‘வாட்ஸ்அப்’பில் வலம்வரும் கமல்ஹாசன் அமைச்சரவை போன்ற புகைப்படத்தில் ரசிகர்களின் ருசிகர தேர்வு பலரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
சினிமாவில் நான் பிழைப்புக்காக – பணத்துக்காக நடிக்கிறேன் என்று உண்மையை ஒழிவுமறைவின்றி ஒத்துக் கொண்டார்.
அவர் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை ரசிகர்கள் இப்போதே கற்பனை செய்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த அமைச்சரவை படம்.
முதல்-அமைச்சர் தவிர 13 அமைச்சர்கள். அதில் ஒருவர் பெண் அமைச்சர். முதல்-அமைச்சர் மட்டும் சபாரி உடையில் இருக்கிறார். அமைச்சர்கள் அனைவரும் வேட்டி-சட்டை அணிந்து இருக்கிறார்கள்.
இதில் உள்ள ருசிகரம் என்னவென்றால் எல்லோரும் கமல்ஹாசன் தான். இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம், விஸ்வரூபம், மைக்கேல் மதன காமராசன், ஹேராம், தேவர்மகன், பாபநாசம், பம்மல் கே.சம்பந்தம், சத்யா, நம்மவர், நாயகன், தெனாலி ஆகிய படங்களில் பல்வேறு ‘கெட்-அப்’களில் நடித்ததை தேர்ந்தெடுத்து அமைச்சரவை சகாக்களாக வைத்து இருக்கிறார்கள்.
21 வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘இந்தியன்’ படம் இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கும் ஒத்துப் போகும். சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது மகன் சந்துரு ஆகிய இரட்டை வேடங்களில் கமல் நடித்து இருப்பார்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களை கண்டு மனம் வெதும்பி குற்றம் செய்பவர்களை தியாகி கமல் வர்மக்கலை மூலம் கொல்வார். போலீசார் மோப்பம் பிடித்து நெருங்கியதும் தப்பிச் செல்வார். பெற்ற மகள் இறந்தபோது எடுத்துச் செல்லவும் லஞ்சம் கொடுக்க வேண்டி வரும்.
இதை பார்த்து வெறுத்துப் போகும் சந்துரு பட்டணத்துக்கு சென்று விடுவார். அங்கு மற்றவர்களைப் போல் லஞ்சம் வாங்க ஆரம்பிப் பார். பழுதான பள்ளி வாகனத்துக்கு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுப்பார். அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் உயிர் இழப்பார்கள். ஆனால் போலீசுக்கு லஞ்சம் கொடுத்து சந்துரு தப்பி விடுவார்.
இதனால் ஆத்திரம் அடையும் இந்தியன் தனது மகனையும் கொலை செய்வார்.
நாட்டில் நடைபெறும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்களை பார்த்து பொறுக்க முடியாமலும் தவறு செய்த மகனை கூட கொல்வது போலவும் அமைந்த இந்தியன் ‘கெட்-அப்பை’ முதல்வர் கெட்-அப்பில் வைத்து இருக்கிறார்கள்.
சிறந்த பெண் அமைச்சருக்கு அவ்வை சண்முகி, சாதி வெறியை அடக்குபவராக, பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை அடக்குப வராக, கல்விக்கு பேராசிரியர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு இஸ்லாமியர் கெட்-அப் என்று ஒவ்வொரு துறைக்கும் கமலின் பல்வேறு பட கெட்-அப்களை தேடிப் பிடித்து சேர்த்து இருக்கிறார்கள்.
கமல் அரசியலுக்கு வரப் போகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். கமல் பட பாடல்கள், ‘பஞ்ச்‘ டயலாக்குகளை செல்போனில் ரிங் டோனாக வைத்துள்ளார்கள்.
முக்கியமாக ‘புஞ்சை உண்டு. நஞ்சை உண்டு. பொங்கி வரும் கங்கை உண்டு. பஞ்சம் மட்டும் இன்னும் மாறவில்லை. எங்க பாரதத்தில் சொத்துச் சண்டை தீரவில்லை.
வீதிக்கொரு கட்சி உண்டு. சாதிக்கொரு சங்கம் உண்டு. நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லை. சனம் நிம்மதியா வாழ ஒரு நாளும் இல்லை. இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க யாரும் இல்லை தோழா!
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்தராகம் பாடட்டும். நாளைய காலம் நம்மோடு போராடு”- என்ற பாடலைத்தான் ரிங்டோனாக வைத்திருக்கிறார்கள்.
கேட்கவும், பேசவும் நல்லாத்தான் இருக்கு. இப்படித்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்த காலத்துக்கு ஏற்ற வகையில் பாடியும், உசுப்பேற்றியும்தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியை பிடித்து வந்திருக்கிறது.
ஆனால் காட்சி மட்டும் மாறவில்லை. மக்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் கமலின் வருகை மட்டும் மாற்றத்தை கொடுத்து விடுமா? என்ற சாமானியனின் முணுமுணுப்பையும் புறந்தள்ள முடியவில்லை.