சமீபத்தில் வெளியான ‘லக்ஷ்மி’ குறும்படம் சமூகவலைதளத்தில் செம்ம ஹாட் டாபிக். அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில், நானும் அந்த குறும்படம் பார்த்தேன்.
பொதுவாக, நம் ஊரில் பாலியல் சுதந்திரத்தை மையமாகவைத்து எடுக்கப்படும் திரைப்படமோ, குறும்படமோ பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பும். அப்படித்தான் ‘லக்ஷ்மி’ குறும்படமும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காலையில் எழுந்து, சமைத்து, ’ஏன் லேட்டா சமைக்கிறே’ என்ற கணவனின் கேள்விக்கு எந்த உணர்ச்சியும் காட்டாமல் மெளனித்து, கணவன் வேலைக்குச் சென்றதும் குளித்துவிட்டு தானும் வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர குடும்பப் பெண் லக்ஷ்மி.
அலுவலக வேலைகளை முடித்துவிட்டுக் களைப்புடன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்பவள். மீண்டும் காலையில் எழுந்து சமையலைக்குச் செல்லும் சக்கர வாழ்க்கையில் சுழன்றுகொண்டிருக்கிறார்.
ஒருநாள் இரவு சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், கணவனின் அலைபேசி ஒலிக்க, லக்ஷ்மி எடுத்துப் பேசுகிறாள்.
எதிர்முனையில் ஓர் பெண்ணின் குரல். இவளின் குரலைக் கேட்டதும் சட்டெனத் துண்டிக்கப்படுகிறது.
மீண்டும் அழைப்பு வர, கணவர் எடுத்து, ‘பிறகு அழைக்கிறேன்’ என்று அழைப்பைத் துண்டிக்கிறார். லக்ஷ்மி அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க, “அவள் என் ஃப்ரெண்ட்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான்.
லக்ஷ்மிகணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது புரிகிறது. தன் வாழ்க்கையை நினைத்து விரக்தி அடையும் லக்ஷ்மி, தன்னுடன் ரயிலில் தினசரி பயணிக்கும் ஓர் இளைஞனை கவனிக்கிறாள்.
அவனும் இவளைக் கவனிக்கிறான். ஓர் இரவில் அந்த இளைஞனின் வீட்டில் தங்கும் சூழல் உருவாகிறது. அவன் அவளுக்குச் சமைத்துக்கொண்டு, ஓவியத்தை வரையக் கற்பிக்கிறான்.
அவளை ரசித்து ஒரு சிலை செய்கிறான். பாரதி கவிதைகளோடு அன்போடு கலவிக்கொள்கிறார்கள்.
மறுநாள் காலை, அவள் வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறாள். “உனக்கு டிரெயினுக்கு லேட் ஆகலையா?’ என்று கணவன் கேட்க, ‘நான் கொஞ்ச நாளைக்கு பஸ்ஸில் போறேன்” என்று சொல்லிவிட்டு லக்ஷ்மி வேலைக்குக் கிளம்புகிறாள்.
ஒரு நடுத்தர வர்க்க பெண்ணுக்கு இந்தச் சமூகம் சுதந்திரம் என்று பெரியதாக எதுவும் அளித்திடவில்லை என்பது உண்மைதான்.
ஆனால், அந்த நடுத்தர வர்க்க பெண் தேடும் சுதந்திரம் ‘செக்ஸாகத்தான்’ இருக்கும் என்று எப்படித் தீர்மானிக்கிறார் இயக்குநர்? சொல்லப்போனால், எந்த விருப்பமுமின்றி கணவனின் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் ஒரு பெண்ணுக்கு அது சலிப்பான விஷயமாக இருக்குமே தவிர, அதனை வேறோர் ஆணிடம் தேடுவாளா என்பது சந்தேகமே.
அவளின் சுதந்திரம், அந்தத் திருமண உறவிலிருந்து வெளியே வருவதாக இருக்கலாம். அல்லது, தன் கணவனின் அன்பான அணுகுமுறையாகவும் இருக்கலாம்.
அல்லது, தன் கணவன், குழந்தையைத் தாண்டி ஏதோ ஒரு துறையில் சாதிக்கும் முன்னேற்றமாக இருக்கலாம். அது, அந்த நடுத்தர மனநிலையை மாற்றும் சக்தியாக இருந்திருக்கும்.
எனக்குத் தெரிந்த ஒரு தோழிக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணமானது. அவளும் ‘லக்ஷ்மி’யைபோலவே மிக வழக்கமான குடும்பப் பெண்.
கணவனுக்கும் தனக்குமான உறவு என்பது வெறும் சமூகத்துக்காக மட்டும்தான் எனத் தெரிந்துகொண்ட தருணத்தில் அவள் விழித்துக்கொண்டாள்.
சாதாரண வேலைக்குச் சென்றவாறு மேற்படிப்பு படித்தாள். தன் முதல் குழந்தைப் பிறப்பதற்கு ஒருநாள் முன்பு, கடைசி தேர்வு எழுதினாள். இப்போது, அவள் ஒரு கல்லூரி பேராசிரியை.
சரி, பெண்கள் என்றால் சாதித்தே ஆகவேண்டும் என்றுகூடக் கூறவரவில்லை. குழந்தை வளர்ப்பில் கணவனின் பங்கும் இருக்க வேண்டும் என ஒரு நடுத்தர வர்க்கப் பெண் எதிர்பார்ப்பாள்.
சமைப்பதற்கு ஒருநாள் விடுமுறை தேவை என எதிர்பார்ப்பாள். வருடத்துக்கு ஒருமுறை பயணம் செல்ல எதிர்பார்ப்பாள். திருமணமான பிறகு, தன் தோழிகளை ஒருநாள் சந்திக்க எதிர்பார்ப்பாள்.
இதெல்லாம் இன்றும் திருமணமான பெண்களுக்கு பெரும் கனவாகவே இருக்கிறது. அவள் கணவன் அனுமதித்தால் ஒழிய, தோழிகளைச் சந்திப்பதும் அசாத்தியமான விஷயமே.
இப்படிச் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத நிலையில்தான், இன்றைய நடுத்தர வர்க்கப் பெண்கள் இருக்கின்றனர்.
‘லக்ஷ்மி’ போன்ற பெண்களை நம் ரயில் பயணங்களில் சந்தித்திருப்போம். இன்றைய தேவை ‘லக்ஷ்மி’ போன்ற பெண்களை அல்ல; அவளுக்கு மாற்றான பெண்களைத்தான். அதனால், செக்ஸையும் சுதந்திரத்தையும் போட்டுக் குழப்பிக்காதீங்க!