நடிகைகள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்: காஜல் அகர்வால்
21 Dec,2017
நடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகைகள் என்றால் படப்பிடிப்புக்கு வருவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது, வெளிநாடு பயணம் என்பதுதான் நினைவுக்கு வரும். அதைத் தாண்டி சிலர் தொழில் அதிபர்களாக மாறத் தொடங்கிவிட்டனர். நடிப்பு நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள்.
நடிகை தமன்னா ஆன்லைனில் நகை வியாபாரத்தையும், நடிகை டாப்சி திருமண நிகழ்ச்சிகளை நடத்தி கொடுக்கும் நிறுவனத்தையும் நடத்துகின்றனர். நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். இலியானா துணிக்கடையும், ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி நிலையமும், ஸ்ரேயா அழகு நிலையமும் நடத்துகின்றனர். இதில் அவர்கள் நல்ல லாபம் பார்ப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:-
“கதாநாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்று நான் சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நடிகைகள் ஏதேனும் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட வேண்டும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
நான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறி விட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நீடிப்பேன். அதன்பிறகு வேறு துறைக்கு மாறி விடுவேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.