இளையராஜா ஐயர் மாதிரி ஆக முயன்றதாகவும் அதனால்தான் ஆங்கில நாளிதழ் அவர் ஜாதியை குறிப்பிட்டு வன்மம் தீர்த்துக்கொண்டதாகவும், இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜா ஜாதியை குறிப்பிட்டு, அதனால்தான் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியதாக தலைப்பு செய்தி வெளியிட்டது.
நாடு முழுக்க இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இளையராஜாவின் இசை மதம், ஜாதிகளை கடந்தது என்று ஒரே குரல் நாடு முழுக்க ஒலித்தது. இதனால் அந்த நாளிதழ் மறுநாளே, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது.
இந்த நிலையில், நிருபர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் அந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில் ஷாக் ரகம். பாரதிராஜா கூறுகையில், இளையராஜாவை சொல்லனும். அவர் ஐயர் மாதிரி ஆகனும்னா? நாம் எந்த மண்ணில் பிறந்தோம் என சொல்வதுதான் சார் பெருமை.
வேஷம் வேறு வேஷம் வேறு என்னை அடையாளப்படுத்துவது எனது மண், என்னை அடையாளப்படுத்துவது எனது மொழி, எனது ஊர். நீ மூலத்தை மறந்துவிட்டு, புதிதாக வேஷம் போட்டாலே தப்பு. நான் நானாகத்தான் இருப்பேன். ஆன்மீக சிந்தனை வருவது வேறு. வேஷம் போடுவது வேறு என்றார்.
இதை கேட்ட நிருபர் அதிர்ச்சியடைந்து, இளையராஜா வேஷம் போடுகிறார் என்று கூறுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாரதிராஜா, “எனக்கு தெரியாது, நீங்க அவரை கேளுங்க” என்றார்.
ஆனால் பாரதிராஜா, இளையராஜாவின், ஆன்மீக நம்பிக்கையை நடிப்பு என மறைமுகமாக குறிப்பிட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஆன்மீகம் எனக்கு கிடையாது பாரதிராஜா மேலும் கூறுகையில், ஆன்மீகமோ, கூன்மீகமோ எனக்கு கிடையாது. மலையை லவ் பண்றேன், செடியை லவ் பண்றேன், ஆடு, மாடுகளை நேசிக்கிறேன். இதுதான். இதற்கு மேல் ஒன்னும் கடவுள் இல்லை. எல்லாவற்றையும் நேசித்து பார், அதற்கு இணையான ஒன்று கிடையாது.
குறிப்பிட்ட இடம் வேண்டும் நம்மை உரிமைப்படுத்த, அதற்குத்தான் கோயில். ஆள் சேர்ப்பதே மதங்கள் வேலை உலகம் முழுக்க மதங்கள் உள்ளன. எத்தனை கட்சிகள் உள்ளனவோ அப்படி உள்ளது.
மதம் என்பதே சட்டாம்பிள்ளைத்தனம். நமக்கு பிடித்ததை வேறு நபர்களுக்கும் பரப்பி ஏற்றேயாக வேண்டும் என நினைப்பதே மதம். நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படைதான் மதம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
பாரதிராஜா, வைரமுத்து ஆகியோரிடமிருந்து சில மன பிணக்குகள் காரணமாக, இளையராஜா சற்று விலகியே உள்ளார். இருப்பினும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்தியிருந்தார். ஆனால், பாரதிராஜாவோ சேற்றை வாரி இறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.