பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா? எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு
11 May,2018
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
எஸ்.வி.சேகர் சர்ச்சை: பணிபுரியும் பெண்களை அவதூறாக பேசுவதா?
ஃபேஸ்புக்கில் நடிகர் எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பகிர்ந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "வாழ்வில் முன்னேற பணி புரியும் பெண்கள், கற்பை தியாகம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. இதை விட கடுமையான வார்த்தைகள் இருக்க முடியாது. பணிபுரியும் பெண்களை பற்றிய தவறான எண்ணங்களை அழிப்பதற்கு பதில், இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது பணியாற்ற விரும்புவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
"பெண்களின் நேர்மையை எதிர்கொள்ள முடியவில்லை": எஸ்.வி சேகருக்கு பதிலடி
படுக்கையை பகிர்வது மட்டுமே, வாழ்வில் முன்னேற ஒரே வழி என்றால் தற்போது உயர் பதவிகளில் இருக்கும் பெண்களும் அதில் அடக்கமா; உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, கட்டுப்பாடான வழியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுதான் தலைமை பண்பு என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்ததாக தினமலர் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்) : ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை இல்லை - ஜூன் 7ல் ரிலீஸ்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கரிகாலன் என்ற படத்தின் தலைப்பை எதிர்த்து ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கரிகாலன் என்ற பெயரை தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் ஏற்கனவே தாம் பதிவு செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
''என் மேல பொறாமை வரத் தானே செய்யும்': காலா விழாவில் ரஜினி
படத்தின் தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்திற்கு எப்போதோ பெயர் பதிவு செய்துவிட்டு, படமே எடுக்காமல் இருந்தால் வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து படம் வெளியாவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
தினமணி : டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் நடைமுறை அமல்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து, அபராதத்தை பணமாக பெறுவதைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பெறும் புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை அமல்படுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள் மீறயதற்காக போலீஸார் நேரடி அபராதம் விதிக்கும் சூழலில், இனி வாகன ஓட்டிகள் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் அல்லது இணையதளம் மூலம் செலுத்தும் வசதியை பயன்படுத்தலாம் என்றும் அச்செய்தி கூறுகிறது.