'அருவி' Vs லட்சுமி ராமகிருஷ்ணன் - பஞ்சாயத்து ஆரம்பம்
19 Dec,2017
அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அறிமுக நடிகை அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படம் 'அருவி'. இந்தப் படம் 2011ம் ஆண்டு வெளிவந்த 'அஸ்மா' என்ற எகிப்திய படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்று நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை' டிவி நிகழ்ச்சியைக் கிண்டலடிக்கும் விதத்தில் 'சொல்வதெல்லாம் சத்தியம்' என்ற பெயரில் ஒரு டிவி நிகழ்ச்சியில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரிஜனல் டிவி நிகழ்ச்சியைக் கிண்டலடித்து ஒரு 'ஸ்பூஃப்' ஆகத்தான் எடுத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அனைவரையுமே படத்தில் கிண்டலடித்திருப்பார்கள்.
தற்போது 'அருவி' படம் 'அஸ்மா' படத்தின் காப்பி என்பது ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் 'சொல்வதெல்லாம் உண்மை' தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் 'அருவி' ரசிகர்களுக்குமான பஞ்சாயத்து டுவிட்டரில் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்ச்சியைத் தேவையில்லாமல் கிண்டலடித்துள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது படம் 'அஸ்மா' படத்தின் காப்பி என்பதாக மற்றவர்கள் பேசிக் கொள்வதையும் அவருடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து 'அருவி' ஆதரவாளர்களுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.