...........................
80களில் நாம் அடிக்கடி பார்த்த கதைதான். இருந்தாலும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் ஒரு தன்னம்பிக்கை இளைஞனின் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா.
வாழ்க்கையில் போராட்டமும் முயற்சியும் இல்லை என்றால் வெற்றி பெற முடியாது என்று உணர்த்தியுள்ள படம். இன்றைய இளைஞர்களுக்கு எப்படி கொடுத்தால் பிடிக்கும் என்பதை உணர்ந்து படத்தை இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
விவேக், விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் ஆதி. பள்ளிப் படிப்பை முடித்து இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்கிறார். சிறு வயதிலிருந்தே இசையார்வம் அதிகம் உள்ள ஆதிக்கு கல்லூரியில் தனது திறமையை நிரூபிக்க ஆசை. ஆனால், முதலில் அவமானப்படுத்தப்படுகிறார். அதன் பின்தான் அவருடைய திறமை மற்றவர்களுக்குத் தெரிகிறது. கல்லூரியின் உடன் படிக்கும் ஆத்மிகாவைக் காதலிக்கிறார். ஆனால், சாதி வெறி பிடித்த ஆத்மிகா குடும்பத்தினர் காதலுக்கு எதிராக இருக்கிறார்கள்.
இஞ்சினியரிங் முடித்ததும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சண்டை போட்டு, இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என சென்னைக்குப் போகிறார் ஆதி. அவர் அப்பா தந்த ஒரு வருட தவணையில் அவரால் சாதிக்க முடியாமல் மீண்டும் ஊருக்கே செல்கிறார். அந்த சமயத்தில் அவர் இசையமைத்த ஆல்பம் ஒன்று யு டியூபில் ஹிட்டாக, இசையில் சாதிக்கும் வாய்ப்பு மீண்டும் தேடி வருகிறது. இதனிடையே, ஆத்மிகா குடும்பத்தார் ஆத்மிகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் முடிக்க நினைக்கிறார்கள். ஒரு பக்கம் காதல், மறு பக்கம் லட்சியம் என இரண்டுக்கும் நடுவில் ஆதி என்ன முடிவெடுத்தார் என்பதுதான் படத்தின் கதை.
தன்னுடைய சொந்தக் கதையை கொஞ்சம் கற்பனை கலந்து கொடுத்துள்ளதால் ஆதி படத்தில் எங்குமே நடிக்கிறார் என்று தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். அதிலும் கல்லூரியில் படிக்கும் வருடங்களில் அவருடைய நடிப்பு அவ்வளவு யதார்த்தமாக உள்ளது. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஆதி சிறந்த முன்னுதாரணம்.
ஆத்மிகா, எதற்காக இவரை நாயகியாக தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அழகிலும் சரி, நடிப்பிலும் சரி சுமார்தான்.
ஆதிக்கு அடுத்து படத்தில் கவர்பவர் விவேக் தான். இப்படி ஒரு அப்பா கிடைத்தால் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு சாக்லெட் சாப்பிடுவது போல் இருக்கும். மகனைப் புரிந்து கொண்ட அப்பாக்களாலும், அப்பாக்களைப் புரிந்து கொண்ட மகன்களாலும் எளிதில் சாதிக்க முடியும்.
ஆதியின் அம்மா விஜயலட்சுமி, ஆதியின் தம்பி, நண்பர்கள் அனைவரும் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
படத்தில் நிறைய பாடல்கள், இருந்தாலும் அனைத்திலும் ஒரு துடிப்பு இருக்கிறது.
கல்லூரியில் முதல் முறை பாடும் போது அவமானப்படுகிறார் ஆதி. அதன் பின் அவர் கல்லூரியில் மீண்டும் மேடையேறி சாதிக்கும் காட்சி வரவேயில்லையே ஏன் ?. திரைக்கதையில் ஒரு தொடர்ச்சி இல்லாததும் படத்தின் சுவாரசியத்தைக் கொஞ்சம் குறைக்கிறது.
மற்றபடி முதல் படத்திலேயே இயக்குனராகவும், ஹீரோவாகவும் முத்திரை பதித்துவிட்டார் ஆதி.
எந்த நேரத்திலும் விமர்சனம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய்க் கதைகள் வந்து கொண்டுதானிருக்கிறது. அதே பழி வாங்கும் பேய்க் கதை என்பதுதான் நெருடலான விஷயம்.
பேய்ப் படம் என்றாலும் புதிய பரிமாணத்தில் சொல்லப்படும் படங்களே ரசிகர்களைக் கவர்கின்றன. மற்ற வழக்கமான கதை கொண்ட படங்கள் ரசிகர்களைக் கவராமல் போய் விடுகின்றன.
இந்த மாதிரியான படங்களுக்கு நட்சத்திரங்கள் முக்கியமில்லை, அழுத்தமான கதையும், பரபரப்பான திரைக்கதையும் இருந்தாலே போதும். இதில் ‘எந்த நேரத்திலும்’ படம் வழக்கமான கதை கொண்ட பேய்ப் படமாகவே வந்திருக்கிறது.
மலைப் பிரதேச எஸ்டேட் குடும்பத்தைச் சேர்ந்வர்கள் கணவன் மனைவியான யஷ்மித், சான்ட்ரா எமி. எமியின் தம்பி ராமகிருஷ்ணனுக்கு லீமா பாபுவுடன் காதல். ஒரு நாள் தன் காதலியைப் பார்க்க வேண்டுமென அக்கா எமியை அழைக்கிறார் ராமகிருஷ்ணன். லீமாவை தூரத்தில் இருந்து பார்த்தே அதிர்ச்சியாகிறார் எமி. அடுத்த நாள் லீமாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வருகிறார் ராமகிருஷ்ணன். எமி, யஷ்மித், எமியின் அப்பா மூவரும் லீமாவைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார்கள். அந்த அதிர்ச்சியிலேயே வெளியே போகும் போது விபத்தில் யஷ்மித்தும், எமியின் அப்பாவும் மரணமடைகிறார்கள். அதன் பின் எமி, ராமகிருஷ்ணன் கோத்தகிரியில் உள்ள வேறு வீட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு லீமாவைப் போன்றே உருவமுள்ள ஒரு பேய் எமியை பயமுறுத்துகிறது. லீமா போன்ற உருவமுள்ள அந்தப் பேய் யார், அது ஏன் எமியை பயமுறுத்துகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சான்ட்ரா எமி, ராமகிருஷ்ணன் அக்கா தம்பியாக நடித்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் காதலியாக லீமா பாபு, எமியின் கணவராக யஷ்மித். படத்தில் நடிப்பதற்கான வேலை எமிக்கும் லீமாவுக்கும் மட்டுமே இருக்கிறது. அதிலும் இடைவேளைக்குப் பின்தான் இருவருக்கும் அந்த வேலை. ஒருவர் பயமுறுத்தி அலற வைக்கிறார், மற்றவர் பயப்பட்டே அலற வைக்கிறார்.
படத்தின் இசை, ஒளிப்பதிவு, மற்ற தொழில்நுட்பம் அனைத்துமே சராசரியாகவே அமைந்துள்ளது.
எந்த நேரத்திலும் – பார்த்துப் பார்த்துப் பழகிய பேய்ப் படம்.