ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. மறைந்த முதலமைச்சரின் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகருக்கு அவரது மறைவுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து நீதிமன்றம் தலையிட்ட பிறகு தற்போது டிசம்பர் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்தலில் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுவது நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், தான் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து இருப்பது தான்.
முதலில் வெறும் வதந்தி என்று சொல்லப்பட்டாலும், நேற்று மாலை விஷாலே பத்திரிகையாளர்களிடம் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தற்போது அரசியல் களத்திலும், சினிமா வட்டாரத்திலும் விஷாலின் இந்த அறிவிப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் – தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இரண்டு சங்க தேர்தல்களிலும் ஏற்கனவே இருந்தவர்களின் முறைக்கேடுகளை அம்பலப்படுத்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அரசியல் குறித்த கருத்து சில கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்து வந்தார். இதுகுறித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்க விவகாரத்தில் நீதி கேட்கும் விஷால், ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது எங்கு போனார்.
ரஜினி அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்த போது, ரஜினிகாந்த் ஆக இருந்தாலும் சரி, விஷாலாக இருந்தாலும் சரி அரசியலுக்கு வருவது குறித்து கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்தில் பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தார் விஷால்.
அடுத்த நாளே, பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், மார்வாடி மற்ற மொழிக்காரர்கள் பணம் கொடுத்தால் அது பைனான்ஸ்; தமிழன் அதையே செய்தால் கந்துவட்டியா? என்று கொந்தளித்தார்.
மேலும், விஷாலின் கருத்தையும் விமர்சித்தார். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்க நினைத்து தான் விஷால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அவரது சகாக்கள் தெரிவித்து உள்ளனர்.
என்ன ஆகும் ஆர்.கே நகர் எப்படியும் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து தான் விஷால் இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும், நாம் தமிழரை விட எப்படியாவது அதிக ஓட்டு பெற்று சீமானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால், விஷாலின் இந்த முடிவுக்கு திரைத்துறையில் இருந்தே அமீர், சேரன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
அதே நேரம் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இந்த தேர்தலுக்கு பிறகு விஷாலின் திரை வாழ்வு என்ன ஆகப்போகிறது என்று தெரியவில்லை என்றும் விமர்சித்து உள்ளார்.