நான் ஆணையிட்டால்
26 Sep,2017
நடிகர் ராணா டகுபதி
நடிகை காஜல் அகர்வால்
இயக்குனர் தர்மா தேஜா
இசை அனூப் ரூபென்ஸ்
ஓளிப்பதிவு வெங்கட் சி திலீப்
ஜெயிலில் இருக்கும் ராணா, தனது தான் ஜெயிலுக்கு சென்றது எப்படி? தனது வாழ்க்கையில் நடந்நது என்ன என்பதை கூறும்படியாக படம் ஆரம்பமாகிறது. அதன்படி வட்டித் தொழில் செய்து வரும் ராணாவும், காஜல் அகர்வாலும் கணவன், மனைவியாக தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி சில வருடங்கள் கழித்து கர்ப்பமாகும் காஜல் அகர்வால் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அருகில் இருக்கும் கோயில் ஒன்றில் பூஜைக்காக செல்கிறார்.
அப்போது அந்த கோயிலுக்கு வரும் அந்த பகுதி சேர்மேனின் மனைவி, தனக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி காஜல் அகர்வாலின் பூஜை பண்டங்களை தட்டிவிட்டு, காஜல் அகர்வாலையும் கீழே தள்ளி விடுகிறாள். இவ்வாறாக கீழே விழும் காஜலின் வயிற்றில் இருக்கும் கரு கலைந்து விடுகிறது.
கரு கலைந்ததை நினைத்து மிகவும் வருத்தப்படும் ராணா, சேர்மன் தேர்தலில் நின்று வெற்றி பெறுகிறார். இந்நிலையில், தன்னை ஏமாற்றி சேர்மன் தேர்தலில் ராணா வெற்றி பெற்றதாக ராணாவை எதிர்த்து நின்ற சேர்மேன் எம்.எல்.ஏ ஒருவரிடம் புகார் கூறுகிறார். ராணா பதிவி விலகாவிட்டால் ராணாவின் மனைவி விதவையாகி விடுவாள் என்று முன்னாள் சேர்மேன் கூற, அவரை கொன்று விடுகிறார் ராணா.
இந்த கொலை வழக்கில் இருந்து ராணா விடுபட அந்த எம்.எல்.ஏ.வும் பணம் கேட்க, எம்.எல்.ஏ.-வையும் கொன்று விட்டு, ராணாவே எம்.எல்.ஏ. ஆகிறார். இந்நிலையில், சிபாரிசு கேட்டு வரும் ஒருவருக்கு ராணா சிபாரிசு கடிதம் கொடுக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ.வின் சிபாரிசை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூற ராணா அமைச்சராக அவதாரம் எடுக்கிறார்.
இந்நிலையில் அடுத்த இலக்காக முதல்அமைச்சர் பதவியை குறிவைக்கும் ராணாவின் வளர்ச்சி பிடிக்காத எதிர்க்கட்சியினர் ராணாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
அந்த சதியில் ராணா சிக்கிக் கொண்டாரா? முதலமைச்சர் ஆனானரா? ஜெயிலுக்கு ஏன் சென்றார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
வாழ்க்கையை ரசித்து வாழும் ஒரு சாதாரண மனிதனாகவும், தனது நிலையை உயர்த்தி அடுத்தடுத்த நிலைக்கு செல்லும் ஒரு அரசியல்வாதியாகவும் ராணா சிறப்பாக நடித்திருக்கிறார். மனைவி மீது கொண்ட காதலால் தன்னை எதிர்த்து நிற்கும் அனைவரையும் துவம்சம் செய்யும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
காஜல் அகர்வால் ஒரு மனைவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது கணவனுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது. ராணா - காஜல் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. கேத்தரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.
நவ்தீப், அஜய், அசுதோஷ் ராணா, தனிகெல்லா பரணி, ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஜோஷ் ரெட்டி, பூசானி கிருஷ்ண முரளி, பிரதீப் ரவாத், சத்ய பிரகாஷ், சஞ்சய் கபூர் என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே படத்திற்கு வழு சேர்த்திருக்கிறது.
ஒரு சாதாரண மனிதனின் கோபத்தை தூண்டி விட்டால் அவன் எந்த உச்சத்துக்கும் செல்வான் என்பதை உணர்த்தும்படியான படத்தை இயக்கியிருக்கிறார் தேஜா. ராணா, காஜல் இருவருக்கும் இடையேயான காதல், அன்பு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன் என்பதை ஆங்காங்கு நிரூபிக்கும்படி சில காட்சிகளை வைத்திருக்கிறார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சலசலப்புக்கு ஏற்ப சில வசனங்கள் வந்து செல்கிறது.
அனூப் ரூபன்ஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கட் சி.திலீப்பின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.
மொத்தத்தில் `நான் ஆணையிட்டால்' அது நடந்துவிட்டால்.