சுஷ்மிதா சென்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற 15 வயது சிறுவன்
24 May,2018
மும்பை : இந்தி திரைப்பட நடிகையும், பிரபஞ்ச அழகிப்பட்டம் வென்றவருமான சுஷ்மிதா சென்னிடம் 15வயது சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிறுவனம் சார்பில் ஒரு அழகுசாதனப் பொருள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகை சுஷ்மிதா சென் (வயது 42) பங்கேற்று அந்தப் பொருளை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடன், நடிகை சுஷ்மிதா சென் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, நாட்டின் பெண்களின் பாதுகாப்பு தற்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகை சுஷ்மிதா சென், கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டத்தினர் மத்தியில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து வேதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் அளித்தால் அவர்களால் பதிலுக்கு எதிர்வினையாற்ற முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சம்பவத்தை இங்கு நான் நினைவுகூறுகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தேன். எனக்குப் பாதுகாப்பாக என்னைச் சுற்றி 10 பாதுகாவலர்கள் இருந்தார்கள். நான் அப்போது, அங்கு வந்திருந்த நடிகைகள், நடிகர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
மேலும் கூட்டத்தினரும் அதிகமாக இருந்தனர். அப்போது எனக்குப் பின்னால் நின்று இருந்த ஒருவர் என்னை பாலியல் சீண்டல் செய்தார். கூட்டமாக நின்றிருந்ததால், கைகள் உடலில் படும்எ எனத் நினைத்திருந்தேன். ஆனால், தொடர்ந்து எனக்குச் சீண்டல்கள் அதிகமாகவே நான் கூர்ந்து கவனித்து எனக்குப் பின்புறம் இருந்த நபரின் கைகளைப்பிடித்தபோது அதிர்ந்துவிட்டேன்.
15வயது சிறுவன் எனக்கு பாலியல் சீண்டல் கொடுத்திருந்தான். அந்த சிறுவனின் செயல் மன்னிக்க முடியாதது. உடனடியாக அந்த சிறுவனின் கழுத்தைப்பிடித்துத் தள்ளிக்கொண்டு சிறிது தொலைவு சென்றேன். நான் மிரட்டியதைப் பார்த்தவுடன் அந்தச்சிறுவன் அழுதுவிட்டான். ஆனால், நான் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது, அவன் முதலில் நான் எந்த உள்நோக்கத்திலும் செய்யவில்லை, கூட்டத்தில் நிற்கும் போது இதுபோல் நடந்துவிட்டது என்று தனது செயலை மறுத்தான்.
ஆனால், அவனுக்கு செயலைக் கண்டித்தபோது அவன் வேண்டுமென்றே என்னை பாலியல் சீண்டல் செய்யும் நோக்கில் தவறாக நடக்க முயன்றான் என்பது தெரிந்தது. என்னிடம் மன்னிப்பு கேட்டு அழுது, இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன் என்று கதறினான். 15 வயது சிறுவனுக்கு இதுபோன்ற செயல் தவறானது, பொழுதுபோக்கு கிடையாது என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அதனால் அவ்வாறு செய்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் நினைத்திருந்தால், அவனை போலிஸிடம் பிடித்துக்கொடுத்து இருக்கலாம். அதன்பின் அவனின் வாழ்க்கை முழுவதும் நாசமாகி இருக்கும். அந்தச் சிறுவனை மன்னித்து எச்சரித்து அனுப்பினேன். இவ்வாறு சுஷ்மிதா சென் தெரிவித்தார்.