கங்கனா ரணாவத்துக்கு கரீனா கபூர் கண்டனம்
18 Sep,2017
சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்: கங்கனா ரணாவத்துக்கு கரீனா கபூர் கண்டனம்
சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டிய கங்கனா ரணாவத்துக்கு, நடிகை கரீனா கபூர் கண்டனம் தெரிவித்தார்.
தமிழில் ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ படத்தில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். ‘குயின்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். கங்கனா ரணாவத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்று குறை கூறினார்.
“சினிமா பின்புலம் இல்லாமல் வரும் புதுமுக நடிகர்-நடிகைகளை வளர விடுவது இல்லை. அவர்களை ஓரிரு படத்திலேயே ஒதுக்கி விடுகிறார்கள். அப்பா, அம்மா உள்ளிட்ட உறவினர்கள் சினிமாவில் பிரபலங்களாக இருந்து அவர்கள் உதவியோடு நடிக்க வருபவர்கள்தான் நிலைத்து இருக்க முடிகிறது” என்று அவர் கூறியிருந்தார்.
கங்கனா ரணாவத் கருத்துக்கு பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் கண்டனம் தெரிவித்து அளித்த பேட்டி வருமாறு:-
“வாரிசுகள் என்பது சினிமாவில் மட்டுமல்ல, அரசியல், வியாபாரம் என்று அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள். தந்தை அரசியல்வாதியாக இருந்தால் மகனும் அரசியலுக்கு வந்து தந்தை இடத்தை பிடிக்க விரும்புவது சகஜம். வியாபார குடும்பத்தில் இருந்தும் வாரிசுகள் வருகிறார்கள். அது தவறு இல்லை.
சினிமாவில் வாரிசுகள் இருப்பது மட்டும் கங்கனாவுக்கு தவறாக தெரிகிறது. சினிமாவில் திறமைகள் மட்டுமே முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும் உறவினர்களும் சினிமாவில் இருப்பது அந்த துறையில் அடியெடுத்து வைப்பதற்கு வேண்டுமானால் ஒருவருக்கு உதவலாம்.
ஆனால் திறமையும் சாமர்த்தியமும் இல்லாமல் சினிமாவில் ஒரு நிமிடம் கூட நிலைக்க முடியாது. பெரிய நடிகர்-நடிகைகளின் வாரிசுகள் பலர் திறமை இல்லாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். வாரிசு நடிகராக இருக்கும் ரன்பீர் கபூருக்கு இணையாக எந்த பின்புலமும் இல்லாத ரன்வீர் சிங்கும் வளர்ந்து இருக்கிறார். அதே மாதிரி சினிமா குடும்பத்தில் இருந்து வராத கங்கனா ரணாவத்தும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். சினிமாவில் திறமைக்குத்தான் முதல் இடம்.”
இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.