மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் முடிவடையும் சில ‘கிரைம்’ நாவல்கள் பல கேள்விகளை எழுப்பி கொண்டிருப்பது போலவே, நடிகை ஸ்ரீதேவியின் மரணமும் பல கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறது.
உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டுபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அவரது மரணச் செய்தி இந்திய திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஒவ்வொருவரும் இரங்கலை பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், அது குறித்து டுபாய் பொலிஸார் விசாரணை நடத்துவதாகும் தகவல்கள் பரவ தொடங்கின.
தன் நடிப்பு திறனால் இந்தியாவையே வசீகரித்த ஸ்ரீதேவிக்கு டுபாயில் நேர்ந்த திடீர் மரணம், முதலில் சோகத்தை எழுப்பியது. ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக வந்த முரண்பட்ட தகவல்கள் ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றன.
தங்கள் உறவினரின் திருமணத்துக்காக கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் பெப்ரவரி 18-ஆம் திகதி டுபாய் சென்றார் ஸ்ரீதேவி.
அதிலும், ஏற்கனவே தங்கியிருந்த ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலுக்கு அவர் இடம் மாறியது ஏன்? போனி கபூருக்கு இந்தியாவில் சில நிகழ்ச்சிகள் இருந்ததை காரணம் சொல்கிறார்கள். அதற்காக அவர்களின் மகளுமா திரும்பியிருக்க வேண்டும்?
பெப்ரவரி 21ஆம் திகதி அந்த ஹோட்டல் அறைக்கு போன ஸ்ரீதேவி, அவர் மரணமடைந்த பெப்ரவரி 24-ஆம் திகதி இரவு வரை கிட்டத்தட்ட 72 மணி நேரம், தனது அறையை விட்டு வெளியில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அது ஏதோ சாதாரண ஹோட்டல் இல்லை. 400 அறைகள் கொண்ட சகல வசதிகளும் நிறைந்த 56 மாடி ஹோட்டல். ஒரு விருந்தினர், 72 மணி நேரமாக தன் அறையிலிருந்து வெளியில் வரவில்லையென்றால், குறைந்தபட்ச சந்தேகம் கூடவா ஹோட்டல் நிர்வாகத்துக்கு வராது? தங்கியிருப்பவரும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பது அந்த ஹோட்டல் நிர்வாகத்துக்கு தெரியும்தானே என்ற கேள்வி எழுகிறது.
ஸ்ரீதேவியின் மரணத்தின் பின்னர் அவரது தொலைபேசி அழைப்புகளை டுபாய் பொலிஸ் விசாரணை செய்தது. அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் வரை பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விசாரணை இது.
இந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அதிக அழைப்புகள் அவருக்கு வந்ததாக தெரிகிறது. அப்படி பேசியவர் யார்? அவரின் நோக்கம் என்ன?
மேலும், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஹோட்டல் தரப்பிலிருந்து தெரிவித்ததாக டுபாய் பத்திரிகை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
அதாவது ஸ்ரீதேவி ‘இரவு 10.30 மணிக்கு ரூம் சர்வீஸுக்கு போன் செய்து தண்ணீர் கேட்டார். 15 நிமிடங்களில் ஹோட்டல் ஊழியர் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் அறையின் அழைப்பு மணியை அடித்த போது, கதவை அவர் திறக்கவில்லை.
அதன்பின் ஹோட்டல் நிர்வாகிகள் பயந்து போய் கதவை உடைத்து கொண்டு உள்ளே போன போது அவர் குளியலறைக்குள் தரையில் மயங்கி விழுந்து கிடந்தார். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. அவர் அறையில் யாரும் இல்லை என்பதுதான் அந்த செய்தி. இது உண்மையா?
ஆனால் , ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சொல்லியிருக்கும் வாக்கு மூலம் வேறாக உள்ளது. 24ஆம் திகதி இரவு திடீரென மனைவிக்கு ‘சர்ப்ரைஸ்’ தருவதற்காக இந்தியாவிலிருந்து போனி கபூர் டுபாய் சென்றுள்ளார்.
திடீரென இவரை பார்த்ததும் ஸ்ரீதேவிக்கு ஆச்சரியம் மகிழ்ச்சி. சில நிமிடங்கள் இருவரும் பேசியுள்ளனர், பின் இரவு உணவு சாப்பிட போனி கபூர் வெளியில் கூப்பிட்டுள்ளார். அதற்காக ஸ்ரீதேவி குளிக்க போனார்.
ஆனால், 15 நிமிடங்களாகியும் ஸ்ரீதேவி வராததால், குளியலறை கதவை தட்டினார் போனி. எந்தப் பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கு குளியலறை தொட்டியில் ஸ்ரீதேவி மூழ்கி கிடந்தார். உடனே, தன் நண்பருக்கு போன் செய்தார் போனி. அதன் பிறகே பொலிஸாருக்கு தகவல் சொன்னார்.
மேல்தட்டு குடும்பத்தில் பிறந்த போனி, உலகெங்கும் போய் ஹோட்டல்களில் தங்கிய அனுபவம் உள்ளவர். இது போன்ற சூழலில் ஹோட்டலில் சொன்னால், அவசரமாக மருத்துவரை ஏற்பாடு செய்வார்கள்.
சில ஹோட்டல்களில் நிரந்தரமாக மருத்துவர்கள் இருப்பார்கள். இந்த உதவியை கேட்டு மனைவியை காப்பாற்ற அவர் நினைக்காதது ஏன்?ஸ்ரீதேவி தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில், மருத்துவமனை இருக்கும் நிலையில், ஸ்ரீதேவியை முதலில் அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
பல சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டிய ஹோட்டல் நிர்வாகமும், இதுவரை வெளிப்படையாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி தவறுதலாக விழுந்தார் என்றால், சின்ன சத்தம் கூடவா அறையில் இருந்த போனி கபூருக்கு கேட்கவில்லை? பொதுவாக குளியலறை குளியல் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்காது. குளிக்கப் போகும் போதுதான் தண்ணீர் நிரப்புவார்கள்.
கணவர் வந்து அவசரமாக கூப்பிட்டதால் தான் ஸ்ரீதேவி குளிக்கவோ முகம் கழுவவோ சென்றார் என கூறப்படுகின்றது. அந்த இடைவெளியில் குளியல் தொட்டியில் தண்ணீர் நிரம்ப வாய்ப்பில்லை.
பிறகு எப்படி அதில் தண்ணீர் இருந்தது? குளியல் தொட்டியில் தவறிவிழுந்து இறக்க ஸ்ரீதேவி என்ன குழந்தையா?மேலும், ஸ்ரீதேவி விழுந்த குளியல் தொட்டியின் ஆழம் ஒன்றரை அடிதான். அப்படியிருக்க, அதில் விழுந்து அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இங்கே தான் இன்னொரு சந்தேகம் எழுப்பப்படுகிறது. ஸ்ரீதேவி இரவு 9.30 மணிக்கே இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணச் செய்தியை இரவு 11.30 மணிக்கு, தாமதமாக அறிவித்ததன் காரணம் என்ன.. மருத்துவர்கள் உறுதிப்படுத்தும் முன்பே மாரடைப்பு என்று கூறியது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன.
இரண்டு நாட்களாக பல சந்தேகங்கள் ரெக்கை கட்டி பறந்த நிலையில், ஸ்ரீதேவி தலையின் பின் பக்கத்தில் காயம் இருப்பதாக அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியானது.
இதனால், சந்தேகமடைந்த டுபாய் சட்டத்துறை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்துவதாகவும் விசாரணை முடியும் வரை அவரை இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
ஸ்ரீதேவியின் பின் தலையில் ஆழமான காயம் எதனால் ஏற்பட்டது, அது எப்படி ஏற்பட்டது, காயமடைந்த எவ்வளவு நேரத்தில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்? என்ற பல கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை.
இறந்த 24 மணி நேரத்துக்கு பின் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அதன் அறிக்கை வெளியானது. அதில் “ஆக்சிடெண்டல் டிரவ்னிங்” அதாவது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மருத்துவ அறிக்கைகள், ‘ஒருவர் காயம் காரணமாக இறந்திருக்கிறார் என்றோ, ‘மூச்சுத்திணறி இறந்திருக்கிறார் என்றோ தான் இருக்கும்.
அந்த காயம், அவராக ஏற்படுத்தியதா, விபத்தா வேறு யாரும் தாக்கியதால் ஏற்பட்டதா? என்பதை பொலிஸ் விசாரணையில் தான் உறுதி செய்வார்கள். ஆனால், அவர் தண்ணீரில் விழுந்ததை தற்செயலாக விழுந்ததாக எந்த அடிப்படையில், தடயவியல் அறிக்கை கூறுகிறது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
‘மூழ்கி இறந்தார் என மருத்துவர்கள் சொல்லலாம். ‘தவறுதலாக என அவர்கள் எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஊடகங்களில் பல மாறுபட்ட செய்திகள் வெளியாகி கொண்டிருந்த சூழலில், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், தன் பங்கிற்கு பெரிய அணுகுண்டு ஒன்றை வீசி சென்றுள்ளார்.
ஸ்ரீதேவி குடிக்கும் பழக்கமே இல்லாதவர் என்றும், அப்படிப்பட்டவர் எப்படி போதையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்ரீதேவி விபத்து முறையில் மரணிக்கவில்லை என்றும், மாறாக கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனக்கு தெரிந்த வரை அவர் குடிப்பழக்கம் கொண்டவர் இல்லை.
அப்படியிருக்கும் பட்சத்தில் எப்படி அவர் உடலில் மது இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரை யாரேனும் வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்தார்களா? என்னிடம் எப்படி ஸ்ரீதேவி இறந்தார் என கேட்டால், அவரை கொலை செய்து விட்டார்கள் என்றே தான் கூறுவேன் . நிழல் உலக தாதா இப்ராஹிம்கும் சினிமா நடிகைகளுக்கும் உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இறக்கும் போது அவர் மது அருந்தியிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஆனால், ‘‘ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை’’ என அவர்களின் குடும்ப நண்பரும், பல பார்ட்டிகளில் கலந்து கொள்பவருமான முன்னாள் எம்.பி அமர்சிங் சொல்கிறார்.
பிறகு எப்படி இது சாத்தியம்? அதுமட்டும் அல்ல ஸ்ரீதேவி எப்போதும் தன்னை அழகாகவும் இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்பியவர் அதற்காக உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள், மருந்துகள் உள்ளிட்ட பல விடயங்களில் ஈடுபட்டார்.
இப்படியிருக்கும் போது தள்ளாடி விழும் வகையில் அவர் மது அருந்தியிருப்பாரா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த விடை தெரியாத கேள்விகள் ஸ்ரீதேவியோடு புதைந்து போய்விடக் கூடாது.
ஸ்ரீதேவி விவகாரத்தை வழக்கம் போல் சமூக வலைத்தள வாசிகளும் விட்டு வைக்கவில்லை. அவர் மரணமடைந்தார், அவர் குடித்து விட்டு போதையில் இருந்தார், அவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார், அவர் கொல்லப்பட்டார் என பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் உலவ விட்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களாக ஸ்ரீதேவியின் மரணமும், அது தொடர்பான விவாதங்களுமே, சமூக வலைத்தளங்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.
சிறுவயதில் இருந்தே புகழோடு வளர்ந்த ஸ்ரீதேவிக்கு இயற்கையாக வரும் மூப்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்கவில்லை. எப்போதும் தன்மீது புகழ் ஒளிபட வேண்டுமானால் இளமையும் அழகும் மட்டுமே தொடர்ந்து இருக்க வேண்டுமென நினைத்து கொண்டார்.
இதற்காக அவர் செய்த அறுவை சிகிச்சைகளே அவர் உயிரிழக்க காரணம் என்ற செய்தியும் ெவளியாகியது. இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வைரலான ஒரு பதிவு”ஸ்ரீதேவி திடீர் என்று இறந்து விட்டாரே என்று வருத்தப்படும் நாம் அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.
அவர் ஒல்லியாக, 40 வயதை விட இளமையாக தெரிய வேண்டும் என்று சமூகம் விரும்பியதால் தொடர்ந்து சர்ஜரிகள் செய்து கொண்டார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை சந்தித்த போது அவர் அழகாக இருந்தார். ஆனால் சாந்தினி படத்தில் பார்த்தது போன்று இல்லாமல் கவலையுடன் காணப்பட்டார். வெயிட்டை குறைக்க வேண்டும், முகத்தில் சுருக்கம் இருக்கக் கூடாது என்கிற பிரஷரால் அவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்தார்.
ஸ்ரீதேவியை அதிகம் விரும்பியதாக கூறிய அவரது கணவராவது தலையிட்டு அவரை தடுத்திருக்க வேண்டும். அழகு மட்டும் தான் அவருக்கு முக்கியமா? ஸ்ரீதேவியே அவரின் அழகு விடயத்தில் அவரை நம்பவில்லை.
ஸ்ரீதேவிக்கு அவர் மீதே அக்கறை இல்லை. தனது உதடுகள் சரியில்லை, முகம் சரியில்லை என்று நினைத்து அழகான உடைகள் அணிய உடம்பை குறைத்துள்ளார் என்று பியாலி கங்குலி என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவும் வைரலானது.
ஆமாம் சிறுவயது முதலே புகழின் ஒளியில் வளர்ந்த ஸ்ரீதேவியால் அதனை விடுத்து இயல்பான ஒரு வாழ்க்கை வாழ முடியவில்லை. இது அவரது மரணத்துக்கு காரணமாக என்பது தெரியாது ஆனால் இதன் தாக்கமும் ஒரு காரணம் தான்.
இவ்வாறு அவரது மரணம் தொடர்பில் ஒருபுறம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்க, ஸ்ரீதேவி “எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி” உயிரிழந்தார் என டுபாய் தடயவியல் துறை அறிக்கை உறுதியாக கூறிய போதும், சந்தேகத்தை எழுப்புவோர் மனதில் இது நம்பிக்கையை விதைக்குமா என்பது கேள்விக்குறியே. தற்போது சமூக ஆர்வலர்கள் பலர் ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்.
இதேவேளை மயிலாகவும் மூன்றாம் பிறையாகவும் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்ற கேள்வி பிரபல இயக்குநர்களான முத்துராமன் , ராம்கோபால் வர்மா உள்ளிட்டோரால் எழுப்பப்பட்டது.
அவர்கள் கூறுவது போல ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விடயங்களில் தோல்வியை சந்தித்தவர்தான். ஹிந்தி திரையுலகம் மிகப்பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றவர் ஸ்ரீதேவி. `லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தை பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே. அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர் அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல குடும்பம், அவருக்கு என்ன குறை என்று பலரும் அவரை பார்த்து பொறாமைப்பட்டார்கள்.
ஸ்ரீதேவியின் தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடித்து பறந்தார். அதன் பிறகு அவரின் தாயால் கூண்டுக்கிளியாகிவிட்டார். அந்த காலத்தில் நடிகர்களுக்கு கறுப்பு பணத்தில்தான் சம்பளம் கொடுத்தார்கள்.
கறுப்பு பணத்தில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதால் வருமான வரி பயத்தில் ஸ்ரீதேவியின் தந்தை அந்த பணத்தை தனது உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்தார். அவர் இறந்த பிறகு அவர்கள் ஸ்ரீதேவியை ஏமாற்றி விட்டனர்.
ஸ்ரீதேவியின் தாய் சில தவறான முதலீடுகள் செய்து நஷ்டம் அடைந்தார். இதனால் ஸ்ரீதேவி கிட்டத்தட்ட பணம் இல்லாமத நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஸ்ரீதேவி, மிதுன் சக்கரவர்த்தி
ஸ்ரீதேவி ஹிந்திக்கு சென்ற சமயத்தில் மிதுன் சக்கரவர்த்தி அங்கு பிரபல நடிகராக இருந்தார். மிதுனுடன் சேர்ந்து சில படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். பின்னர் மிதுனை ஸ்ரீதேவி இரகசிய திருமணம் செய்துகொண்டார்.
மிதுனுக்கோ ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருந்தனர். மனைவியின் பெயர் யோகிதா பாலி.இந்த சூழலில், ஸ்ரீதேவியை வெளிப்படையாக `மனைவி’ என்று அறிவிக்க தயங்கினார் மிதுன்.
அப்போது ஸ்ரீதேவியுடனான திருமணத்தை அறிந்த மிதுனின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஸ்ரீதேவியுடன் தன் கணவர் வாழ அவர் சம்மதித்தார். ஆனால், மிதுனிடமிருந்து ஸ்ரீதேவி விவகாரத்து பெற்றார்.
ராம்கோபால் வர்மா எப்படி ஸ்ரீதேவியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தாரோ… அதேபோன்று போனி கபூரும் ஸ்ரீதேவியை வைத்து படம் தயாரிப்பதே இலட்சியமாக கொண்டார்.
சென்னையில் வசித்து வந்த ஸ்ரீதேவியை சந்திக்க முயன்றார் போனி கபூர். அந்த சமயத்தில் சிங்கப்பூரில் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி இருந்ததால், போனி கபூர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற கதையும் உண்டு.
இதற்கிடையே போனி கபூர் மோனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஸ்ரீதேவியை வைத்து சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் போனி கைவிடவில்லை.
படப்பிடிப்பு ஒன்றில் ஸ்ரீதேவியை சந்தித்தார். தன் புதுப்படம் பற்றி அவரிடம் கூறினார். அந்தப் படம் தான் 1987ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான `மிஸ்டர் இந்தியா’. இந்தப் படத்தில் நடிக்க 10 இலட்சம் ரூபா சம்பளம் கேட்டார் ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி. போனி கபூரோ 11 இலட்சம் ரூபாவை அளித்தார்.
போனி கபூரின் ஆறுதல் வார்த்தைகள் அவரை தேற்றின. மிதுனிடம் இல்லாத காதலை போனி கபூரிடம் ஸ்ரீதேவி கண்டார். `நான் கனவில் கண்ட ஆண் அவர் என்று போனி கபூர் பற்றி ஸ்ரீதேவி கூறுவார். ஸ்ரீதேவி தாயார் ராஜேஸ்வரி வாங்கியிருந்த கடன் முழுவதையும் போனி கபூர் அடைக்க, ஸ்ரீதேவியின் நம்பிக்கையை பெற்றார் போனி கபூர்.
இதற்கிடையே, போனி கபூருக்கு முதல் மனைவி மூலம் இரு குழந்தைகள் பிறந்திருந்தன. ஆயினும் 1996-ஆம் ஆண்டு போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள, குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போனி கபூரின் மனைவி மோனா, தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு நிரந்தரமாக பிரிந்தார்.
மோனாவின் தாயார் தன் மகளின் வாழ்க்கையை ஸ்ரீதேவி பாழடித்து விட்டதாக கருதினார். கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை பார்த்த மோனாவின் தாயாருக்கு கடும் கோபம் ஏற்பட, அவரின் வயிற்றில் கையால் ஓங்கிக் குத்தக்கூட முயன்றார்.
ஆனால், போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி, தன் குடும்பத்தை மிகவும் நேசித்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள அவரது மரணம், அவர் கதாநாயகியாக அறிமுகமான மூன்று முடிச்சு பெயர் போல அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் நிரம்பியதாக முடிந்துள்ளது..