‘வரமாட்டேன்’ என்று சொல்லி வந்த கமல், இப்போது ‘கண்டிப்பாக வருவேன்’ என்கிறார். ‘வருவேன்... வருவேன்...’ என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குக் காட்டிக்கொண்டிருந்த ரஜினியும் இம்முறை வந்துவிடுவார் என்றே தெரிகிறது. விஜய் இப்போதைய அரசியல் கள நிலவரத்தையும், தன் சீனியர்களான ரஜினி-கமல் இருவரின் நகர்வுகளையும் கவனித்து வருகிறார். விஷாலோ தனக்கான காலம் கனியும் எனக் காத்திருக்கிறார். ‘இந்த நால்வரும் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்... அரசியலுக்கு வந்தால் கள நிலவரம் அவர்களுக்குக் கைகொடுக்குமா?’ இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதிலிருந்து...
p36c.jpg
ரசிகர்களின் மனநிலையை ரஜினியிடம் தொடர்ந்து பிரதிபலிக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் முதலில் பேசினோம். ‘அரசியலில் தடம்பதிக்க ரஜினிக்குத் தகுதியில்லை’ என்கிறவர்களுக்குப் பதிலாக இருந்தன அவரின் கருத்துகள். ‘‘இப்போது அரசாங்கம் தாலிக்குத் தங்கம் கொடுத்து வருகிறதே, இதற்கெல்லாம் முன்னோடியாக 1981-ம் ஆண்டே காஞ்சிபுரத்தில் நடந்த மூன்று ரசிகர்கள் திருமணங்களுக்குத் தாலிக்கு தலா இரண்டு சவரன் தங்கம் கொடுத்தவர் ரஜினி. அந்த ஒரு கல்யாணத்தோடு நின்றுவிடவில்லை. பவுன் தரும் பணிகள் தொடர்ந்து நடந்தன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு அந்தப் பெயரிலேயே அறக்கட்டளை ஆரம்பித்து மாணவ, மாணவிகளுக்கு எவ்வித சுயவிளம்பரமும் இல்லாமல் கல்விச் செலவுகள் செய்துவருகிறார்.
2005-ல் எங்கள் தலைவர் செய்த உதவி இன்றுவரை உலகத்துக்குத் தெரியவே தெரியாது. ராமேஸ்வரம் மண்டபத்துக்குப் படகில் வந்த இலங்கை அகதிகள் குடும்பங்கள், பசியில் தவிப்பதாக துயரச்செய்தி கிடைத்தது. பாய், தலையணை, உடைகள், குழந்தைகளுக்குப் பால் பவுடர், அரிசி மூட்டைகள், துவரம் பருப்பு என்று மொத்தம் 250 குடும்பங்களுக்கு ஒரு கன்டெய்னர் லாரியில் அனுப்பி வைத்தார். அதுபோலவே வேலூர், புழல் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் இலங்கை அகதிகளின் குடும்பங்களுக்கும் தேடிப்போய் உதவி செய்தார். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் அகதிகளுக்குத் தன்னிச்சையாக உதவக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. இப்போதுகூட எழிலகம் சென்று அங்குள்ள ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால், இந்த வரலாறு புரியும். அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழரா’ என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம்.
p36d.jpg
சென்னையையும், கடலூரையும் வெள்ளம் தாக்கியபோது நிவாரணத் தொகையாக முதல்வரிடம் ஐந்து லட்ச ரூபாய் நிதி கொடுத்ததைக்கூட சிலர் கேலி பேசினார்கள். ஒரு உண்மை தெரியுமா? சென்னையிலிருந்து கடலூருக்கு லாரிகளில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தார். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க வந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தன்னுடைய ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தில் தங்குவதற்கு இடம்கொடுத்தார்.
ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்த காலத்திலேயே ரஜினிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் இருந்தன. ‘தலைவர் அரசியலுக்கு வருவாரோ, மாட்டாரோ’ என்ற சந்தேகத்தில் இடையே தொய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், ஒரேயடியாக நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ‘போருக்குத் தயாராவீர்’ என்று அவர் அறிவித்ததும், நாங்கள் தயாராகிவிட்டோம். அநேகமாக டிசம்பரில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும். அப்போது தமிழகமே ஆவலோடு எதிர்பார்க்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பார் தலைவர்’’ என விரிவாகச் சொன்னார் அவர்.
பினராயி விஜயன், அர்விந்த் கெஜ்ரிவால் சந்திப்புகள், ‘ஆனந்த விகடன்’ தொடர் என கமல்ஹாசன் அரசியல் டேக்ஆஃப் ஆகிவிட்டது. கமல் அரசியலுக்கு வருவது பற்றிப் பேசிய பாரதிராஜா, ‘‘கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுசா கத்துக்கிட்டு வருவான். தாங்க மாட்டீங்க’’ என்றார். இப்போது அதுதான் நடக்கிறது. பல துறை நிபுணர்களைச் சந்தித்துவரும் கமல், தீர்வுகளாக அவர்கள் முன்வைக்கும் விஷயங்களையும் கேட்டறிந்து வருகிறார். தவிர மற்ற கட்சி நண்பர்கள் சிலரையும் கமல் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தன் நற்பணி இயக்க நிர்வாகிகளிடமும் விவாதித்து வருகிறார்.
p36a.jpg
இந்த நிலையில் கமலின் அரசியல் நிலைப்பாடு குறித்து, அவரின் மூத்த சகோதரர் சாருஹாசனிடம் கேட்டோம். ‘‘அரசியலில் வெற்றிபெற ஒரு பொய்யான தெய்வ வழிபாடு தேவை. அந்த வழிபாடு இல்லாதது கமலுக்கு ஒரு குறை. தமிழக மக்கள் பொய்யிலேயே வளர்ந்தவர்கள். உண்மை பேசும் கமல், தேர்தல் அரசியலுக்கு வரும்போது அவரை ஏற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. மக்கள் பொய்யை நம்பா விட்டாலும், அதை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள். ‘மக்கள் வரிப் பணத்தைக் குறைந்தபட்சம் 60 கோடியை யாரெல்லாம் தனதாக்கிக்கொள்ளும் திறமை கொண்டவர்களோ, அவர்களே தமிழகத்தை ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்’ என்பது நம் தமிழ் மக்கள், அரசியல்வாதிகளுக்கு விடுத்துள்ள கட்டளையாகத்தான் கடந்த தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டியுள்ளது.
p36.jpgஇந்தியாவில் இதுவரை எத்தனையோ சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி கண்டுள்ளார்கள்; தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் கமல் அரசியல் பேசுவதுதான் மக்களுக்கு ஏனோ புதிதாக இருக்கிறது. இதுவரை ரஜினி, கமல் என்ற இந்த இரண்டு பெயர்களைத் தவிர வேறு யாரையும் நோக்கி இந்தளவுக்கு ஆச்சர்யக் கேள்விகள் எழுந்ததில்லை. இப்போது எனக்குத் தெரிந்த கேள்வி இது ஒன்றுதான். கமலைப் பார்த்து, ‘ஏன் அரசியலுக்கு வருகிறாய்?’ என்று கேட்பவர்கள், ரஜினியைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்குள் தீர்க்கமாக நுழையவில்லை?’ என்று கேட்காமல் இருப்பதிலேயே அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது’’ என்றார் அவர்.
முதலில் நடிகர் சங்கம், அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்று குறிவைத்து வெற்றிபெற்ற விஷாலின் அடுத்த அரசியல் மூவ் என்ன? விஷால் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலனிடம் கேட்டோம். “எந்த நடிகருக்குத்தான் அரசியல் ஆசை இல்லை? இதில் விஷால் சார் மட்டும் விதிவிலக்கா என்ன? தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகப் போட்டியிட்டு வென்றார். இதுவரை யாரும் தொடுவதற்குப் பயந்த ஃபெப்சி பிரச்னையைத் தைரியமாகக் கையாண்டார். சினிமாவில் ஜெயித்த விஷால் சார், அரசியலிலும் ஜெயிக்கவேண்டும் என்பது தமிழ்நாட்டின் 16 ஆயிரம் ரசிகர் மன்றங்களின் ஆசை. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டது, ஒரத்தநாட்டில் விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் டிராக்டரைப் பறிகொடுத்த விவசாயிக்கு உதவியது என விஷால் சாருக்கு இரக்க குணம் இயல்பிலேயே இருக்கிறது. நிர்வாகத் திறனும் உதவி மனப்பான்மையும் கொண்ட விஷால் சார் அரசியலுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றார்.
எல்லாக் கட்சிகளும் ஒதுங்கி நின்று இவர்களை வேடிக்கை பார்க்கும் நிலைமை வருமோ?!