ஸ்பைடர் - திரை விமர்சனம்
06 Oct,2017
நடிகர் மகேஷ் பாபு
நடிகை ராகுல் ப்ரீத் சிங்
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு சந்தோஷ் சிவன்
மிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.
ஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு.
இந்த முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கும் மகேஷ்பாபு, பரத்துக்கு பின் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் அறிகிறார்.
இறுதியில் இவர்களை மகேஷ் பாபு என்ன செய்தார்? எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
தெலுங்கில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் 'ஸ்பைடர்' மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்த மகேஷ்பாபு இந்த படத்தில் பொம்மை போன்று இருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த முகபாவனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங், ஒரு போன் கால் மூலம் மகேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பாடல் தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் அவரை பயன்படுத்தி உள்ளனர். கலர்புல்லாக வந்து சென்றிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு இடங்களில் கவுன்டர் வசனங்களால் கவர முயற்சித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இன்னும் இவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கலாம். படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா. மிரட்டலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக நடித்து தேர்ந்த நடிகனாக அடையாளம் காட்டி இருக்கிறார்.
துப்பறியும் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த போலீஸை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வில்லனைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழித்து வருகிறார்கள். அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. இது மாற வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது, லாஜிக் இல்லாத காட்சிகளை அதிகமாக திணிப்பதை தவிர்க்க வேண்டும்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஸ்பைடர்’ மந்தம்.