ஜூலி 2 - திரை விமர்சனம்
28 Nov,2017
நடிகர் நடிகர் இல்லை
நடிகை ராய் லட்சுமி
இயக்குனர் தீபக் சிவ்தாசனி
இசை விஜு ஷா
ஓளிப்பதிவு சமீர் ரெட்டி
நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ராய் லட்சுமி, தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதில் நண்பர்கள் மத்தியில், என்னுடைய அப்பா யார் என்று எனக்கு தெரியாது. அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். ஆனால், என் அம்மா எனக்கு பெரியதாக உதவி செய்யவில்லை. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கூறுகிறார்.
இந்த செய்தி மறுநாள் பேப்பர், மீடியாக்களில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு நகை கடைக்கு செல்கிறார் ராய் லட்சுமி. அப்போது நான்கு முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதில் ராய் லட்சுமியையும் சுட்டுவிடுகிறார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராய் லட்சுமி, கோமா நிலைக்கு செல்கிறார். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்து நான்கு கொலையாளிகளை பிடித்து விடுகிறார். இவர்கள் தெரியாமல் ராய் லட்சுமியை சுடவில்லை. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ் அதிகாரி.
மேலும் ராய் லட்சுமியை எப்படி சினிமா உலகத்திற்கு வந்தார். அதன் பின்னணி என்ன என்று விசாரிக்க தொடங்குகிறார். இந்த விசாரணையின் முடிவில் ராய் லட்சுமியை திட்டம் போட்டு கொலை செய்ய முயற்சித்தது யார்? ராய் லட்சுமி உயிர் பிழைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஜூலியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி. மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பெரிய கைத்தட்டல். கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்.
சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி வந்திருக்கிறது. விஜு ஷா, ரூ பேண்ட், அதிப் அலி, ஜேவ்டு-மோஹ்சனின் இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
மொத்தத்தில் `ஜூலி-2' கவர்ச்சி கன்னி.