டே ஆஃப்டர் டுமாரோ, 2012, 12.12.08 போன்ற படங்களில் விண்வெளி, பூமி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் நாம் வாழும் இந்த கிரகத்திற்கே ஆபத்து நேர்வதையும், அமெரிக்க ஹீரோக்கள் அதைக் காப்பாற்றுவதையும் பார்த்திருப்போம். Geostorm-உம் அதே வகைப் படம்தான்.
சினிமா விமர்சனம்: ஜியோஸ்டார்ம்உலகம் முழுவதும் அதிகரித்துவரும் இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க ஒரு மிகப் பெரிய செயற்கைக்கோள் வலையை “டச் பாய் திட்டம்” என்ற பெயரில் அமெரிக்க, சீன விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்குகிறார்கள். மிகப் பெரிய இயற்கைச் சீற்றங்களை இந்த செயற்கைக் கோள்கள் தடுத்து நிறுத்துகின்றன. அமெரிக்கா இந்த அமைப்பைக் கட்டுப்படுத்தி வருகிறது.
நடிகர்கள் ஜெரால்ட் பட்லர், ஜிம் ஸ்டர்கெஸ், அபி கார்னிஷ், அலெக்ஸாண்ட்ரா மரிய லாரா, ஆண்டி கார்சியா, லெனார்ட் டெக்கம்
கதை டீண் டெல்வின், பால் கியோ
இயக்கம் டீண் டெல்வின்
சில ஆண்டுகள் கழித்து, சர்வதேச சமூகத்தின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பை கொடுக்கவிருக்கும் நிலையில், திடீரென ஆஃப்கானிஸ்தான் பாலைவனத்தில் வெப்பநிலை மிகவும் குளிர்ந்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக ஹாங்காங்கிலும் இதேபோல நடக்கிறது.
ஏன் இந்த விபத்துகள் நடக்கின்றன என்பதை ஆராய, டச் பாயை உருவாக்கிய ஜாக் லாஸனை (ஜெரார்ட் பட்லர்) விண்வெளி ஆய்வு மையத்திற்கு அமெரிக்கா அனுப்புகிறது. எந்திரக் கோளாறாக இருக்கும், சரி செய்துவிடலாம் என்று அங்கு செல்லும் லாஸனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
இதுவரை ஏற்பட்ட விபத்துகள் எல்லாமே சதிவேலைகள் என்றும், பூமியில் மிகப் பெரிய காலநிலை பேரழிவு உருவாகவிருக்கிறது என்பதும் லாஸனுக்குத் தெரிய வருகிறது. இது தெரிந்த பிறகும் ஜாக் லாஸன், பூமியைக் காப்பாற்றாமல் விடுவாரா?
இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஏற்கனவே பார்த்த ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் உணர்வு தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. ஏதோ ஒரு ஆபத்து ஏற்படும்போது, அரசின் மீது கோபித்துக் கொண்டு போய்விட்ட அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்ட திறமையான ஹீரோவை மீண்டும் அழைத்துவந்து அந்த வேலையைக் கொடுக்கும் பணியை எத்தனை ஹாலிவுட், கோலிவுட் படங்களில் பார்த்திருப்போம்? இந்தப் படத்திலும் அதேதான்.
சினிமா விமர்சனம்: ஜியோஸ்டார்ம்டச் பாயை உருவாக்கிய ஜாக் லாஸனை முதலில் வேலையைவிட்டு நீக்கிவிடுகிறார்கள். பிறகு, ஆபத்து ஏற்பட்டவுடன் மீண்டும் அழைத்து வருகிறார்கள்.
அதேபோல, கடல்கள் பொங்கி நகரத்திற்குள் வருவது, பூமியின் சில பகுதிகள் உறைந்துபோவது, சில பகுதிகளில் பெரும் தீ விபத்து ஏற்படுவது என இதற்கு முந்தைய பல ஹாலிவுட் படங்களில் பார்த்த காட்சிகளே இந்தப் படத்திலும் திரும்ப வருகின்றன.
திரைக்கதையிலும் பல சொதப்பல்கள் உண்டு. அமெரிக்க அதிபரின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி, அவருடைய காதலன் கேட்டதும் சர்வசாதாரணமாக அரச ரகசியங்களை எடுத்துக்கொடுக்க சம்மதிக்கிறார். மற்றொரு பக்கம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்தான் வில்லன்.
ஒரு பெரிய பேரழிவை உருவாக்கி அமெரிக்காவை மீட்கப் போவதாகச் சொல்கிறார். இருந்தபோதும் அமெரிக்காவிலும் பல பேரழிவுகளை ஏற்படுத்துகிறார். இம்மாதிரி ஆட்களைச் சுற்றிவைத்துகொண்டிருப்பது, அமெரிக்க அதிபருக்கு Geostormஐவிட பெரிய ஆபத்தாக இருக்கக்கூடும்.
சினிமா விமர்சனம்: ஜியோஸ்டார்ம்படத்தில் வரும் பல பேரழிவுக் காட்சிகள் கொரிய மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட ‘ருத்ரம் 2012′ படக் காட்சிகளைப் போலவே சுமாராக இருக்கின்றன.
பருவநிலை மாற்றத்தால் பூமியில் பேரழிவுகள் நடக்க ஆரம்பித்தால், கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவதைக் குறைப்பது, புவி வெப்பமாதலைத் தடுப்பது போன்றவற்றைத்தானே செய்ய வேண்டும்? அதைவிடுத்து இவ்வளவு பெரிய செயற்கைக்கோள் அமைப்பையா உருவாக்குவார்கள்?
ஹாலிவுட்டின் முந்தையப் பேரழிவு படங்களைப் பார்க்காதவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். மற்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.