தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் தெலுங்கு நடிகர்கள்
25 Sep,2017
தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களுடைய தெலுங்கு படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கு, மலையாள பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. விஜய், அஜித்குமார், விக்ரம் சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் படங்களை கேரளாவிலும் ஆந்திராவிலும் நேரடி தமிழ் படங்களாக வெளியிட்டு அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் அவைகள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகின்றன.
இதனால் தற்போது இந்த நடிகர்களின் படங்களை மலையாளம், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதில் அங்குள்ள விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோல் தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடித்து இங்குள்ள மார்க்கெட்டை பிடிக்க தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.
முன்னணி தமிழ் கதாநாயகர்களின் படங்கள் ரூ.100 கோடிகளை தாண்டி வசூல் குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தெலுங்கு நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் படங்களில் தடம்பதிக்க தயாராகி வருகிறார்கள்.
ஏற்கனவே மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் ஆகியோர் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். இதுபோல் நாகார்ஜுனாவும் தமிழில் நடித்துள்ளார். தற்போதுள்ள இளம் கதாநாயகர்களும் தமிழுக்கு வருகிறார்கள். பிரபாஸ்,ராணா நடித்த பாகுபலி முதல் பாகமும் இரண்டாம் பாகமும் தமிழில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
எனவே ராணா புதிதாக நடித்துள்ள தெலுங்கு படத்தையும் தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இருண்டு மொழிகளில் திரைக்கு வர உள்ளது. இதுபோல் ஜூனியர் என்.டி.ஆரும் தமிழ் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.