;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வேண்டும் – விஷால் பேச்சு
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் ‘வேலையிலல்லா விவசாயி’ படத்தின் துவக்க விழாவும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் ஆற்காடு வீராசாமி, கருணாஸ் எம்.எல்.எ, தயாரிப்பாளர் சங்கஙம தலைவவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பண்ணீர் செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குனர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி, நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பட்டியல் சேகர், எஸ்.எஸ்.துரைராஜ், சேதுராமன், செந்தில், திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் விஷால் பேசும் போது,
“இந்தப் படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏன் என்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.
மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவைக் காப்பாற்றுங்கள், ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு கஷ்டப்படுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதைச் சரி செய்ய வேண்டும்.
தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும். இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை, தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும்,” என்றார் விஷால்.
விஐபி 3, விஐபி 4’ தொடர்ந்து வரும் – தனுஷ்
கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தனுஷ், கஜோல், சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தனுஷ்,
“வி.ஐ.பி 1 மற்றும் வி.ஐ.பி 2 பாகம் என இரண்டுமே ஒரு கதாநாயகனையோ, கதாநாயகியையோ மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. தாய்ப் பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். மேலும் வி.ஐ.பி படம் இரண்டாம் பாகத்துடன் முடிவடையாது, மேலும் 3, 4 ஆம் பாகம் என தொடரும். ‘பவர் பாண்டி’ படத்தின் 2ஆம் பாகத்தையும் எதிரிபார்க்கலாம்.
முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தின் கதையம்சம் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட வேண்டியது என்பதால் ஷான் ரோல்டனின் இசையை தேர்ந்தெடுத்தேன். படத் தொகுப்பாளர் பிரசன்னா எனக்கு ‘மாரி, பவர்பாண்டி’ போன்ற படங்களில் மிகச் சிறப்பான பணியை செய்து கொடுத்தார். அவரின் படத்தொகுப்பில் டீசர் மற்றும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வி.ஐ.பி 2 படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி, எனது பிறந்த நாளன்று வெளியாவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது”, என்றார்.
இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில்,
“தனுஷ் எனக்கு ஒரு நல்ல மென்ட்டர், எனக்கு சீனியர். அவருடன் பணியாற்றும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ‘விஐபி’ படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தனுஷ் மற்றும் கஜோல் மேடத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
கஜோல் பேசுகையில்,
“இருபது வருடம் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறேன், வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. இன்றைய சினிமா வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே புதுப் புது விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய சினிமா ஒரு குறிப்பிட்ட மொழி ரசிகர்களை மட்டுமே சென்றடைவதில்லை. எனவே தரமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் நடிப்பேன்,” என்றார்.
நடிகர் சமுத்திரகனி பேசுகையில்
“தம்பி தனுஷூடன் இணைந்து நான் நடித்த ‘விஐபி’ முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்திலும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த அந்த முதல் காட்சியிலேயே நான் பிறவிப் பலனை அடைந்ததாக உணர்கிறேன்,” என்றார்.
மொத்த வசூலையும் விவசாயிகளுக்கு தரப் போகும் ‘தப்பாட்டம்’
மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தப்பாட்டம்’.
தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்,” என்றார்.
இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா
விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரவிருக்கிறது.
முன்னதாக இப்படம் வெளியாகி கிடைக்கும் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.