ரஜினி விரும்பினால் கட்சியில் இணைத்துக் கொள்வேன் : கமல்
                  
                     15 Sep,2017
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது ரஜினி விரும்பினால் தனது கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
	 
	சமீபகாலமாக கமல்ஹாசன் தமிழக அரசியலை பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். டுவிட்டர் மூலம் அரசியலுக்கு வந்து விட்டேன் என்றும் கூறியிருந்தார்.
	 
	இதன் மூலம் கமல் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியிருக்கிறார்.
	 
	சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.
	 
	மேலும் ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்றும் கமல் குறிப்பிட்டார்.
	 
	அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்குவதாக கூறியிருந்தார். அக்டோபர் 2-ம் தேதி கமல், அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. கமல் தற்போது பேசியிருப்பதன்மூலம், அந்த செய்தி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.