இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியும் அவரது உறவினருமான அசோக் குமார் என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக திரைப்படங்களுக்கு கடன் வழங்கும் ஜி.என். அன்புச் செழியன் என்பவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தற்கொலை
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பரவலாக அறிமுகமானவர் சசிகுமார். இவர் கம்பனி புரடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். இந்த நிறுவனத்தை அவரது உறவினரான அசோக் குமார் பார்த்துவந்தார்.
இந்த நிலையில், அசோக் குமார் அவரது வளசரவாக்கம் இல்லத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது இன்று தெரியவந்தது. அசோக் குமார் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அந்தக் கடிதத்தில், "கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் தயாரித்த எல்லாப் படங்களையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த மிகப் பெரிய பாவம் ஜி.என். அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது.
வட்டிக்கு மேல் வட்டியாக கடந்த ஏழு ஆண்டுகளாக வாங்கியவர், ஆறு மாத காலமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். அரசாங்கம், ஆள்வோரின் பெரும் புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் என எல்லோரும் அவர் கையில்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "யாரேனும் ஜி.என். அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியாக இருக்கும்போது என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். இந்தக் கடிதத்தைக்கூட வெளியில் தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
அசோக் குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அசோக் குமாரை ஜி.என். அன்புச்செழியன் தற்கொலைக்குத் தூண்டியதாக சசிகுமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், அசோக் குமார்தான் தனது நிறுவனத்தை நடத்திவந்ததாகவும் தாங்கள் தயாரித்த கொடி வீரன் திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் அதற்கு தடை போடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வந்த சசிகுமாருடன் வந்த இயக்குனர் அமீர், "அன்புச் செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
சசிகுமாரின் கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனம் சுப்பிரமணியபுரம் துவங்கி, தற்போதுவரை பத்து படங்களைத் தயாரித்துள்ளது. அந்நிறுவனம் கடைசியாகத் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாத நிலையில், அந்தப் படங்களுக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்நிறுவனம் கடைசியாகத் தயாரித்த, கொடிவீரன் திரைப்படம் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க ஆர். முத்தைய்யா இயக்கியிருந்தார்.