கமல்ஹாசன் சுற்றுப்பயணம்: அனைத்து மாவட்ட மக்களை சந்திக்கிறார்
16 Nov,2017
புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கமல்ஹாசன் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். ஏற்கனவே கேரள முதல்-மந்திரி பிரணாய் விஜயன், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.சமீபத்தில் கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தார். அவரிடமும் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7-ந்தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொது மக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார். தனது ரசிகர் மன்றத்தினர் பொது மக்கள் பிரச்சினைக்கு உடன் இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்து அறிவிப்பேன் என்று கூறினார்.
இதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் அறிவித்தார். இதனால் கமல்ஹாசன் எப்போது சுற்றுப்பயணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து கமல் ஆலோசனை செய்து வருகிறார். எந்தெந்த மாவட்டத்தில் எவ்வாறு சுற்றுப் பயணம் செய்யலாம்? மக்களுடன் கலந்துரையாடுவது எப்படி? என்பது பற்றிய கருத்துக்களையும் அவர்களிடம் கேட்டு அறிந்து வருகிறார்.
இதுபற்றி கமல் நற்பணிமன்ற மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
புதிய கட்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க வேண்டும் என்பதில் கமல் சார் உறுதியாக இருக்கிறார். அது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.
அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில், அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் அவர் சுற்றுப் பயணத்தை தொடங்க வாய்ப்பு உள்ளது. எந்த தேதியில் சுற்றுப்பயணம் தொடங்க வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
மாவட்ட மன்ற நிர்வாகிகள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார். இதில் சுற்றுப்பயண தேதி முடிவு செய்யப்படும். மாவட்ட அளவிலான ஏற்பாடுகள் செய்த பிறகு மாவட்ட சுற்றுப்பயண தேதியை முறைப்படி கமல் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.