மியாவ், மியாவ் பூனைக்குட்டி பாடல் புகழ் பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்
25 Apr,2018
சென்னை, பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.
‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப் பிரபலம். டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல். கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை கேட்டு உருகாதோர் யாரும் இருக்க முடியாது.
குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு அவரது பாடல்கள் அமைந்திருந்தன. கைதி கண்ணாயிரம்' படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.
குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதி வரை புகழ் பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய 'நாயகன்' படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக் கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது. அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.