சென்னை கோடம்பாக்த்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது ரசிகர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்று ரசிகர்கள் முன்பு ரஜினி பேசும் போது,
இன்று 4-வது நாள். இன்னும் 2 நாள் தான் இருக்கிறது. கோயம்புத்தூர், எனக்கு முக்கியமான இடம். அங்கே என் நண்பர்க்ள பலர்இருக்கிறார்கள். சுவாமி சச்சிதானந்தன் அவர்களின் ஊர். அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்தவர். பழனி சித்தர் ஆசிர்வாததால் பிறந்தவர். இஞ்ஜினியரிங் படித்த அவர், தனது குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன், குடும்பத்தை வாழ்க்கையை விட்டு பழனி சாமிக்கு சிசியனாக மாறினார்.
பின்னர் இமயமலை சென்று சிவானந்த சாமியாரிடம் தீட்சை பெற்று சச்சிதானந்தன் என்று பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் சில காலம் இருந்தார். பின்னர் அவரை சிவானந்தன் அமெரிக்காவுக்கு அனுப்பினார். அமெரிக்காவில் ஆன்மீகத்தை பரப்ப வேண்டும். யோகா கற்றுக் கொடுக்க வேண்டும், மதத்தை அல்ல என்று சிவானந்தன் கூறியிருந்தார். எனக்கு அவர் தான் மந்திர உபதேசனை செய்தார். லட்சக் கணக்கில் சீடர்கள் அங்கு இருக்கிறார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் என கோடீஸ்வரர்கள் பலரும் அவரை சந்தித்து ஆசி பெறுகின்றனர். உபதேசனை கேட்கின்றனர். பல நாடுகளில் அவர்களது ஆசரமும் இருக்கிறது.
அவர் சொல்லி தான் நான் பாபா படம் எடுத்தேன். அவர் இங்கு வந்து பாபா படம் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயில், நான் தான் அவரை கடைசியாக பார்த்தேன். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு நியாபகம் வரும். அண்ணாமைலை படம் ரிலீஸ் ஆன நேரம், அங்கு என் நண்பரின் குடும்ப திருமணத்திற்காக சென்றேன். நானும், சிவாஜியும் சென்றோம். அங்கு என்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் ஏராளம்.
விமான நிலையத்தில் ரஜினி வாழ்க என அவர்கள் கத்தினர். சிவாஜி என்னை பார்த்து சிரிக்கிறார். என்னடா நழுவுற, உன் காலம் டா, நல்ல உழ, நல்ல படங்கள் கொடு, நம்ம காலத்துல நாம நல்ல உழைச்சோம். அங்க கை காட்டு, இங்கே கை காட்டு, என்னிடம் கூறி வந்தார். நடிப்பை தாண்டி பல நற்பண்புகள் சிவாஜியிடம் இருந்தது.
வாழ்க்கையில் மரியாதை தான் முக்கியம். நல்ல குணாதிசியம் இருந்தால் தான் மரியாதை கொடுப்பார்கள். அதில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான் எல்லாருடைய மனதிலும் வாழ்கிறார் என்றார், அவருடைய குணாதிசயம் தான் அதற்கு காரணம். அந்த மதிப்பு தான் முக்கியம்.
சில வருடங்கள் கழித்து மீண்டும் கோயம்புத்தூரில் வேறொரு சாமியாரை பார்க்க சென்றேன். அப்போது என்னை வர வேண்டாம் என்று சொன்னார்கள். ஏதோ ஒரு நடிகரின் ரசிகர்கள் ரொம்ப பேர் ஆசிரமத்தை சூழ்ந்திருக்கிறார்கள். அவர் வந்து சென்ற பிறகு வாங்கள் என்றனர்.
எதிலுமே காலம் தான் முக்கியம். உழைப்பு, திறமை முக்கியம் தான். அதெல்லாம் அதுக்கு அப்புறம் தான். காலம் வரும் போது அனைவரும் மாறுவார்கள். காலம் வரும்போது, சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் மாற்றம் வரும், காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
குடும்பம், தாய், தந்தை, பசங்களை பார்த்துக் கொண்டு மதிக்கத்தக்கவர்களாக வாழ வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். #Rajinikanth