திருட்டு பயலே 2 - திரை விமர்சனம்
02 Dec,2017
நடிகர் பாபி சிம்ஹா
நடிகை அமலா பால்
இயக்குனர் ஜே.ஜெயக்குமார்
இசை வித்யாசாகர்
ஓளிப்பதிவு பி.செல்லதுரை
காவல்துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் முக்கிய பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் பணியை செய்து வருகிறார். நேர்மையாக இருந்ததால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாபி சிம்ஹா ஒரு கட்டத்திற்கு மேல் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது என்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்.
அப்போது அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன் காலை ஒட்டுக் கேட்கிறார். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை திருடிவிடுகிறார். மேலும் சிலரது பேச்சை ஒட்டுக் கேட்டு அவர்களிடம் இருந்தும் காசை பறிக்கிறார். மறுபுறத்தில் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வீட்டிலேயே தனியாக இருக்கும் அமலாபால் பேஸ்புக்கே கதியென இருக்கிறார்.
இந்நிலையில், அமலா பால் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அதில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், பாபி சிம்ஹாவின் வேலையான ஒட்டுக் கேட்பது பற்றி பேசுகின்றனர். இதையடுத்து தனது நண்பர்களது போன் கால்கள் மற்றும் அமலாபாலின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் பாபிசிம்ஹா. இதில் திருமணமான பெண்களிடம் தகாத முறையில் பேசி வரும் பிரசன்னாவை நோட்டம் விடுகிறார்.
ஒரு நாள் பிரசன்னா, அமலா பாலிடம் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா அவரை போலீஸ் மூலம் அடித்து நொறுக்குகிறார். இந்நிலையில், பிரசன்னாவின் பேச்சு திசைமாறுவதை உணர்ந்த அமலா பால், அவரிடம் பேசுவதை தவிர்க்கிறார். இந்நிலையில் நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹா செய்யும் தில்லாங்கடி வேலைகள் குறித்த தகவல்களை பிரசன்னா சேகரித்து அவரை பழிவாங்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் அமலா பாலை அடையவும் முயற்சி செய்கிறார்.
கடைசியில், நேர்மையான போலீஸ் என பெயர் வாங்கிய பாபி சிம்ஹா தனது பெயரை காப்பாற்றிக் கொண்டாரா? பிரசன்னாவின் திட்டம் என்ன ஆனது? பாபி சிம்ஹாவும் திருட்டு பையன் தான் என்பதை பிரசன்னா நிரூபித்தாரா? அமலா பால் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா சிறப்பாகவே நடித்திருக்கிறார். அமலா பாலுடனான காதல் காட்சிகளிலும் சரி, போன் கால்களை ஒட்டுக் கேட்கும் போதும் அவரது நடிப்பும், தோரணையும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பாபி சிம்ஹாவுக்கு சரி சமமான கதாபாத்திரத்தில் பிரசன்னாவின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மொத்தத்தில் இருவருமே திருட்டுப்பயலேவாக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
காதல், கிளாமர், பேஸ்புக்கே கதி என இருக்கும் வீட்டுப் பெண்ணாக அமலாபால் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் கிளாமர் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விவேக், ரோபோ ஷங்கர் காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.
ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, அதனால் அவர்கள் என்ன தொல்லைகளுக்கு ஆளாகின்றனர் என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. தொழில்நுட்பம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். குறிப்பிட்ட இடங்களில் வரும் வசனங்களும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தை ரசிக்கும்படியாக இருக்கிறது. எனினும் ஒரு சில காட்சிகளில் தொய்வு ஏற்படும்படியாக இருக்கிறது என்றாலும் அதுவும் பெரிதாக தெரியவில்லை.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ரசித்துக் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.செல்லதுரை ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் `திருட்டுபயலே-2' நல்ல பையன்.