இலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா
22 Apr,2018
இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது குரல் கொடுத்தீர்களா? என நடிகர் ரஜினிகாந்தை நோக்கி இயக்குநர் பாரதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மூலம் பாராதிராஜா மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா? இல்லை ஒரு அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் குறித்து ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என்பது பாரதிராஜாவின் கேள்விகளாக உள்ளன.
தொடர்ந்தும் குறிப்பிட்டிருந்த பாரதிராஜா, இவ்வாறு எதற்காகவும் வாய்திறக்காத ரஜினிகாந்த் இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களை வன்முறையாளர்கள் என குறிப்பிட்டுள்ளமை மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய திரைப்படம் வெளிவரும்போது மட்டும் மக்களுக்கு பூச்சாண்டி காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
மேலும் தமிழ் நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி, தமிழன் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்து தமிழனுக்காக எதுவும் செய்யாதவர் ரஜினிகாந்த் என்றும், இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
காவிரிக்காக தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடித்த போது, ‘இது வன்முறைக் கலாச்சாரம். ஆரம்பத்தில் கிள்ளியெறிய வேண்டும்’ என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
குறித்த பதிவிற்கு பதில் வழங்கும் முகமாகவே பாரதிராஜா மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது