நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் மணி மண்டபத்தின் திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ளாதது குறித்து அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா: குடும்பத்தினர் அதிருப்தி
சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடை.யாறு பகுதியில் 2.80 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா வரும் அக்டோபர் 1-ஆம் தேதியன்று நடைபெறும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த மணி மண்டபத்தை திறந்துவைப்பார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ பங்குகொள்ளாதது குறித்து தாங்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சிவாஜியின் மணிமண்டபம் என்பது ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் எனவும் அவர் உயிரோடு இருந்திருந்தால், இதில் கலந்துகொண்டிருப்பார் என்றும், தன்னுடைய திரைப்படங்களின் மூலம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு பங்களிப்புச் செய்துள்ள சிவாஜிக்கு இவ்வளவு சிறிய அளவில் விழா நடத்துவது அவரை அவமதிப்பது போலாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக சிவாஜி சமூக நலப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவாஜி கணேசனை அவமதித்துப் பேசிய ஜெயக்குமார் தலைமையில் இந்த மண்டபத்தைத் திறப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு இந்த விழாவில் கலந்துகொள்ள நேரமில்லையெனில் ஒரு மூத்த திரைக்கலைஞரை வைத்து இந்த மண்டபத்தைத் திறந்திருக்கலாம் என்றும், ஏற்கனவே சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த சிலையை அகற்றிவிட்டு, தற்போது மணிமண்டபத்தையும் ஏனோதானோ என்ற நிலையில் திறப்பது ஏற்க முடியாது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமைச்சர்கள் மூலம் இந்த மணிமண்டபத்தைத் திறந்துவைப்பதற்கு தி.மு.கவும் கண்டனம் தெரிவித்துள்ளது. யார் மீதோ உள்ள கோபத்தில் சிவாஜி கணேசனை அவமதிப்பதாக அக்கட்சி கூறியுள்ளது.
முதல்வர் பங்கேற்காவிட்டால், இந்த விழாவை திரையுலகினர் புறக்கணிக்க வேண்டுமென அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.