷார்ட் ஃபிலிம்லயே இருந்தது. நாங்க எடுத்த 10 ஷார்ட் ஃபிலிம்லயே 25 பாடல்கள் இருக்கும். 20 நிமிஷ படமா இருந்தாலும் அதுலயும் 2 பாடல்கள் இருக்கும்.
இதுக்கிடையில் ‘3‘ ஷார்ட் ஃபிலிமை ஐஸ்வர்யா முழு நீள சினிமாவா டைரக்ட் பண்ணினாங்க. அப்ப, ‘ஏற்கெனவே ஷார்ட் ஃபிலிமுக்கு மியூசிக் பண்ணின அனியே படத்துக்கும் பண்ணினா சூப்பரா இருக்கும்’னு தனுஷ்தான் சொன்னார்.
அப்ப எனக்கு 18 வயசு. காலேஜ் 2-வது வருஷம் படிக்கிறேன். ‘நான் யார்ட்டயும் அசிஸ்டென்டா இருந்தது இல்லை. அந்த முன்அனுபவம் இல்லாம பண்ணமாட்டேன்’னு சொன்னேன்.
‘என்னை நம்பி பண்ணு. கத்துக்கலாம்’னு தனுஷ்தான் என்னை பண்ணவெச்சார். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம். கொலவெறி க்ளோபல் ஹிட். எல்லா லாங்குவேஜ்லயும் படம் பண்ணச்சொல்லி கேட்பாங்க.
ஆனால் ‘3’ படம் சரியா ஓடாததால எனக்குள் சின்ன ஜெர்க். அப்படியே அமைதியா இருந்துட்டேன். ஒரு வருஷம் நான் படமே பண்ணலை. அப்பதான் வெற்றிமாறனின் அசோஸியேட் துரை செந்தில் ஒரு கதை சொல்றார். ‘இந்த ஒரே ஒரு படம் பண்ணுவோம். இதை ஹிட் பண்ணினாதான் நம் கரியர்’னு நினைச்சு பண்ணினதுதான் ‘எதிர்நீச்சல்’.
இதற்கிடையில் தனுஷுக்கு இரண்டு மூணு படங்கள் சரியா போகலை. அதனால இதுல அடிச்சே ஆகணும்னு ‘வேலையில்லா பட்டதாரி’ பண்ணினோம்.
படம், பாடல்கள் பெரிய ஹிட். ‘மாரி’ படமும் ஆல்பமா பெரிய ஹிட். கதை ஐடியாவுல இருந்து லாஸ்ட் ஃபைனல் அவுட் தியேட்டருக்கு வர்ற வரை நானும் தனுஷும் ஒண்ணாவே ஒர்க் பண்ணுவோம்.
இப்படி அவர்கூட ஒர்க் பண்றதே செம ஜாலியா இருக்கும். “நீ மியூசிக் டைரக்டரா ஆகலாம்’னு என்கிட்ட முதன்முதல்ல சொன்னது அவர்தான். நான் நிறைய கம்போஸ் பண்ணுவேன். அவை எல்லாமே சினிமாவுக்கான தகுதிகள்ல இருக்குனு அடையாளம் கண்டதும் அவர்தான்.”
“ ‘அப்படியிருந்த உங்களுக்கும் தனுஷுக்கும் இடையில் என்னதான் பிரச்னை? திரும்பவும் சேர்ந்து படம் பண்ணுவீங்களா?”
`
`எங்களைப் பொறுத்தவரை இது ஒரு பிரேக். ஆமாம், அவசியமான, ஆரோக்கியமான இடைவெளி. வெவ்வேற ஆட்களுக்கு பண்ணும்போதுதான் அது புதுசா இருக்கும். அஜித் சாருக்கு முதல்முறையா ‘ஆளுமா டோளுமா’ போடும்போதுதான் அது நல்லாயிருக்கும்.
அதேபோல சூர்யா சாருக்கு ஒரு ‘சொடக்கு’ போடும்போதுதான ஃப்ரெஷ்ஷா இருக்கும். அதே ‘சொடக்கு’ பாட்டை ஏற்கெனவே பண்ணின ஹீரோவுக்கே திரும்பவும் பண்ணியிருந்தா இந்தளவுக்கு ஒர்க்கவுட் ஆகாதோனு தோணுது. அதனாலதான் இந்த பிரேக். ஆனால், இந்த பிரேக் ரொம்பப் பெருசாகிடுச்சு. நாங்க மறுபடியும் சேரும் படத்துக்கான அறிவிப்பு 2019 ஜனவரியில இருக்கும்.”
“ ‘காலா’ படத்தைத் தொடர்ந்து ரஜினி பண்ணும் படத்துக்கு நீங்கதான் மியூசிக் டைரக்டர். எப்படி இருக்கு அந்த உணர்வு?”
“தலைவர் படம் ஒண்ணு பண்ணணும்’ என்பதுதான் எல்லா டெக்னீஷியன்களின் கனவும். என் கனவும் அதுதான். மூணு நாலு வருஷங்களுக்கு முன்னாடி இருந்தே அதுக்காக காத்துட்டு இருக்கேன்.
‘அவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சப்பிறகு சினிமாவுல நடிக்கிறதையே நிறுத்திட்டார்னா இனி நமக்கு அந்த வாய்ப்பே வராதோ’னுகூட நினைச்சு பயந்திருக்கேன்.
டைரக்டர் கார்த்திச் சுப்பராஜ் போன் பண்ணி பேசினது செம சர்ப்ரைஸ். இதுதான் என் கரியோட பீக். இது, ஐந்து வருஷமா ஹிட் ஆல்பங்கள் கொடுத்ததுக்கான ஒரு பரிசு.
இந்த டைம்ல நல்ல மியூசிக்கை டெலிவர் பண்ணிட்டோம்னா வாழ்க்கைபூரா திருப்தியா இருக்கலாம். அதேநேரம் மனசுக்குள்ள பெரிய பயமும் இருக்கு. ஆனால், கார்த்திக் சுப்பராஜும் தலைவர் ஃபேன். அவர் ஒரு ரசிகர் மனநிலையில இருந்து ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். எனக்கும் ஒரு ரசிகனா நிறைய ஆசைகள் உண்டு. இந்த இரண்டும் சேரும்போது மியூசிக் நல்லா வரும்னு தோணுது. வேலைகளை ஆரம்பிச்சிட்டேன்.”
“இதுபற்றி ரஜினி என்ன சொன்னார்?”
“என் சின்ன வயசுல போயஸ்கார்டன்ல சார் வீட்லதான் அதிகநேரம் இருப்பேன். அங்க ஒரு பியானோ இருக்கும் அதுல வாசிச்சுட்டே இருப்பேன். அந்த நாலு வயசுல நான் வாசிக்கிறதைப் பார்த்துட்டு சார் என்னை எப்பவும் ஜீனியஸ்னுதான் கூப்பிடுவார்.
தவிர 18 வயசுலயே சக்சஸ்ஃபுல்லான மியூசிக் டைரக்டரா இருக்கிறதுல அவருக்கு ரொம்பப் பெருமை. போன் பண்ணி என்னென்ன பாடல்கள் இப்ப நல்லா போயிட்டு இருக்குனு கேட்பார்.
ட்ரீட்மென்டுக்காக அமெரிக்கா போயிட்டு வந்தப்ப ‘நானும் ரௌடிதான்’ ரிலீஸ் ஆகியிருந்த சமயம். ‘ஃபுல்லா உங்க பாடல்களைதான் கேட்டுட்டு இருக்கேன். செமயா இருக்கு’னார்.
எப்பவுமே இப்படி என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். அவர்ட்ட இருந்து சின்னச்சின்னதா நிறைய கத்துகிட்டே இருக்கேன். இந்த அறிவிப்புக்குப்பிறகு ரஜினி சார் பேசினார். ‘அனி சூப்பர், ரொம்ப ஹேப்பி. தூள் கிளப்பிடுவோம்’னார். கிளப்பணும்.”
“குறிப்பிட்ட இடைவெளியில சர்ச்சைகள்ல சிக்குறது உங்க வாடிக்கை. இதுக்கு வீட்ல உள்ளவங்க என்ன சொல்றாங்க?”
“நமக்கும் சர்ச்சைக்கும் ஏதோ போன ஜென்மத்து சகவாசம்னு நினைக்கிறேன். பாட்டு, படம், போட்டோ, வீடியோனு. ஒவ்வொரு வருஷமும் ஒரு குருமா நடக்கும்.
ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. கிஸ் பண்ற போட்டோ வெளியில வந்த அந்த சமயத்துல நான் ஊர்லயே இல்லை. மியூசிக் மியூசிக்னு இருந்த என்னால முதல்முறையா அப்படி ஒரு பிரச்னை வந்ததும் சமாளிக்கவே முடியலை.
ஃப்ளைட் புடிச்சு பாம்பே பறந்துட்டேன். சென்னை திரும்பினப்பிறகுக்கூட எங்கயும் வெளியே போகலை. இரண்டு மாசம் ஆச்சு. நான் படிச்ச லயோலா காலேஜ்ல சீஃப் கெஸ்டா கூப்பிட்டாங்க. இங்கதான்டா நாம எஸ்கேப் ஆகமுடியும்னு கிளம்பிப் போனேன்.
அங்கயும் 10 பேர்கொண்ட வேற காலேஜ் கும்பல், ‘ஸஸ’ கத்த ஆரம்பிச்சுட்டாங்க.‘ஏங்க ஒரு பொண்ணை அவங்க சம்மதத்தோட கிஸ் பண்ணினதுல என்னங்க தப்பு’னு சொன்னேன். அலறிட்டாங்க. அப்பாடாஸ இதோட முடிஞ்சுதுடானு நினைச்சேன். ஆனா இப்ப சர்ச்சைகள் சாதாரணமாயிடுச்சு. நமக்கு கல்யாணம் ஆகுறவரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கு.”
“நீங்களே லீட் கொடுத்துட்டீங்க. சொல்லுங்க, எப்ப கல்யாணம்?”
“ ‘ரொமான்ஸா மியூசிக் போடுறான். பயங்கரமா லவ் பண்ணிட்டு இருப்பான்’னு நினைக்கிறாங்க. ஆனா ரியாலிட்டி வேற. இரண்டு டீம் பிரிச்சு கிரிக்கெட் விளையாடுற அளவுக்கு எப்பவும் ஸ்டுடியோ முழுக்க ஆம்பளை பசங்க மட்டும்தான்.
ஆனா, மனசுக்குப் பிடிக்கிற பெண்ணை தேடிப்பிடிச்சு அவங்களோட கொஞ்ச நாள் டிராவல் ஆனாதான் தெரியும். அந்தத் தேடலுக்கான வயசு, அதாவது அந்த கல்யாண வயசு இன்னும் வரலைனு நினைக்கிறேன்.”
“அனிருத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள். குறிப்பா 25 வயசுக்குள் உள்ள இளைஞர்கள். எப்படி சமாளிக்கிறீங்க?”
“அதுதான் சார் எனக்கும் புரியலை. வெளிநாடு கான்சர்ட்போனா, வந்திருக்கிற 100 சதவிகிதத்துல 75 சதவிகிதம் பொண்ணுங்கதான். அதுவும் 10 வயசுல இருந்து 25 வயசுக்குள் உள்ளவங்க.
அதுதான் பிளஸ்ஸிங். ஏன்னா அவங்கதான் நம்மக்கூட ரொம்ப நாள் பயணப்படுவாங்க. அதுக்கு நம் வயசும் ஒரு காரணம். எனக்கு இப்ப 27 வயசு. என்னைத்தாண்டியும் இப்ப இன்னொரு ஜெனரேஷன் வந்துடுச்சு.
அதனால என் மியூசிக் ட்ரூப்ல அந்த யங் ஜெனரேஷன்ல இருந்தும் ஒருத்தரை சேர்த்துப்பேன். அவன் என்னெல்லாம் கேக்குறான், அவன் மைண்ட்செட் என்னஸ நான் அப்டேட்ல இருக்கிறதுக்கு தொடர்ந்து யங்ஸ்டர்கூட டிராவல் பண்ணுவதும் ஒரு காரணம்.
அதனால அவங்களுக்குனு நேரம் ஒதுக்கிடுவேன். ‘அனிஸ அனி’னுஸ வீட்ல இருந்து வரும்போதே ஸ்டூடியோ வரை ஃபாலோ பண்ணிட்டு வருவாங்க. விறுவிறுனு உள்ளப்போயிட மாட்டேன்.
அவங்களுக்குனு சில நிமிஷங்கள் ஒதுக்கி செல்ஃபி எடுத்துப்பேன். இவ்வளவு பெரிய வாழ்க்கையைத் தந்த அவங்களுக்காக இதைக்கூட பண்ணலைனா எப்படி? ஆனா ஃபாரின்ல பலர் என் முகத்தை முதுகில் டாட்டூ குத்திக்கிறதைப் பார்த்ததும் பதறிட்டேன். ‘அன்பு ஓகே. ஆனால் இப்படி பண்ணக்கூடாது’னு அட்வைஸ் பண்ணுவேன்.”
“ மற்ற இசையமைப்பாளர்கள் இசையில பாடுறீங்க. அவங்கக்கூட உங்களுக்குள்ள நட்பு எப்படி இருக்கு?”
“மத்தவங்க மியூசிக்ல அடிக்கடி பாடினா உங்க எக்ஸ்க்ளூசிவிட்டி போயிடும்’னு சொல்லுவாங்க. ஆனா நான் பாடுறதுக்காக இங்க வரலையே. மியூசிக் டைரக்ட்ரா ஆகணும்னு வந்தேன். ஆகிட்டேன்.
நான் பாடுவது மூலம் அந்தப் படத்துக்கோ பாட்டுக்கோ எக்ஸ்ட்ரா ஃபூஸ்ட் கிடைக்கும்னா நிச்சயம் பாடிடுவேன். தவிர நமக்கும் யூடியூப்புக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்கு. எங்கப்போனாலும் பாடுறதை மேக்கிங்கா எடுத்து பப்ளிசிட்டிக்கும் பயன்படுத்திக்கிறாங்க.
பாடுறது என் தொழில் கிடையாதுங்கிறதால பாடுறதுக்கு காசும் வாங்குறது இல்லை. ஆமாம், மனரீதியா இப்படி பண்றதால நல்ல பேரை சம்பாதிக்கிறேன். அந்த குட்வில்லால்தான் என் மியூசிக் நல்லா இருக்கும்னும் மனரீதியா ஃபிக்ஸ் ஆகிட்டேன்.
கூப்பிடுறது ரஹ்மான் சாரா இருந்தாலும் புதுசா வர்ற அறிமுக இசையமைப்பாளரா இருந்தாலும் சரி, யார் கூப்பிட்டாலும் போய் பாடிட்டு வந்துடுறேன்.
அவ்வளவு ஏன் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பமா இருந்தாலும் ஓகே. பாடிடுவேன். அப்படி பாடுற பாடல்களும் ஒர்க்கவுட் ஆகுது.ரேடியோவை ஆன் பண்ணினா, ஒண்ணு நாம போட்ட பாட்டு வருது, இல்லைனா நாம பாடின பாட்டு வருது.
இது நல்லா இருக்கு. தவிர அவங்கக்கூடலாம் ஒர்க் பண்ணும்போது அவங்கள்ட்ட இருந்து நிறைய விஷயங்களை நான் கத்துக்கிறேன். என் பல ரிக்கார்ட்டிங், ரஹ்மான் சார் ஸ்டுடியோவுல பண்ணியிருக்கேன்.
‘ரெமோ’ வரைக்கும் கேட்டுட்டு, ‘இது சூப்பரா இருக்கு’னு சொன்னார். நான் 90கள்ல பிறந்த பையன். அவரைப் பார்த்து வளர்ந்தவன். அவரோட மியூசிக் இன்ஸ்பிரேஷன்லதான் வந்திருக்கேன்.
அவரே நம்மை அப்ரிஷியேட் பண்ணும்போது செமயா இருக்கு. அப்ரிஷியேட் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன் என்பதைவிட, இவ்வளவு உயரம் போயும் அப்ரிஷியேட் பண்ற மனசை அவர் தக்க வெச்சிருக்கார் என்பதுதான் முக்கியம்.”
“கொள்ளுத்தாத்தா, தாத்தா, பாட்டினு உங்க குடும்பத்துல பலரும் கலைத்துறை முன்னோடிகள். அவங்களை நினைத்துப்பார்த்து பிரமிப்பது உண்டா?”
“இயக்குநர் கே.சுப்ரமணியம், எங்க கொள்ளுத்தாத்தா. தமிழ் சினிமாவை கட்டமைத்த முன்னோடிகள்ல ஒருத்தர். தியாகராஜ பாகவதர் அறிமுகமான ‘பவளக்கொடி’தான் அவரின் முதல்படம்.
அவருக்கு 12 பசங்க. அதில் ஒருவர்தான் எங்க தாத்தா எஸ்.வி.ரமணன். இதே பில்டிங்லதான் அவர் ஸ்டுடியோ வெச்சிருந்தார். ஒவ்வொரு நாளும் 20 ரேடியோ ஸ்பாட். அந்த ஜிங்கில்ஸுக்கு பல மியூசிக் டைரக்டர்கள்ல வாசிச்சிருக்காங்க.
அன்னைக்கு ரேடியோ விளம்பரங்கள்ல வந்த அவரோட வாய்ஸ் ரொம்பவே பிரபலம். பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியன், இவரின் யங்கர் சிஸ்டர்.
அப்பா சைடுல ரஜினி சார் மாதிரி நிறைய சினிமா நடிகர்கள். பண்டிகைகள்ல சந்திக்கும்போது பழைய விஷயங்கள் பேசுவோம். அவங்க எல்லாருமே என்னைப்பற்றி பெருமையா நினைக்கிறது எனக்கு சந்தோஷம்.
`இந்த ஒல்லிக்குச்சி உடம்பை எப்படி மெயின்டைன் பண்றீங்க?”
“உண்மையைச் சொன்னா நான் நிறைய சாப்பிடுவேன். ஆனால், உடம்பு அப்படியே இருக்கு. தவிர எனக்கு ஜிம்முக்குப் போற பிராக்டீஸ் கிடையாது. ஆனால், ஸ்கூலிங்ல இருந்தே நான் பேஸ்கட்பால் பிளேயர்.
சென்னை டீமுக்கெல்லாம் விளையாடியிருக்கேன். 10-ம் கிளாஸ்ல சன் டி.வியில ‘ஊலல்லா’னு ஒரு மியூசிக் காம்படிஷன். ரஹ்மான் சார்தான் ஜட்ஜ். அதில் எங்க பேண்ட்தான் வெற்றியாளர்.
அதுல இருந்து தொடர்ந்து மியூசிக் மியூசிக் மட்டும்தான். பிறகு சிவகார்த்திகேயன் டீமுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன். இப்ப ஒருநாளைக்கு 2 மணிநேரம் மறுபடியும் பேஸ்கட் பால் விளையாட ஆரம்பிச்சிருக்கேன். விளையாடிட்டு வந்தாலே மனசு, உடம்பு ரெண்டுமே ரிலாக்ஸா இருக்கு.”
“இந்த இசைப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும்போது எப்படி இருக்கு? உங்க லைஃபை மாற்றிய தருணம்னு எதைச்சொல்லுவீங்க?”
“30 வயசுக்குள்ள இசையமைப்பாளரா ஆகணும் என்பதுதான் என் லட்சியம். அப்ப நான் நல்லாவும் படிப்பேன். எங்க அப்பா ஒரு பேங்கர். எனக்கு சிங்கப்பூர்ல ஒரு நல்ல ஃபினான்ஸ் கோர்ஸ் கிடைச்சது. அப்ப நான் எடுத்த முடிவுதான் இன்றைய என் நிலைக்குக் காரணம். ‘இங்கேயே ஒரு டிகிரி பண்றேன். அந்த மூணு வருஷத்துல மியூசிக்ல ஏதாவது கிடைச்சிடுச்சுன்னா. இங்கேயே செட்டிலாகிடுறேன். இல்லைனா நீங்க சொல்றபடி ஃபாரின் போறேன்’னு சொன்னேன். அவரும் ஒப்புக்கிட்டார். பிறகு லயோலா காலேஜ்ல சேர்ந்தேன்.
இதுக்கு முன் அரவிந்த்னு என் நெருங்கிய நண்பன், ஸ்கூல்ல இருந்து ஃப்ரெண்ட். ‘மச்சான் நான் ஒருநாள் மியூசிக் டைரக்டராகிடுவேன். நீ போய் சவுண்ட் இன்ஜினீயர் படிச்சிட்டுவா’னு சொன்னேன்.
அவனும் டெல்லி போய் சவுண்ட் இன்ஜினீயரிங் கத்துக்கிட்டு இருந்தான். அந்த சமயத்துல காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல ‘3’க்கு முன் ஒரு படம்ல கமிட் ஆனேன்.
‘எனக்கு படம் கிடைச்சிடுச்சு. வாடா மச்சான்’னு அரவிந்தை கூப்பிட்டேன். அவனும் வந்தான். ஆறேழு மாசம் பரபரப்பா ஒர்க் பண்ணி ஆறு பாடல்கள் முடிச்சோம். ஆனால், திடீர்னு அந்தப் படத்தை அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. வீட்ல விஷயத்தைச் சொன்னேன். ‘ஒண்ணும் பிரச்னையில்லை. டிகிரியை இங்க முடி. ஃபாரின்ல போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சு இன்வெஸ்மென்ட் பேங்கராகிடலாம்’னாங்க.
அப்ப அரவிந்த் ஒரு ஐடியா சொன்னான். ‘நான் இந்த ஃபேமிலியை சேர்ந்தவன்னு சொன்னாதானே தப்பாகும். அதனால ஸ்கூல் தொடங்கி நீ இன்னைக்கு வரை பண்ணின பாடல்கள் எல்லாத்தையும் சிடியா போட்டு டைரக்டர்களுக்கு கொடுப்போம்’னு சொன்னான்.
அப்ப கௌதம்மேனன் தொடங்கி ஷங்கர் சார் வரை இன்னைக்கு பரபரப்பா ஒர்க் பண்ணிட்டு இருக்கிற எல்லா இயக்குநர்கள்ட்டயும் அந்த சிடியை கொடுத்தோம். அதுல இரண்டு பேர், ‘நல்லா இருக்கு பண்ணலாம்’னும் சொன்னாங்க. ஆனால், அவை எதுவும் படமா உருவாகலை.
ஸ்கூல் நாள்ல இருந்தே என் டீமுடன் கல்யாண கச்சேரிகள் வாசிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால வீட்ல பாக்கெட் மணி வாங்கினதே கிடையாது- ஆனால் காலேஜ் முதல் வருஷத்துல ‘படம் பண்றேன்’னு பேண்ட்ல வாசிக்கிறதையும் விட்டுட்டேன்.
இதனால காசுக்கும் வழி இல்லை. வீட்ல கேட்கவும் கூச்சமா இருக்கும். வெளியில சுத்திட்டு பசிக்கும்போது கபாலீஸ்வரர் கோயில் போய் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு சமாளிச்சதும் உண்டு.
காலேஜ் இரண்டாவது வருஷத்துலதான் ‘3’ படத்துல கமிட் ஆனேன். ‘கத்தி’ படம் பண்ணும்போது அரவிந்த் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான். இப்பயும் ஏதாவது ட்யூன் வரலைனாஸ என் கீபோர்ட் மேல இருக்கிற அவனோட போட்டோவைப் பார்ப்பேன். ‘உன்னால முடியும்டா மச்சான்’னு அவன் என்னை அடுத்தகட்டம் நோக்கி தள்ளுறமாதிரியே இருக்கும். மத்தவங்க நலன்ல அக்கறையுள்ள அவனைமாதிரியான ஆட்கள் கிடைக்கிறது ரொம்பவே அரிது.
இப்ப யோசிச்சுப்பார்த்தா, நான் அந்த பிசினஸ் கோர்ஸை தவிர்த்ததும், முதல் படம் ஒர்க் பண்ணி நின்னுபோனப்ப அரவிந்த் என்கூட இருந்தும்தான் என். லைஃப் சேஞ்சிங் மொமன்ட்னு சொல்லத்தோணுது. அதையெல்லாம் இப்ப யோசிச்சா, ‘நீ கெத்துதான்’னு தோணுது. இதை தலைகணத்துல சொல்லலை; தன்னம்பிக்கையில் சொல்றேன்.”