அறம் - திரை விமர்சனம்
11 Nov,2017
நடிகர் -- --
நடிகை நயன்தாரா
இயக்குனர் காேபி நயினார்
இசை ஜிப்ரான்
ஓளிப்பதிவு ஓம்பிரகாஷ்
ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக பூமியில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
அந்த மாவட்டத்திற்கு ஆட்சியராக வருகிறார் நயன்தாரா. மிகவும் நேர்மையான, நல்ல உள்ளம் படைத்த நயன்தாரா மற்றவர்களின் வலி, வேதனையை தனக்கு வந்ததாக நினைத்து அதற்கான தீர்வை கொடுக்கக்கூடியவர். இந்நிலையில், அந்த கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் அந்த குழந்தை உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
அந்த பிரச்சனைக்கு மாவட்ட ஆட்சியரான நயன்தாரா என்ன செய்தார்? அந்த குழந்தையை காப்பாற்ற என்ன மாதிரியான அணுகுமுறையை மேற்கொண்டார்? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? அந்த குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
தமிழ் சினிமாவில் கமர்ஷியல், காதல், திகில், சண்டை என பலதரப்பட்ட படங்கள் வந்தாலும், ரசிகர்களை ஈர்க்கும்படியாக அதிகளவில் படங்கள் வருவதில்லை. அவ்வாறாக வரும் படங்கள் ரசிகர்களின் கவனத்தை கண்டிப்பாக ஈர்த்து மனிதில் இடம்பிடித்து வெற்றி பெறும். அந்த வரிசையில் அறம் படமும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.
சில முக்கிய சம்பவங்கள் செய்தி வழியாக நம்மை தாண்டி சென்றிருக்கும். அவற்றில் சில மட்டுமே நமது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சமீபத்தில் செய்தி வாயிலாக நாம் பார்த்த, படித்த, கேட்ட ஒரு முக்கிய சமூக பிரச்சனையை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு செய்தியாக கேட்கும் போது நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாத அந்த செய்தி, இந்த படத்தை பார்க்கும் போது நம்மை சுற்றி நடப்பது போன்ற வலி, வேதனையை உண்டாக்கி சம்பவ இடத்திற்கே நம்மை கூட்டிச் செல்வதுடன் தாக்கதையும் ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
கதை தெரியாமல் திரையில் சென்று பார்க்கும் போது தான் இந்த படம் ஏற்படுத்தும் முழுமையான தாக்கத்தை உணர முடியும். மேலும் படத்தின் மூலம் மக்கள் மற்றும் அரசுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்திற்கு அவசியமான கருத்தை கூறியிருக்கும் இயக்குநர் கோபி நயினாருக்கு பாராட்டுக்கள்.
மாவட்ட ஆட்சியராக வரும் நயன்தாரா எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது பேச்சு மற்றும் தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார். இதுதவிர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோராக வரும் கதாபாத்திரங்கள், குழந்தைக்காக வாழக்கூடியவர்களாக குழந்தையின் அவஸ்தையை கண்டு துடிக்கும் காட்சிகள், அவர்களது தவிப்பு என சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது.
காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்கள் இருவருமே கதைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றனர். குறிப்பாக ரமேஷின் நடிப்பு சிறப்பாக உள்ளது. பெயர் சொல்ல முடியாத கதாபாத்திரங்கள் இருந்தாலும், இந்த படத்தின் மூலம் அவர்கள் பிரபலமாவார்கள் என்று கூறலாம்.
ஓம் பிரகாஷின் ஔிப்பதிவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சிறப்பாக காட்சி படுத்தியிருப்பது சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `அறம்' சமூத்திற்கு பாடம்.