ரஜினிகாந்த் கட்சிக்கு நிர்வாகிகள் தேர்வு தீவிரம் சென்னையில் ரசிகர்கள் திரண்டனர்
15 Feb,2018
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை தொடங்கி அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. பின்னர் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றப்படும். ஒரு மாவட்டத்துக்கு அதிக பட்சம் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவும் இந்த பணியை எப்ரல் மாதத்துக்குள் முடிக்கவும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்ப்பு முழு வீச்சில் நடக்கிறது. இணையதளம் மூலமும் உறுப்பினர்கள் சேர்கிறார்கள். மொத்தம் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினிகாந்த் இலக்கு நிர்ணயித்து உள்ளார். ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் தனி கட்சியை அவர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப்பயணம்
சென்னை அல்லது திருச்சியில் அனைத்து ரசிகர்களையும் திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அந்த கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, கொள்கை திட்டங்களை ரஜினிகாந்த் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார். தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மற்ற கட்சிகளில் இருப்பது போன்று இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி ஆகிய அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் முடிந்துள்ளது.
நிர்வாகிகள் தேர்வு
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று (15-ந்தேதி) தேனி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை நீலகிரி மாவட்ட ரசிகர்கள் கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் தேர்வு செய்து அறிவிக்கிறார்.