கோவாவில் இந்து முறைப்படி நடந்த சமந்தா – நாக சைதன்யா திருமணம்
07 Oct,2017
நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் தெலுங்கில் ‘ஏம் மாய சேஸாவே’ என்ற பெயரில் தயாரானபோது அதில் திரிஷா வேடத்தில் சமந்தா நடித்தார். அந்த படத்தில் கதாநாயகனாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
பல வருடங்களாக ரகசியமாக இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. அவர்களும் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாகசைதன்யா இந்து. எனவே திருமணத்தை இந்து, கிறிஸ்தவ முறைப்படி இரண்டு தடவை நடத்த முடிவு செய்தனர்.
ஐதராபாத்தில் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடந்தது. திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். உறவினர்கள் 2 தனி விமானத்தில் கோவா சென்று இருந்தனர்.
நாக சைதன்யா, சமந்தாவின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்து இருந்தனர். நடிகர்-நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நேற்று மாலை 3 மணிக்கு சமந்தாவுக்கு மருதானி சடங்குகள் நடந்தன. நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி புடைவையை நவீன வேலைப்பாடுகளுடன் புதுப்பித்து திருமண புடைவையாக சமந்தா உடுத்தி இருந்தார்.
நள்ளிரவு 11.52 மணிக்கு இந்து முறைப்படி சமந்தா கழுத்தில் நாகசைதன்யா தாலி கட்டினார். உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
கோவாவிலேயே இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். சமந்தாவும் நாகசைதன்யாவும் தேனிலவுக்கு நியூயார்க் செல்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா ஏற்கனவே அறிவித்து உள்ளார்.